கலசமில்லாக் கோபுரம்
ஆற்றங்கரை மேட்டினிலே
அமைந்திருக்கும் கோபுரம்!
ஆடும்கரு நாகம் சென்று
அடைந்திருக்கும் கோபுரம்!
நாற்புறமும் மாடமில்லா
நடைதிறவாக் கோபுரம்!
நாடிச்சென்று மாடப்புறா
நாளும்தங்காக் கோபுரம்!
நேற்றுமின்றும் நாளையென்றும்
நிலைத்திருக்கும் கோபுரம்!
நிமிர்ந்துபார்க்கத் தேவையில்லா
நெஞ்சுயரக் கோபுரம்!
ஏற்றுகின்ற தீபமின்றி
இருண்டிருக்கும் கோபுரம்!
இறைவனென்ற பேரில்சிலை
எதுவுமில்லாக் கோபுரம்!
போற்றிச்சிலர் மடமையினால்
போய்வணங்கும் கோபுரம்!
பூவுடனே பொட்டும்வைத்துப்
பூசைசெய்யும் கோபுரம்!
காற்றுமழை வாட்டும்வெயில்
கசிந்தொழுகாக் கோபுரம்!
கலசமின்றிக் காட்சிதரும்
‘கரையான்புற்று’க் கோபுரம்!
– தளவை இளங்குமரன்
திருநெல்வேலி