திருக்குறள்
குன்றின் விளக்காய் இருந்திடலாமே
குறளை தினமும் படித்தாலே – நல்ல
குணங்கள் வளரும் படித்தாலே!
கோபுரம் போலே உயர்ந்து நிற்பாய்
குறளின் படியே நடந்தாலே – தீய
குணங்கள் மறையும் அதனாலே!
இரண்டு அடியில் இனிய கருத்தை
எடுத்துச் சொன்ன நூலது – வாழ்வு
செழிக்கும் சுவைமுப் பாலது!
இருண்ட வாழ்வில் விளக்கை ஏற்றும்
இன்றே குறளைப் படித்திடு – பேச்சில்
எவர்தான் வரினும் வென்றிடு!
கல்வி ஒன்றே உயர்ந்தோ ராக்கும்
கருத்தை உயர்வாய்ச் சொல்லுது – அதனைக்
கற்றோர் வாழ்க்கை வெல்லுது!
செல்வம் அதிலே சிறந்த செல்வம்
செவியில் கேட்டல் என்றுதான் – நம்
¨செந்நாப் போதார் சொன்னது!
– செந்நாப் போதார் _ திருவள்ளுவரைப் போற்றும் புகழ்ச் சொற்களில் ஒன்று.
தெய்வப் புலவர், பொய்யில் புலவர், முதற்பாவலர், பெருநாவலர், நாயனார் போன்ற இன்னும் பல புகழ்ச் சொற்களும் உண்டு.
– அருப்புக்கோட்டை செல்வம்