சாதனைப் பிஞ்சு – தேசிய சதுரங்கப் போட்டியில் வென்ற பெரியார் பிஞ்சு
இந்தியப் பள்ளிகளுக்கு இடையேயான 63ஆவது தேசியச் சதுரங்கப் போட்டிகள் கடந்த மாதம் 10.11.2017 முதல் 14.11.2017 வரை அய்ந்து நாட்கள் தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் நடைபெற்றது.
இப்போட்டியில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் சதுரங்க வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 19 வயதிற்கு உட்பட்ட மாணவியர்களைப் போட்டியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பாகப் போட்டியிட்ட குடியாத்தம் நேஷனல் மேல்நிலைப்பள்ளி மாணவி பெரியார் பிஞ்சு ச.செந்தமிழ் யாழினி பங்கு பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
இவருடன் தமிழ்நாடு அணியில் இடம் பெற்றிருந்த சென்னையைச் சேர்ந்த சி.எம்.என்.சம்யுக்தா, கே.கிருத்திகா, ஏ.ஹர்சினி, திருச்சியைச் சேர்ந்த கே.வைசாலி ஆகியோரும் தங்கப் பதக்கம் வென்றனர். தாங்கள் விளையாடிய போட்டிகளில் 12க்கு 11 என்ற வெற்றிப் புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து, ஹரியானா, குஜராத், கேரளா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களின் போட்டியாளர்களை வீழ்த்தினர்.
தங்கப் பதக்கத்தை உறுதி செய்வதாக அமைந்த போட்டியில் தமிழ்நாடு அணியும் மகாராஷ்டிரா அணியும் ஒன்றரைப் புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தது. தன்னைவிட உலக மதிப்பீட்டில் உயர்விடத்தில் இருந்த மகாராஷ்டிரா வீராங்கணையைக் கருப்பு நிறக் காய்களுடன் விளையாடிய ச.செந்தமிழ் யாழினி ஙிணிழிளிழிமி சிபிணிஷிஷி ளிறிணிழிமிழிநி ஆட்ட நுட்பத்தைப் பயன்படுத்தி அதிரடியாக வீழ்த்தினார். இதனால் கடந்த ஆண்டு தங்கப் பதக்கம் வென்ற மகாராஷ்டிரா தமிழகத்திடம் இந்த ஆண்டு தங்கப் பதக்கத்தை இழக்க நேர்ந்தது.
அது மட்டுமின்றி 2013இல் வெள்ளிப் பதக்கம், 2015இல் தங்கப் பதக்கம், 2016இல் வெள்ளிப் பதக்கம் இந்த ஆண்டு தங்கப் பதக்கம் என்று மொத்தம் நான்கு பதக்கங்கள் பெற்று தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளார் பெரியார் பிஞ்சு ச.செந்தமிழ் யாழினி! அவருக்கு பெரியார் பிஞ்சு இதழின் வாழ்த்துகள்!
– சி.செந்தமிழ் சரவணன், குடியாத்தம்