திறமை
உயர்ந்த பனைமரம்.
அதன் ஓலை நுனியில் கூடுகட்டிக் கொண்டிருந்தது ஒரு தூக்கணாங்குருவி.
தன் சின்ன அலகால் ஓலையின் ஓரத்திலிருந்து இழை எடுத்து பின்னல் வேலைப்பாடுடன் கூட்டை அமைத்துக் கொண்டிருந்தது. இதைப் பக்கத்து மரத்தில் இருந்து வியந்து பார்த்தது ஒரு குயில்.
சட்டெனப் பறந்து தூக்கணாங்குருவியின் அருகில் சென்றது. “இப்படி அழகாகக் கூடு கட்டுகிறாயே யாருக்கு?’’ என்று கேட்டது குயில்.
“நான் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க, எனக்காகக் கட்டும் கூடு இது. அதனால்தான், பார்த்துப் பார்த்து பாதுகாப்பாய் கட்டுகிறேன்’’ என்றது தூக்கணாங்குருவி.
‘இதுபோல் ஒரு அழகான கூட்டை தன்னால் கட்ட முடியாதே’ என வருத்தத்துடன் அழுதபடி திரும்பியது குயில்.
அங்கிருந்த காகம் குயிலைப் பார்த்து “ஏன் அழுகிறாய்?’’ என்றது.
“அதோ அந்தத் தூக்கணாங்-குருவி கட்டுவது போல் எனக்குக் கூடு கட்டத் தெரியாது. இவ்வளவு நாள் வாழ்ந்து என்ன பலன். இதுகூடத் தெரியாமல் இருந்து விட்டேனே’’ என்று புலம்பியது குயில்.
“உனக்குக் கூடு கட்டத் தெரியாது. உண்மைதான். ஆனால், உன்னைப் போல் தூக்கணாங்குருவிக்கு இனிமையாகக் கூவத் தெரியாதே! அது கட்டிய கூட்டில் அதுதான் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
நீ பாடும் பாட்டில் இந்த ஊரே மகிழ்ச்சி அடையுமே… உனக்குள் இருக்கும் உன் திறமையை நீ உணர்ந்து கொள்! அதைப் பார்த்து அதுபோல் இருக்க முடியவில்லையே என்று வருந்தாதே!’’ என உணர்த்தியது காகம். அதை உணர்ந்த குயில் பாடிப் பறந்தது. பாடலைக் கேட்டக் காகம் சொன்னது…
“குருவியின் கூடோ தனியுடைமை…!
குயிலின் பாட்டோ பொதுவுடைமை!’’
– மு.கலைவாணன்