கருந்துளைகள் குறித்த ஆய்வில் இளந்தமிழ் அறிவியலர்
சேலம் சித்தனூரை சேர்ந்தவர் சதீஸ்குமார் சரவணன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் இன்றைக்கு உலக அளவில் முக்கியமான ஆய்வு ஒன்றினைச் செய்து தமிழ்நாட்டின் பெருமையாக எழுந்து நிற்கிறார். ஜெர்மன் நாட்டில் இளநிலை அறிவியலராக (Junior Scientist) இருக்கும் இயற்பியலாளரான சதீஸ்குமார் உள்பட நான்கு பேர் கொண்ட குழுவினர், அய்ன்ஸ்டீன் சொல்லிச்சென்ற முக்கியமான ஒரு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, கருந்துளைகள் (Black Holes) பற்றிய புதியதொரு கருத்தியல் கொள்கையை உருவாக்கி, அறிவியல் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளனர். அதில், சதீஸ்குமாரின் பங்களிப்பு முக்கியமானது. தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் அவருடன் பெரியார் பிஞ்சுக்காக உரையாடினாம்
உங்கள் ஆய்வு எதைப் பற்றியது?
எங்களது ஆராய்ச்சிக்கு அய்ன்ஸ்டீன் கருத்தியல்தான் அடிப்படை. அதை மையமாக வைத்துக்கொண்டு, விண்வெளியில் (SPACE) உள்ள கருந்துளைகளைப் பற்றி சில புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வந்திருக்கிறோம்.
அவற்றில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று, சோலார் மாஸிவ் கருந்துளைகள் (Solar Massive Black Holes). இரண்டாவது, சூப்பர் மாஸிவ் கருந்துளைகள்(Super Massive Holes). இதில் நாங்கள் ஆராய்ச்சி செய்ததெல்லாம் இரண்டாவது வகை பற்றியது.
கருந்துகளைகள், ஈர்ப்பு அலைகள் குறித்த அய்ன்ஸ்டீனின் இந்தக் கோட்பாட்டை பரிசோதனை அடிப்படையில் ஆதாரப்பூர்வமாகவும் நிரூபித்து சாதனை படைத்-தற்குத்-தான் 2017-ம் ஆண்டின் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசும் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, ஈர்ப்பு அலைகள் இருப்பைப் பற்றி மேலும் மூன்று பரிசோதனைகள் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டு உள்ளன.
கருந்துளைகளில் உங்கள் ஆய்வு குறித்து..?
அய்ன்ஸ்டீன் இன்னொரு முக்கிய கோட்பாட்டையும் சொல்லிச் சென்றிருக்கிறார். அதாவது, புதன் கிரகம், சூரியனைச் சுற்றி வரும்-போது, அது ஆரம்பித்த புள்ளியில் இருந்து சற்று முன்னால் சென்று முடியும்; சுற்றுப்பாதையின் ஆரம் (Radius) மாறாமல், சுற்றினை மேற்கொள்ளும் என்கிறார்.
இங்குதான் எங்கள் குழுவினரின் ஆராய்ச்சி முடிவுகள் வேறுபடுகிறது. நாங்கள் சொல்வது கிரகங்-களைப் பற்றியது அல்ல. கருந்துளைகளைப் பற்றி! குறிப்பாக, சூப்பர் மாஸிவ் கருந்துளைகளைப் பற்றியது.
பெரிய கருந்துளையை சிறிய கருந்துளை சுற்றி வரும்போது அதன் சுற்றுப்பாதை எப்படி வேண்டுமானாலும் மாறலாம்; ஆரம் (Radius) உள்பட. சுற்றுப்பாதை, மேலும் கீழுமாகக்கூட (Tilt)
இருக்கலாம் என்று கண்டுபிடித்திருக்கிறோம்.
இந்த கருத்தியல் கோட்பாட்டை, பரிசோதனை அடிப்படையில் நிரூபிக்க வேண்டுமானால்கூட குறைந்தபட்சம் இன்னும் 17 ஆண்டுகள் ஆகும். அதற்கேற்ப, அதிநவீன ஆய்வுக்கூடம் கட்டமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த ஆய்வுக்கூடம் கட்டமைப்பு பணிகள் 2034ல்தான் முடிவடையும்.
உங்கள் ஆய்வை அறிஞர்கள் ஏற்கிறார்களா?
