அறிவியல் சிறுகதை – பிரபஞ்சம் பிறந்த கதை!
வகுப்பில் “டாய்… டூய்ய்’’னு ஒரே சத்தம்.
அறிவியல் ஆசிரியர் பார்த்திபன் உள்ளே நுழைந்ததும் அனைவரும் ‘கப்… சிப்’ன்னு அவரவர் இடங்களில் போய் அமர்ந்து கொண்டனர்.
வருகைப் பதிவேடு எடுத்து முடிந்ததும் வகுப்பைத் தொடங்கினார் பார்த்திபன்.
“பசங்களா… நாம இன்னைக்கு எதைப்பற்றி படிக்கப்போறோமுன்னு தெரியுமா?’’ என்று புதிர்போட்டார்.
ஆங்காங்கே இருந்த சலசலப்புக் கூட இந்த கேள்விக்குப் பின்னர் அமைதியானது.
“எதைப்பற்றி படிக்கப் போறோம் சார்’’ என்று ஆர்வம் பொங்க ஒரு மாணவன் கேட்டான். இதே ஆர்வம் குறையாமல் அனைவரின் முகத்திலும் தென்பட்டது.
இப்படி விறுவிறுப்போடு பாடத்தைத் தொடங்குவதே பார்த்திபன் வழக்கம்.
“இந்தக் கட்டடம் எப்படி உருவாச்சுன்னு உங்கள்ல யாருக்காவது தெரியுமா?’’ என்றார்.
“இதுகூடத் தெரியாதா சார் _ செங்கல், மணல், மண், ஜல்லி இப்படி பல கலவைகளக் கொண்டு கட்டி உருவாக்குவாங்க சார்’’ என்றான் ஒரு மாணவன்.
“வெரிகுட்’’ எனப் பாராட்டிய ஆசிரியர், “சரி. இந்த பூமி எப்படி உருவாச்சு தெரியுமா?’’ என்று அடுத்த புதிரைத் தொடுத்தார்.
“பூமியா?’’ என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“தெரியாது சார்’’ என்றார்கள் ஒருமித்த குரலில்.
மாணவர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தி பதில்கூற ஆரம்பித்தார் பார்த்திபன்.
“கிட்டத்தட்ட 14 பில்லியன் (ஒரு பில்லயன்னா 100 கோடி) ஆண்டுகளுக்கு முன்னாடி ஒரு எலுமிச்சம்பழம் மாதிரி இருந்த ஒரு பொருள் வெடிச்சது. அதுல இருந்து எலெக்ட்ரான், புரோட்டான், நியுட்ரான் என்ற 3 உட்பொருட்களை கொண்ட அணு உருவானது. அந்த அணுக்களின் சேர்க்கைதான் பூமி, சூரியன், நட்சத்திரம் இப்படிப் பல கோள்களாக உருப்பெற்றன.”
மாணவர்கள் அனைவரும் புருவங்கள் உயர கேட்டுக் கொண்டிருந்தனர்.
“இந்தப் பிரபஞ்சத்தில கோடிக்கணக்கான பால்வெளி மண்டலங்கள் குவாஸ்ஸர்கள், வால் நட்சத்திரங்கள் இப்படி பல அதிசயமான பொருட்கள் நிறைந்துள்ளன.’’
“பூமியைப் பத்தி பார்த்தோம். இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானது தெரியுமா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார்.
“பிரபஞ்சமா? அதையும் நீங்களே சொல்லிருங்க சார்’’ என்றனர் மாணவர்கள்.
“இந்தப் பிரபஞ்சம் உருவானதைப்பற்றி மூன்று விதமான கோட்பாடுகள் இருக்கு. அது என்னென்னா… பெருவெடிப்பு கோட்பாடு, நிலைப்புக் கோட்பாடு, துடிப்புக் கோட்பாடு’’ ஆகிய மூன்றும்தான்.
“சரி நாம இப்ப பெருவெடிப்பு கோட்பாடுன்னா என்னன்னு பார்ப்போமா?’’ என்று மாணவர்களின் ஆர்வத்தைக் குறையாமல் பார்த்துக் கொண்டார் பார்த்திபன்.
“பெரு வெடிப்புக் கோட்பாடுன்னா பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னாடி அடர்த்தி நிறைந்த ஓர் பொருள் வெடித்ததன் மூலம் ஏற்பட்ட அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு இணைவின் விளைவாக அணுக்களும், வாயுக்களும், பின் திடப்பொருட்களும் உருவானதாகச் சொல்லப்படுவதே பெரு வெடிப்புக் கோட்பாடு’’ என்று முடித்தார்.
