தந்தை பெரியாரின் கதை – 11
– சுகுமாரன்
பெரியாரின் பாதை
பெரியாரின் பாதை சமூகச் சீர்திருத்தம் மட்டும்தான். விவசாயிகள், தொழிலாளிகளின் பொருளாதார முன்னேற்றம் பற்றி பெரியாருக்கு அக்கறை இல்லை என்று சிலர் நினைத்தனர்.
அவர்கள் கருத்தைப் பொய்யாக்கும் விதத்தில் பெரியார் ‘ஈரோட்டுத் திட்டம்’ என்ற பெயரில் சுயமரியாதை சமதர்மக் கொள்கை அறிக்கையை வெளியிட்டார். அதன்மூலம் பெரியாரின் பாதை எல்லோருக்கும் புரிந்தது.
விவசாயிகள், தொழிலாளிகள் வாழ்வில் முன்னேற வழிவகுத்த கொள்கை சமதர்மமாகும். ரஷிய நாட்டில் லெனின் சமதர்மத்தை ஏற்படுத்தினார். பெரியார் ரஷிய நாட்டில் மூன்று மாதம் சுற்றுப் பயணம் செய்தார். சமதர்மக் கொள்கையை அறிந்து திரும்பினார்.
தமிழ்நாட்டில் சமதர்மக் கொள்கையுடைய தோழர் ம.சிங்காரவேலு, தோழர் ப.ஜீவானந்தம் ஆகியோர் தொடர்பு பெரியாருக்குக் கிடைத்தது.
இவர்கள் மூவரும் சேர்ந்து தமிழ்நாட்டில் சமதர்மக் கொள்கையைப் பிரச்சாரம் செய்தனர்.
ஈரோட்டுத் திட்டம் விவசாயிகளைப் பாதுகாக்க வழிகூறியது. அநியாய வட்டியைக் கண்டித்தது. பொதுநலத் திட்டங்களை ஆதரித்தது. கல்வியை வளர்க்கக் கூறியது. தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்த வேண்டியது.
பெரியாரின் இத்திட்டத்தை காந்தியடிகள் ஏற்கவில்லை.
பெரியார் தொடர்ந்து சமதர்மக் கொள்கையைப் பரப்பினார். ‘குடிஅரசு’ பத்திரிகையில் இக்கொள்கையை ஆதரித்துக் கட்டுரைகள் வெளியிட்டார்.
ஆங்கிலேய அரசாங்கம் சமதர்மக் கொள்கை பரவுவதை விரும்பவில்லை. ஒரு கட்டத்தில் தந்தை பெரியரைக் கைது செய்து குடிஅரசு ஏட்டை பறிமுதல் செய்தது எனவே, பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கையை விளக்கி அறிக்கை வெளியிட்டார். அதில் பொருளியலில் சமதர்மமே தனது கொள்கை என்று குறிப்பிட்டார்.
==================
பெரியாரின் மேன்மை
1933ஆம் ஆண்டு.
பெரியாரின் மனைவி நாகம்மையாருக்கு தீராத நோய் ஏற்பட்டது. ஈரோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பெரியார் இரவும் பகலும் அருகில் இருந்து கவனித்தார்.
இச்சமயம் திருப்பத்தூரில் சுயமரியாதை இயக்க மாநாடு நடந்தது. அதில் கலந்துகொள்ள பெரியார் புறப்பட்டார்.
நாகம்மையாரின் உடல்நிலை மிக மோசமாக இருந்தது. எல்லோரும் பெரியாரைப் போக வேண்டாம் என்று தடுத்தனர். பெரியார் கேட்கவில்லை. மாநாட்டில் கலந்துகொண்டார்.
நாகம்மையார் இறந்த மறுநாள் திருச்சியில் ஒரு திருமணத்தை நடத்திவைக்க வேண்டிய பொறுப்பு பெரியாருக்கு இருந்தது. அந்நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள தடை போடப்பட்டிருந்தது.
பெரியார், மனைவியின் உடல் அடக்கத்தை விரைந்து முடித்தார். உடனடியாக திருச்சிக்குக் கிளம்பினார். தடையுத்தரவை மீறி பெரியார் திருமணத்தை நடத்தி வைத்தார். கைது செய்யப்பட்டார்.
இன்னொரு சமயம் பெரியார் தன்னுடைய அம்மா இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் சுற்றுப் பிரயாணம் போய்விட்டார். பெரியாரைத் தேடி அலைந்து, 130 மைல்களுக்கு அப்பாலிருந்த அவரைக் கண்டுபிடித்து அழைத்து வந்தனர்.
இவ்வாறு பெரியார் தன் குடும்பத்தைவிட கொள்கைப் பணிக்கே முக்கியத்துவம் கொடுத்தார்.
இதுதான் பெரியாரின் மேன்மை.<