எங்களின் ஆய்வு முடிவை, இயற்பியலாளர்கள் போற்றும் உலகப் புகழ்பெற்ற ஃபிஸிக்ஸ் ரிவியூ (Physics Review D) இதழில் வெளியிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு பிப். 17ம் தேதி எங்களின் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியானது. அதாவது, ஐன்ஸ்டீன் கண்டுபிடித்துச் சொன்ன கொள்கையை அடிப்படையாகக்கொண்டு, 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்களும் கருத்தியல் கோட்பாடுகளுடன் புதிய முடிவுகளை வெளியிட்டுள்ளோம்.
இந்த ஆராய்ச்சிக்கு நான் மட்டும் சொந்தக்காரர் கிடையாது. இத்தாலியைச் சேர்ந்த ஜி. (D’Ambrosi), நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜே.டபிள்யூ. வான் ஹால்டன் (J.W.Van Holten),
ஜே.வான் டி விஸ் (J.Van De Vis) ஆகியோரின் பங்களிப்பும் இருக்கிறது. இந்தக்குழுவில் யாரும் தலைவர், உதவியாளர் கிடையாது. எல்லோருமே சமம்தான்.
உங்கள் பள்ளிப் பருவம், குடும்பப் பின்னணி?
“நான் சிறு வயதில் இருக்கும்போதே அப்பா இறந்து விட்டார். வளர்த்து ஆளாக்கியதெல்லாம் அம்மாதான். எஸ்எஸ்எல்சி வரை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தேன்.
மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ்-2 படிக்கும்போது இயற்பியலில், யூனிவர்ஸ் (பிரபஞ்சம்) பற்றி ஒரு பாடம் வந்தது. அப்போதே அந்தப் பாடத்தின் மீது எனக்குள் ஓர் இனம் புரியாத ஆர்வம் ஏற்பட்டது. அந்த ஆர்வம்தான் என்னை இன்றைக்கு ஓர் ஆராய்ச்சியாளராக உருவாக்கி இருக்கிறது. அதுதான் உண்மை.
கல்லூரி, ஆய்வு?
பி.எஸ்ஸி., இயற்பியலை திருச்சியிலும், எம்.எஸ்ஸி., படிப்பை டெல்லி பல்கலையிலும் முடித்தேன். நெதர்லாந்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற லைடன் பல்கலையில் இயற்பியலில் (தியரிட்டிகல் ஃபிஸிக்ஸ்) பிஹெச்.டி முடித்தேன்.
நெதர்லாந்து லைடன் பல்கலையில் (Leiden University) இருந்தபோது, சூப்பர் மாஸிவ் கருந்துளைகள் பற்றிய ஆராய்ச்சியை நானும், எங்கள் குழுவும் கடந்த 2013ம் ஆண்டு தொடங்கி 2016ம் ஆண்டு முடித்தோம். என் வளர்ச்சிக்கு என்.டி.ஹரிதாஸ், பேராசிரியர் ஜே.டபிள்யூ. வான் ஹால்டன் போன்றோரின் வழிகாட்டுதல் முக்கியமானது
எப்போதும் ஆய்வு தானா?
ஓர் ஆராய்ச்சியாளர் என்றாலே எப்போதும் ஆராய்ச்சி மனநிலையிலேயே இருப்பார்கள் என பலரும் கருதுகிறார்கள். உண்மையில் அப்படி அல்ல. அப்படி இருப்பதால் பயனேதும் இல்லை. எனக்கான ஓய்வு நேரங்களில், நான் துப்பாக்கி சுடும் பயிற்சிக்குச் சென்று விடுவேன். அதில் தேர்ச்சி பெற்று சான்றிதழும் பெற்றிருக்கிறேன். அதேபோல் நெதர்லாந்தில் ஆராய்ச்சித்-துறைக்கும் மக்களுக்கும் உள்ள இடை-வெளியைக் குறைக்க அவ்வப்போது பொதுவெளியில் ஆராய்ச்சிகள் பற்றி பேசுவோம். பள்ளிக் குழந்தை-களிடமும் உரையாடி இருக்கிறேன்,
இப்போது நான் இயற்பியலாளர்-தான். ஆனால், வாய்ப்பு கிடைத்தால் விண்வெளி வீரராகும் ஆசையும் உண்டு.
இன்னும் பல வெற்றிகள் சதீஷ் சரவணனுக்காகக் காத்திருக்கின்றன. அவர் தொடர்ந்து வெற்றிபெற நம் பெரியார் பிஞ்சுகளின் வாழ்த்துகளையும் அவருக்குத் தெரிவித்தி ருக்கிறோம். நம் பிஞ்சுகளிலும் இப்படி அறிவியலர்கள் தொடர்ந்து உருவாக சதீஷ் அண்ணா முன்னோடிகள் அல்லவா?
-இளையராஜா சுப்பிரமணியம்