சின்னக்க்ண்ணு! கப்பரேக்கர் எண்ணு!
-ஹுவாமை
“ஏங்கண்ணு, கப்ரேக்கர் தெரியுமா?”
“எங்கண்ணுக்கெல்லாம் கப்ரேக்கர் தெரியுமா?”
“ஆஹா! அப்படியில்ல கண்ணு… சரி, சரி இந்தக் கண்ணே! மணியேயெல்லாம் வேண்டாம். போகட்டும் கப்ரேக்கர் எண்ணு தெரியுமா?”
“கண்ணு தெரிஞ்சாதானே எண்ணு தெரியறதுக்கு”
“ஸ்… அப்பப்பா… இப்பவே கண்ணக் கட்டுதே!”
“சரி, நேரா விசயத்துக்கு வந்துடறேன். இது ஒரு விளையாட்டு! எண் விளையாட்டு! அந்த விளையாட்டுக்கு பெயர்… ம்… சரி இப்போ வேண்டாம். வி¬ளாட்டுலே முதலில் நான்கு இலக்க எண் ஒன்றினை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலேயே பெரிய எண், சிறிய எண் என்று பிரித்துக் கொள்ளவேண்டும். அதில் பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழிக்க வேண்டும். இப்படி பெரிய, சிறிய எண்களாகப் பிரித்து, பெரியதிலிருந்து சிறியதைக் கழித்தால் எந்த நான்கு இலக்க எண்களுக்கும் ஒரேயொரு விடைதான் வரும்!”
“என்ன?! ஒரே விடையா?”
“ஆம்! ஒரே எண்தான். அதுவொரு மேஜிக் எண்! அந்த மேஜிக் எண்தான் 6174”
“அதெப்படி? எந்த எண்ணைப் பயன்படுத்தினாலும் இந்த மேஜிக் எண் வரும்?”
“வருகிறதா? இல்லையா? பார்த்துடலாமா?”
“பாத்துடலாம்! பாத்துடலாம்! கொஞ்சம் விவரமாச் சொல்லுங்க!”
“இந்த கணிதவியல் விளையாட்டுக்கு ஒரேயொரு கட்டுப்பாடு மட்டும் உண்டு. முதலில் அதைச் சொல்லிடறேன். அதாவது, ஒற்றை எண்களான 1111, 2222 ஆகியவை வரக்கூடாது.”
“ஏன் வரக்கூடாது?”
“அதுதான் சட்டம். எந்த விளையாட்டுகாவது ரூல்ஸ் இல்லாம விளையாடறமா? இல்லைதானே? அதுமாதிரி தான். இப்படிப்பட்ட எண்களை தேர்வு செய்தால் மேஜிக் எண்ணான 6174 வராது. அவ்வளவுதான்!”
“சரி, மேஜிக் எண்ணான 6174 என்ற எண்ணையே தேர்வு செய்தால்?”
“ஓ… மேஜிக் எண்ணைத் தேர்வு செய்தாலும் அந்த மேஜிக் எண்ணே தானாக வந்துவிடும்.”
“சரி, சரி ஓவர் பில்டப்பா இருக்கு. முதலில் ஒரு டெமோ குடுங்க.”
“அடேயப்பா… சரி ஒரு நோட்டும், பேனாவும் எடுத்துக்குங்க. எடுத்துக்கிட்டீங்களா? முதலில் உங்களுக்குப் பி¢டித்த நான்கு இலக்கு எண் ஒன்றை எழுதிக் கொள்ளுங்கள். எழுதியாயிற்றா? அந்த நான்கு எண்களிலும் சிறிதிலிருந்து பெரிது என்று ஏறுவரிசையில் எழுதுங்கள்… ஒரு புதிய நான்கு இலக்க எண் கிடைக்கும். பிறகு பெரிதிலிருந்து சிறிது என்று இறங்குவரிசையில் எண்ணில் ஏறுவரிசையில் எழுதினால், இன்னொரு நான்கு இலக்க எண் கிடைக்கும்.
