மழைவில்….
– விழியன்
மழை கொட்டித் தீர்த்தது. குடிசைக்குள் இருந்த பாட்டி எந்த கவலையும் இல்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். வாசல் கதவில் ‘டொக் டொக் டொக்’ என சத்தம். பாட்டிக்கு என்று யாருமே இல்லை. அவள் தோட்டம், அவளுடைய வீட்டுப் பிராணிகள், கொஞ்சம் மரங்கள், ஒரு கிணறு அவ்வளவுதான். சொந்தக்காரர்கள் யாரும் நடு இரவில் வரமாட்டார்களே! விளக்கினை ஏற்றினார். இடைவிடாமல் ‘டொக் டொக் டொக்’ என கதவு தட்டப்பட்டது. ‘வரேன் வரேன்’ எனச் சொல்லிக் கொண்டே கதவைத் திறந்தார். யாரையும் காணவில்லை. ஆனால் யாரோ நுழைந்தது போலத்தான் இருந்தது. சுற்றிலும் பார்த்துவிட்டு கதவை மூடிவிட்டு படுப்பதற்கு வந்தார்.
குடிசைக்குள் அழுகுரல் கேட்டது. இன்னும் இன்னும் அந்தச் சத்தம் அதிகமானது. விளக்கின் பிரகாசத்தை அதிகரித்தார். குடிசையின் ஓரத்தில் அதனைப் பார்த்தார். ஆமாம், அங்கே சுருண்டு அமர்ந்து கொண்டிருந்தது வானவில்தான். ஏழு வண்ண வானவில். வானத்தை அழகாக்கும் வானவில். வானவில்லை அடையாளம் கண்டு கொண்டு “என்ன வானவில், என்ன அழுகை?” என்றார் பாட்டி. ஏதோ பக்கத்து வீட்டு பாட்டியிடம் பேசுவது போலக் கேட்டார். அதன் அழுகைக்கான கதையை வானவில் சொல்ல ஆரம்பித்தது. நல்லவேளை மழை நின்றிருந்ததால் பாட்டிக்கு வானவில் சொன்னது கேட்டது.
“மரம் ஒன்றின் மேல் ஒய்யாரமாக படுத்துக் கொண்டு மழையை ரசித்தபடி உறங்கிக் கொண்டிருந்தேன். கடும் மழையால் மரக்கிளை உடைந்துவிட்டது. ‘தமால்’ என விழுந்ததில் ஒரு முள் செடியில் விழுந்துவிட்டேன். சில இடத்தில் பலத்த காயம். கிழிந்துவிட்டது. நாளை காலை கடலுக்குப் பின்புறம் இருந்து பேருரு எடுத்து குழந்தைகளை மகிழ்விக்க வேண்டும். ஆனால் நான் கிழிந்து இருக்கிறேன் பாட்டீ” என அழ ஆரம்பித்தது.
“அழாதே! அழாதே! நான் என்னன்னு பார்க்கிறேன்” என வானவில்லை விரித்தார். நான்கு வண்ணங்கள் கிழிந்து இருந்தன. சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் பச்சை நிறங்கள் தான் அவை நீலக்குடும்ப நிறங்கள் நீலம், கருநீலம் மற்றும் ஊதா நிறங்களுக்கு பிரச்சினை எதுவும் இல்லை. “இரு நான் ஊசி வைத்து தைக்கிறேன்” என ஊசியையும் நூலினையும் தேடினார். பழைய நாள்காட்டியில் இருந்த ஊசியை எடுத்து வெள்ளை நூலினை எடுத்தார்.
“பாட்டீ, வெள்ளை நிறத்தை வைத்து தைக்கக் கூடாது. இயற்கையான வண்ணங்களை வைத்துதான் தைக்க வேண்டும். நான்கு வண்ணங்களையும் எடுத்து வந்து வெள்ளை நூலின் மீது தேய்த்து தனித்தனியாக தைக்கவேண்டும் பாட்டீ” என்றது வானவில்.
