அறிவுத்தேடல் ஆற்றலுக்கு அடிப்படை
பள்ளியில் படித்து முதல் மதிப்பெண் பெறுவதும்; நீட் தேர்வுக்கு ஆறாம் வகுப்பு முதலே தயார் செய்வதும் மட்டும் கல்வி அல்ல; அறிவுத் தேடலும் அல்ல. மாறாக, அறிவுத் தேடல் ஒரு தொடர் முயற்சி; பல்துறைச் சார்ந்தது.
அறிஞர் அண்ணா அவர்கள், “பக்கோடா’’ பொட்டலத்தை பிரிக்கும்போது கிடைக்கும் செய்தித்தாளின் பகுதியைக்கூட படித்தார். காரணம், அதிலும் அறிய வேண்டிய ஏதோ ஒரு கருத்து இருக்கும் என்பதால். அப்படித் தேடித் தேடிப் படித்ததால்தான் அவர் உலகம் வியக்கும் அறிவாளியாய், பேச்சாளராய் ஆக முடிந்தது.
தேனீக்கள் பல பூக்களில் தொடர்ந்து தேனைத் தேடித்தேடி சேகரிப்பதுபோல, பிஞ்சுப் பருவதிலிருந்தே அறிவைத் தேடித்தேடி சேர்க்க வேண்டும்.
பாடப் புத்தக அறிவு மட்டும் அறிவு ஆற்றலுக்கும், சாதனை படைக்கவும் போதாது. அய்.ஏ.எஸ். போன்ற போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளவும், சமுதாயத்தின் சிக்கல்களை எதிர்கொள்ளவும்; சிறந்த நிர்வாகத் திறனை, ஆளுமை ஆற்றலைப் பெறவும் அறிவியல் உட்பட பல்துறைச் செய்திகளை, சாதனையாளர்களின் வாழ்வை, உலக வரலாற்றைத் தொடர்ந்து தேடித்தேடி படித்தறிய வேண்டும்.
அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள்
இன்றைய அறிவியல் வளர்ச்சியின் பயனாய், தொலைக்காட்சி, செய்தித்தாள்கள், இதழ்கள்வழியும், இணையதள வழியும் ஏராளமான கருத்துகளை எளிதில் அறிய வாய்ப்பு உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன் பல ஆண்டுகள் தேடித்தேடி பெற வேண்டிய செய்திகளை, கருத்துகளை, இன்று ஒரு மணி நேரத்தில் உள்ளங்கையில் உள்ள செல்பேசி வழி பெற்றுவிட முடியும்.
இப்படிப்பட்ட ஊடகங்களில் நல்லவை உள்ள அளவு தீயவையும் உண்டு. தீயனவற்றை விலக்கி நல்லவற்றை நாடித் தேடும் மனக் கட்டுப்பாட்டில் தான் பிஞ்சுகளின் எதிர்காலமே உள்ளது. தவறினால், தடம் புரண்டால் வாழ்வே சீரழியும்; விபத்தும் ஆபத்தும் அவற்றில் உண்டு என்பதை உணர்ந்து எச்சரிக்கையுடன் பிஞ்சுகள் நடந்துகொள்வது கட்டாயமாகும்.
அறிவுத் தேடலில் ஆர்வமும் சுவையும்
அறிவியல், வரலாறு, இலக்கியம், புவியியல், விலங்கியல், தாவரவியல் என்று பலவற்றிலும் எண்ணற்ற சுவையான, வியப்பான, விறுவிறுப்பான தகவல்கள் உண்டு. தேடலில் இறங்கினால் அந்தச் சுவையை நீங்கள் அறிய முடியும். அது ஏன்? இது எப்படி? இதற்கு என்ன காரணம்? என்று அறிய முயன்றால் அறிவும் கூடும், ஆற்றலும் கூடும். எடுத்துக்காட்டாக:
1. குறிஞ்சிப் பூக்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பூக்கிறது. இதன் ரகசியம் என்ன?
பொதுவாக, தாவரங்களின் விதைப் பருவமும், அதன் முளைக்கும் திறனும் ஒவ்வொரு தாவரத்திற்கும் வித்தியாசப்படும். சில தாவரங்களின் விதைகள், மண்ணுக்குள் விழுந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே முளைவிடும். சில தாவரங்கள் ஒரு மாதம் எடுத்துக் கொள்ளும். இப்படி தாவரத்துக்குத் தாவரம் முளைக்கும் திறன் வேறுபடுவதால், குறிஞ்சிப் பூக்களின் விதைகளும் மண்ணுக்குள் விழுந்ததும் அதன் இயல்புப்படி நீண்ட காலத்தை எடுத்துக் கொள்கின்றன.
