அமுக்குப் பேய் கொள்ளிவாய்ப் பேய்…
அமுக்குப் பேய் தூக்கத்தில் அமுக்கும்?
நாம் உறங்கும்போது திடீரென நம்மை யாரோ அமுக்கிப் பிடிப்பது போலவும், நம்மால் புரள முடியாமல், பேச முடியாமல் தவிப்பது போலவும் ஒரு நிலை வரும். இது எல்லோருக்கும் எப்போதாவது ஒரு முறை வரும். எனக்கும் இதுபோன்ற அனுபவம் சிலமுறை வந்ததுண்டு.
இவ்வாறு வருவது பேய் அமுக்குவது என்று பலரால் நம்பப்படுகிறது. “அமுக்குப் பேய்” என்று அதற்குப் பெயர் வைத்து விடுகிறார்கள். இது முற்றிலும் தவறு.
நம் உடலில் சில நேரங்களில் இரத்த ஓட்டம் திடீரெனத் தடைப்படும்போது தற்காலிகமாக அப்படியொரு நிலை ஏற்படும்.
சற்று நேரத்தில் உடல் பழைய நிலைக்கு வந்துவிடும். இதுதான் உண்மையான காரணம். மற்றபடி அமுக்குப் பேய் என்பதெல்லாம் அசல் மூடநம்பிக்கையாகும்.
கொள்ளிவாய்ப் பேய் உண்டா?
மரம் அடர்ந்த பகுதிகளில், இருட்டு வேளைகளில் நெருப்புப் போல தெரிவதைக் கொள்ளிவாய்ப் பேய் என்று கூறுவார்கள். இதுவும் தவறு ஆகும்.
சில மரங்களில் பாசிப் படிவது போல சில உயிரினங்கள் படியும். அவை இரவு வேளையில் நெருப்புப் போல பளபளக்கும். அதைத்தான் இவ்வாறு சொல்லுகிறார்கள். நெருங்கிச் சென்று பார்த்தால்தானே உண்மை தெரியும். இவர்கள் பயத்தால் நெருங்குவதேயில்லை!
மின்மினிப் பூச்சி, சில வகை ஊர்வன இயற்கையிலே நெருப்பைப் போல மின்னக் கூடியவை. இதைப் போல சிறு சிறு பூச்சி வகை மரத்தில் அடர்த்தியாகப் படிவதால் ஏற்படும் ஒளிர்வுதான் நெருப்புப் போல நமக்குத் தெரிவது. மற்றபடி கொள்ளிவாய்ப் பேய் என்பது தவறு; மடமை.
கண் துடிப்பால் நன்மை வரும், தீமை வரும்?
சில நேரங்களில் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி கண் துடிக்கும். ஆணுக்கு இடது கண் துடித்தால் கேடு வரும். பெண்ணுக்கு வலது கண் துடித்தால் கேடு வரும் என்று நம்புகின்றனர்.
அதேபோல் ஆண் உடலின் இடதுபுறம் துடித்தால் கேடு, பெண்ணுக்கு வலதுபுறம் துடித்தால் கேடு என்ற நம்பிக்கையும் உள்ளது. இவ்வாறு எண்ணுவதும், நம்புவதும் தவறாகும்.
எதிர்காலத்தில் வரப் போவதை எந்தவொரு சகுனமும் உணர்த்த முடியாது. அவ்வாறு உணர்த்துவதாக நம்புவது மூடநம்பிக்கையே ஆகும்.
வைட்டமின் மற்றும் கால்சியம் குறைகின்றபோதே இவ்வாறு துடிப்பு ஏற்படுகிறது. எனவே, உடலில் சத்துக் குறைவாக உள்ளது என்பதை உணர்ந்து அதற்கேற்பச் சத்தான உணவுகளை உண்ண வேண்டுமேத் தவிர, கேடு வரும் என்று ஆராய்ந்து கொண்டும், அஞ்சிக் கொண்டும் இருப்பது மடமையாகும்.
(விளக்கம் வளரும்)