தந்தை பெரியாரின் கதை – 10
பெரியார் தந்த வரம்
மலேசியா நாட்டில் சிலர் பெரியாரை சாமியார் என்று நினைத்து விட்டனர். பெரியாரின் தோற்றமும் அப்படித்தான் இருந்தது.
சுற்றிலும் மக்கள், எளிய உடை, வயதான தோற்றம், கையில் தடி. எளிமையான உடை பெரியாரை சாமியாராகக் காட்டியது. சிலர் அவர் காலில் விழுந்து வணங்கினர். அவரிடம் வரம் கேட்டு நின்றனர். இது நல்ல வேடிக்கை தானே?
ஒரு கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி இது. பொதுக்கூட்டம் முடிந்து பெரியாரும் நண்பர்களும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரு அம்மா வந்தார். கூடவே அந்த அம்மாவுடைய 20 வயது மகளும் வந்திருந்தாள்.
“இந்தியாவிலிருந்து வந்திருக்கும் சாமியார் எங்கே?” என்று கேட்டுத் தேடினார். நண்பர்கள் பெரியாரைக் காட்டினர். உடனே அந்த அம்மா பெரியாரின் காலில் விழுந்து வணங்கினார்.
“சுவாமி, நான் பத்து மைல் தொலைவிலிருந்து வருகிறேன். என் மகளுக்கு குழந்தை இல்லை, அவளுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று வரம் தாருங்கள்” என்று கேட்டார்.
எல்லோரும் சிரித்தனர். பெரியாரும் சிரித்தார். “அம்மா, நான் சாமியாரில்லை. வெறும் ஆசாமிதான். எனக்கே பிள்ளை இல்லை. (மனைவியைக் காட்டி) நம்பாவிட்டால் இந்த அம்மாவைக் கேட்டுப் பார். பிள்ளையில்லாவிட்டால் என்ன? நன்றாக சம்பாதியுங்கள். சாப்பிடுங்கள். சேமித்து வையுங்கள்” என்று பெரியார் கூறினார்.
அந்த அம்மா விடவில்லை. “இந்த ஏழை மீது இரக்கம் வையுங்கள்” என்று பரிதாபமாகக் கெஞ்சினார். உடனே பெரியாரும் “சரி, உன் மகளுக்கு ஆண் குழந்தை பிறக்கும், சுகமாக இருங்கள்” என்று சொன்னார். அந்த அம்மா திருப்தியுடன் சென்றார். பெரியாரை நண்பர்கள் நன்றாகக் கேலி செய்தனர்.
பெரியாரின் ஏக்கம்
1931ஆம் ஆண்டில் பெரியார் எகிப்து, கிரீஸ், துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அந்நாடுகளில் உள்ள அரசியல் இயக்கங்கள், கொள்கைகள், மக்களின் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை நேரில் தெரிந்துகொண்டார்.
ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட். அங்கு அவர் பல நாள் தங்கினார். அங்குள்ள மக்களின் செயல்களைக் கூர்ந்து கவனித்தார்.
பெரியார் ஒரு ஓட்டல் அறையில் தங்கி இருந்தார். அப்போது ஒரு வேலைக்காரப் பெண் அறையைச் சுத்தம் செய்ய வந்தார். அந்த அம்மையார் தரையை சுத்தம் செய்யும்போதே, கையில் வைத்திருந்த பத்திரிகையையும் படித்தார். அந்தப் பத்திரிகையின் பெயர் ‘அவ்ரா’. ‘அவ்ரா’ என்றால் ‘காலம்’ என்று அர்த்தம்.
பணிப்பெண்ணின் செயல் பெரியாரைக் கவர்ந்தது. வெளிநாட்டில் பணிப் பெண்ணுக்குக் கூட இருக்கும் படிக்கும் ஆர்வத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.
பெரியார் மனதில் ஏக்கம் தோன்றியது. நம் நாட்டில் தெருவுக்குத் தெரு கோயில்தான் உள்ளது. தெருவுக்குத் தெரு நூலகம் இருக்க வேண்டும். அப்போதுதான் பொது அறிவு வளரும், நாடு முன்னேறும் என்று நினைத்தார்.
பெரியாரின் ஏக்கம் இன்னும் ஏக்கமாகத்தான் உள்ளது. கோயிலுக்குத் தான் பெண்கள் அதிகமாகப் போகிறார்கள். பெண்கள் நூலகங்களுக்குப் போக வேண்டும். நிறையப் புத்தகங்கள் படிக்க வேண்டுமென்பது பெரியாரின் ஆசை.
– சுகுமாரன்