முயற்சி தந்த வளர்ச்சி
யாரென்று தெரிகிறதா?
முயற்சி தந்த வளர்ச்சி
செல்சீ வெர்னர் (CHELSEA WERNER)
– சரவணா இராஜேந்திரன்
‘டவுன் சின்ரோம்’ என்பது மூளை வளர்ச்சி தொடர்பான ஒரு பிறவிக் குறைபாடு ஆகும். இந்த பிறவிக் குறைபாட்டோடு பிறப்பவர்களை ஆறாம் அறிவின்றி பிறப்பவர்கள் என்று ஒரு சாரார் கூறுவார்கள். இப்படி அவர்களை அழைப்பது குற்றம் என்று அய்க்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.
இந்த ‘டவுன் சின்ரோம்’ வந்தவர்களை நாம் அன்றாடம் சந்தித்திருக்கிறோம். பேசாநிலை, என்ன செய்கிறோம் என்பதை அவர்களே அறியாத் தன்மை, சிறிய தலை, எந்நேரமும் எச்சில் ஒழுகும் தோற்றம் போன்றவை இந்த மன வளர்ச்சி குன்றியவர்களின் அறிகுறி.
மன வளர்ச்சி குன்றியவர்கள் வாழ்க்கை கடினமானதாகும். அதாவது இவர்கள் வாழ்நாள் முழுவதுமே என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் வாழ்ந்து முடிப்பார்கள். இவர்கள் 30 முதல் 45 ஆண்டுகள் வரை வாழ்வார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த செல்சீ வெர்னர் இந்த நோய்க் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த செல்சீயின் தாயார் ஓர் ஆசிரியர். செலிசா தன்னுடைய 2 வயது வரை நடக்க முடியாமல் இருந்தார். இவருக்கு 8 வயதானபோது வீட்டில் ஒலிம்பிக் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் ஜிம்னாஸ்டிக் எனப்படும் உடலியக்கம் சார் விளையாட்டை செலிசா மிகவும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். இதைக் கவனித்த அவரது தாயார் அவளின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஜிம்னாஸ்டிக் குறித்த படங்களை அவருக்கு பார்க்கக் கொடுத்தார். அதே நேரத்தில் தொலைக்காட்சியில் ஜிம்னாஸ்டிக் குறித்த காட்சிகளை அடிக்கடி அவருக்குக் காண்பிக்கத் துவங்கினார்.
இதனையடுத்து அவருக்கு வீட்டிலேயே ஜிம்னாஸ்டிக் குறித்த சிறிய பயிற்சிகளை கொடுக்கத் தயாரானார். வியப்பூட்டும் விதமாக அவர் தாயின் ஜிம்னாஸ்டிக் குறித்த பயிற்சியை ஆர்வத்துடன் கற்க ஆரம்பித்தார். பொதுவாக இந்தப் பிறவிக் குறைபாடுடையவர்கள் ஒருமுறை ஒன்றைக் கூறினால் மறுமுறை அதை மறந்துவிடுவார்கள். ஆனால், செலிசா நினைவில் வைத்துக்கொள்ள மெல்ல மெல்ல பழகினார். அவருக்குத் தனியாக ஒரு ஜிம்னாஸ்டிக் கற்றுத்தரும் பயிற்சியாளரை நியமிக்க முடிவு செய்தார்.
அது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. பயிற்சியாளராக வருபவர்கள் செலிசாவைப் பார்த்ததுமே எந்த ஒரு பதிலும் கூறாமல் சென்று விடுவார்கள். இதனை அடுத்து அவரது தாயே ஜிம்னாஸ்டிக் குறித்த பல நுணுக்கங்களை கற்றுக் கொண்டு அதை செலிசாவிற்கு கற்றுத்தர ஆரம்பித்தார்.
தன்னுடைய 15ஆவது வயதில் முதல்முதலாக பொதுவான ஒரு ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்து கொண்டு அனைவரும் வியக்கும் அளவில் திறமையாக ஜிம்னாஸ்டிக் நுணுக்கங்களை காட்டி போட்டியில் அதிக புள்ளிகளைப் பெற்றார்.
அதன்பிறகு இவருக்கு அமெரிக்காவின் பல ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர்கள் பயிற்சி கொடுக்க முன்வந்தனர். இத்தாலியில் நடந்த மனநோய் தொடர்பானவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றார்.
22 வயதாகும் செல்சீ தற்போது ஸ்னூக்கர், பேஸ்பால் உள்ளிட்ட பல விளையாட்டுகளில் ஆர்வம் காட்டிவருகிறார். ‘ஹஃப்பிங்டன் போஸ்ட்’ என்ற இதழுக்கு அளித்த பேட்டியில், “என்னை இந்த உலகம் இன்னும் ஒரு மனநோயாளி யாகத்தான் பார்க்கிறது. ஆனால் நான் அந்த நோயை வென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது. என்னைப்பற்றி மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஒரு நாள் நான் பொதுப்பிரிவு ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு அமெரிக்காவிற்காக தங்கப்பதக்கம் வாங்கும் நாள் தூரமில்லை” என்று கூறினார்.
முயற்சியும் ஊக்கமும் அதற்கான ஒத்துழைப்பும் எவரையும் உயர்த்தும் என்பதற்கு செல்சீ ஒரு சான்று.