இப்போ எடுத்துக் காட்டுக்கு 8796 என்ற நான்கு இலக்க எண்ணை எடுத்துக்கொண்டால், இதில் இறங்கு வரிசையில் எழுதினால் கிடைக்கும் எண் 9876, ஏறுவரிசையில் எழுதினால் கிடைக்கும் எண் 6789. சரிதானே! நீங்களும் ஒருமுறை நீங்கள் எழுதியதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். அடுத்தது, இவ்விரண்டு நான்கு இலக்க எண்களில் பெரிய எண்ணில் இருந்து சிறிய எண்ணை கழிக்க வேண்டும். அதாவது, பெரிய எண்ணான 9876இல், சிறிய எண்ணான 6789 அய்க் கழித்தால், 9876-6789=3087.”
“முதலில் வருகிற விடை 3087. நல்லா கவனிங்க. இந்த எண்ணை மீண்டும் பெரியது சிறியதாகப் பிரிக்க வேண்டும். பெரிய எண்: 8730, சிறிய எண்: 0378. கழித்தால் இதன் வித்தியாசம் 8352.”
“இரண்டாவதாக வருகிற விடை 8352. இதையும் அதேபோல செய்தால், பெரிய எண்: 8532. சிறிய எண்: 2358. கழித்தால் இதன் வித்தியாசம் 6174. ஹேய்… வந்துவிட்டது மேஜிக் எண்! நீங்களும் இதை விளையாடிப்பாருங்கள். அந்த மேஜிக்கை அனுபவியுங்கள்.”
“சில எண்களுக்கு ஒரே முறையிலும், சில எண்களுக்கு நான்காவது முறையிலும்கூட வரும். ஆனால் நிச்சயம் இந்த மேஜிக் எண் வந்தேதீரும்.”
சிறிதுநேரம் கனத்த மவுனம். திடீரென்று “ஹேய்…“ என்ற கூச்சலால் திடுக்கிட்டு போய் என்னவென்று கேட்பதற்குள், ஒரு கேள்வி வில்லில் இருந்து புறப்பட்ட அம்புபோல பறந்து வந்தது.
“ஆமா, கப்ரேக்கர்ன்னு சொன்னீங்களே! அது என்னன்னு இன்னும் சொல்லவேயில்லையே-?”
“சரியாப்போச்சு போங்க! தத்தராய இராமச்சந்திர கப்ரேக்கர்னு (ஞிணீttணீtலீக்ஷீமீஹ்ணீ ஸிணீனீநீலீணீஸீபீக்ஷீணீ ரிணீஜீக்ஷீமீளீணீக்ஷீ) இந்திய கணிதவியலாளர் ஒருவர் 50 ஆண்டுகளுக்கு மேலேயே கணிதவியலில், எண்ணியல் துறையில் ஆய்வுகள் பல செய்தவர். இவரது பல ஆய்வுகள் ‘எண்ணியல் விளையாட்டு வித்தைகளாக’ இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது…” என்று முடிப்பதற்குள், “எங்களைப்போல சின்னப் பசங்களுக்கு நான்கு இலக்கம் கொஞ்சம் ஓவராத் தெரியலே?” என்று பதில் வந்தது.
“அப்படியா… சரி, ஒரு இலக்கத்தைக் குறைச்சுக்கங்களேன். இது மூன்று இலக்க மேஜிக் எண்! அந்த எண் 495. ஓக்கேவா?”
“அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம். இந்த எண் கணிதவியலைக் கண்டுபிடித்தது கப்ரேக்கர்! அதனால இதற்கு கப்ரேக்கர் எண்ணுன்னு பேரு. இதைச் சொல்லத்தானே தொடக்கத்தில் அசடு வழிஞ்சீங்க?”
“க.க.க.போ…”