ஆசிரியர் சொல்வதைக் கேட்டுக் கொண்டே கற்பனை செய்தவர்கள் மீண்டும் வகுப்பிற்குள் வந்தனர். மாணவர்களின் முகங்கள் அவர்கள் அடுத்த கோட்பாட்டை கேட்பதற்கு ஆர்வமாக இருப்பதைக் காட்டியது.
பத்து நிமிடம் மாணவர்களை சிந்திக்க விட்ட ஆசிரியர் அடுத்து இரண்டாவது கோட்பாட்டிற்குள் நுழைந்தார்.
“பசங்களா இரண்டாவது கோட்பாடு என்ன?’’ என்று கேட்டு முடிப்பதற்குள், “நிலைப்புக் கோட்பாடு’’ என்ற பதில் செவிகளைக் கிழித்தது. மாணவர்களை அந்த வகுப்பிற்குள் தக்கவைத்துக் கொண்ட ஆசிரியர் இரண்டாவது கோட்பாட்டை விளக்கினார்.
“இந்தப் பிரபஞ்சம் இப்போது எப்படி இருக்கிறதோ அப்படியே இதற்கு முன்னரும் இருந்தது, இனிமேலும் இப்படியேதான் இருக்கும். எந்தவித மாற்றமும் இந்த பிரபஞ்சத்தில் ஏற்படாது என்பதே நிலைப்புக் கோட்பாடு’’ என்றார்.
இரண்டாவது கோட்பாட்டை முடித்தவுடன் மாணவர்கள் தங்களுக்குள் பேசத் தொடங்கினர். ஆசிரியர் பார்த்திபனும் கண்டு கொள்ளவில்லை. மாணவர்கள் தங்கள் மொழியில் பேசி அவர்களுக்குள் இருக்கும் சிறு சிறு சந்தேகங்களை தீர்த்துக் கொள்வர் என்பது ஆசிரியரின் கணிப்பு.
சில வினாடிகளுக்குப் பிறகு மீண்டும் வகுப்பைத் தன்பக்கம் திருப்பினார் ஆசிரியர்.
“அடுத்த எத்தனாவது கோட்பாடு?’’ என்றார்.
“மூன்றாவது கோட்பாடு சார்’’ என்றனர் கோரசாக…
“அது என்ன?’’ என்று அவர்களிடமிருந்தே பதிலைக் கறந்தார்.
“துடிப்புக் கோட்பாடு’’ என்றனர் மீண்டும் கோரசாக.
மாணவர்களின் ஆர்வத்தை துளியும் குறைவிடாத ஆசிரியர் மூன்றாவது கோட்பாட்டை விளக்கினார்.
“துடிப்புக் கோட்பாடுன்னா… விரிவடைந்து கொண்டே செல்லும் இந்தப் பிரபஞ்சம், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு சுருங்கத் தொடங்கும். அப்படி ஒரு எல்லைவரை சுருங்கியபின் மீண்டும் விரிவடையத் தொடங்கும். இதுவரையில் மேற்கொண்ட ஆய்வின்படி பிரபஞ்சம் விரிவடைவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தார்களேத் தவிர, சுருங்குவதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் நிகழ்ந்தாலும் நிகழலாம்’’ என்றார்.
இதையெல்லாம் கேட்ட மாணவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். ஏதோ உருண்டை வடிவமாக பூமி இருக்கும் என்று அறிந்த அவர்களுக்கு இந்தத் தகவல்கள் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
“என்ன பசங்களா… இந்தப் பூமி, பிரபஞ்சம் எப்படி உருவாகியிருக்குன்னு தெரிஞ்சுகிட்டீங்களா?’’ என்றார்.
“ஆமாம் சார். இதுவரைக்கும் பூமின்னா வெறும் மண்ணாத்தான் பார்த்தோம் சார், இப்பத்தான் இதற்குள்ள இத்தனை அதிசயம் இருக்கிறது புரிந்தது சார்’’ என்றான் ஒரு மாணவன்.
“இன்னும் ஏராளமா இருக்கு… அதையெல்லாம் வருங்கால அறிவியல் அறிஞர்களான நீங்கதான் கண்டுபிடிக்கணும்” என்று ஆசிரியர் பார்த்திபன் கூறி முடிக்கவும் அதனுடன் பள்ளி மணி ஒலியும் சேர்ந்து கொள்கிறது. ஆசிரியர் விடைபெற மாணவர்கள் அடுத்த வகுப்பிற்குத் தயாராகினர்.
– உமையவன்