ஆமாம் அது சொல்வதும் சரிதான். சரி, அந்த வண்ணங்களுக்கு பாட்டி எங்கே செல்வாள். வீட்டிற்குள் அந்த நிறங்களைத் தேடினார். கிடைக்கவில்லை. மழை நின்று இருந்ததால் கதவைத் திறந்து வாசலுக்கு வந்தார். அங்கே திண்ணையில் அமர்ந்தார். உதவி என்று வந்த வானவில்லுக்கு எப்படி உதவுவது என ஆழ்ந்த யோசனையில் இருந்தார். பாட்டியின் வருத்தத்தைப் பார்த்த தோட்ட மலர் ஒன்று, “என்ன வருத்தம் பாட்டிம்மா?” என்று கேட்டது.
பாட்டி நடந்ததை விளக்கினார். உடனே அவ்வளவுதானே, “இதோ என் மஞ்சள் நிறத்தை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றது. அந்தப் பூவை தாங்கியிருந்த செடி உடனே, “இதோ என் பச்சை நிறத்தை எடுத்துக்கோங்க பாட்டி” என்றது. அற்புதம்! இரண்டு நிறங்கள் கிடைத்துவிட்டன. பாட்டி உள்ளே சென்று அந்த வண்ணங்களை நூலில் தேய்த்து இரண்டு இடங்களில் தைத்தாள்.
“பாட்டி, சிவப்பும் ஆரஞ்சு நிறமும் வேண்டும். சூரியன் வெளியே வருவதற்குள் தைக்க வேண்டும் பாட்டி” என ஏங்கியது வானவில். “பொறு பொறு” வெளியே வந்தாள் பாட்டி. எங்கு தேடியும் சிவப்பும் ஆரஞ்சும் கிடைக்கவில்லை. தோட்டத்தில் இருந்த ரோஜாவின் நிறம் தான் ஓரளவிற்கு அருகில் வந்தது. ஆனால், வானவில் ஒத்துக்கொள்ளவில்லை. உலகத்தினர் குழம்பிவிடுவார்கள் என்றது.
“இதோ இன்னும் சில நிமிடங்களில் விடிந்துவிடும்” என கதற ஆரம்பித்தது வானவில். “கொக் கொக்” என சத்தம். தன் காலைப் பணியை செய்யத் தயாரானது கூடைக்குள் இருந்த சேவல். பாட்டி கூடையத் திறந்ததும் “கொக் கொக் கொக்” என சத்தமிட்டபடி கூவ வெளியே வந்தது. அடடே சிவப்பு. கொண்டைச் சேவலின் கொண்டை சிவப்பு நிறம். சிவப்பு நிறமும் தயார். ஆனால் ஆரஞ்சு???
“பாட்டி ஏதாவது செய்யுங்க” என்றது வானவில் உள்ளிருந்து. இரவில் இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த பல்லி ஒன்று, “அட பாட்டி அந்த பூவில் இருக்கும் மஞ்சளையும் சேவல் கொண்டையில் இருக்கும் சிவப்பையும் சேரு, ஆரஞ்சு நிறம் வந்துவிடும்.” அட ஆமாம். ஒரே நிமிடத்தில் பாட்டி சுறுசுறுப்பாக சிவப்பையும் ஆரஞ்சு நிறத்தையும் வானவில்லில் சரி செய்தார். முழுமை அடைந்த அடுத்த நொடி சக்கெனக் கிளம்பியது வானவில். பாட்டியின் குடிசையை ஏழு முறை வட்டமடித்தது. வானத்தில் பறந்து சூரியனுக்கு எதிர் திசையில் இருந்த மலைக்கு பின்னால் எழுந்து அழகிய காட்சி அளித்தது. அன்று வழக்கத்தை விடவும் ரம்மியமாகக் காட்சி அளித்தது.
காலையில் அந்த ஊரே பாட்டியின் குடிசைக்கு முன்னர் கூடியது. வானவில் நிறத்தில் இருக்கும் குடிசைன்னா சும்மாவா? அதுவும் இளந்தூறலுடன்.<