12 ஆண்டுகள் வரை நீண்டதொரு உறக்கத்தில் இருக்கும் குறிஞ்சி விதைகள் 12ஆவது ஆண்டு திடீரென்று விழித்துக் கொண்டு முளைவிட ஆரம்பிக்கின்றன.
குறிஞ்சிப் பூவிலேயே எட்டு வகையான பூக்கள் உள்ளன. குறிஞ்சிப்பூவின் தாவரவியல் பெயர் ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானா. இதில் நீலக் குறிஞ்சிப் பூக்கள் மட்டுமே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும். 2006ஆம் ஆண்டு கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களில் பூத்துக் குலுங்கின. இனி அடுத்து வரும் 2018இல் குறிஞ்சிப் பூ பூக்கும்.
இந்தப் பூவில் இருந்து எடுக்கப்படும் தேன் மிக மிக அரிதான ஒன்று. மருத்துவ குணம் கொண்ட குறிஞ்சித்தேன் கறுப்பு நிறத்தில் இருக்கும்.
2. சூரியனுக்கும் நம் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தை எப்படி கணக்கிட்டுச் சொல்கிறார்கள்?
ஒளியின் வேகம் விநாடிக்கு 1,80,400 மைல்கள். சூரிய ஒளியானது நம் பூமிக்கு வந்து சேர, எட்டு நிமிடங்கள் பிடிக்கிறது. அதாவது, 480 விநாடிகள். இந்த 480 விநாடிகளை 1,80,400ஆல் பெருக்கினால் வரும் தொகைதான் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம்.
3. நாம் சாப்பிடும் மிட்டாய்களுக்கு ‘பெப்பர்மின்ட்’ என்று பெயர் வரக் காரணம் என்ன?
பெப்பர்மிண்ட் என்பது ஒரு செடியின் பெயர். அதன் இலைகள் கருவேப்பிலையைப் போல் மினுமினுப்பாக இருக்கும். அந்த இலைகளை லேசாய்க் கசக்கினால் போதும், ரம்மியமான ஒரு மணம் காற்றில் பரவும். கூடவே கொஞ்சம் எண்ணெயும் கசியும். இந்த வாசனை எண்ணெயை மிட்டாய் தயாரிப்பாளர்கள் இனிப்போடு கலந்து பெப்பர்மிண்ட் மிட்டாய்களை தயார் செய்கிறார்கள். அதனால் அதற்கு அப்பெயர் வந்தது.
4. அறுவை சிகிச்சைக்குப் பின் தையல்போடும் நூல் எதனால் செய்யப்பட்டது?
செம்மறி ஆட்டின் வலுவான குடல் தடை நார்களில் இருந்து மெல்லிய இழைகளாகப் பிரித்துத் தயாரிக்கப்படுகிறது. ஆட்டின் குடல் பிரியாணி செய்ய மட்டுமல்ல, அறுவை சிகிச்சைக்கும் பயன்படுகிறது.
5. அனகொண்டா பாம்பு இருக்கிறதா?
தென்அமெரிக்காவின் நீர்நிலைகளிலும், சதுப்பு நிலங்களிலும் இது வாழ்கிறது. 30 அடி நீளம் 200 கிலோ எடை கொண்டது. விலங்குகளை விழுங்கி தன் உணவைப் பெறுகிறது. அனகொண்டா பாம்பில் பெண் பாம்புதான் பெரியது. ஆண் பாம்பு அதைவிட 5 மடங்கு சிறியது. அனகொண்டா பாம்புக்கு விஷம் இல்லை. பாம்புகள் முட்டையிட்டு இனம் பெருக்கும். ஆனால், அனகொண்டா குட்டிப்போடும் என்பது அதற்குரிய சிறப்பு.
6. கிளி மட்டும் எப்படிப் பேசுகிறது?
பறவைகள், விலங்குகள் பேசுவதில்லை. ஆனால், கிளி மட்டும் நாம் சொல்வதை அப்படியே திரும்பிச் சொல்லும். கிளிக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாகிறது?
அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கிளிகளின் பேசும் திறன்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். கிளிகள் எவ்வாறு குரலை உள்வாங்கிக் கொள்கின்றன? உள்வாங்கிய குரலையும் வார்த்தைகளையும் எவ்வாறு பின்பற்றி, அதேபோன்று ஒலி எழுப்புகின்றன என்று ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில், கிளிகளின் மூளை மற்றும் உடற்கூறு பிற பறவைகளின் உடற்கூற்றிலிருந்து வேறுபட்டிருப்பது (STRUCTURAL DIFFERENCES) கண்டறியப்பட்டுள்ளது.
கிளியின் மூளையில் உள்ள வரையறுக்கப்பட்ட மையம் (DEFINED CENTERS)
குரல்களை உள்வாங்கிக் கொள்ளும் செயலில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
– சிகரம்