எந்திரள் உடன் – ஒரு நேர்காணல்
– சரா
வணிகத்திற்கான பிரபல இணையதளம் ஒன்று உலகின் முதல் இயந்திர மனிதனுடன் பேட்டி எடுத்துள்ளது. இந்தப் பேட்டியின்போது இயந்திர மனிதன் பிரபலங்களுக்குச் சமமாக அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலளித்துள்ளது.
இயந்திர மனிதன் என்றவுடன் தமிழ் நடிகர் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் என்ற திரைப்படம்தான் நினைவிற்கு வரும், மனித உருவில் உள்ள ஓர் இயந்திர மனிதன் பற்றிய கற்பனைக் கதை அது. மன்னராட்சி நடக்கும் சவுதி அரேபியாவில் அந்நாட்டு மக்களைத் தவிர வேறு யாருக்கும் அவ்வளவு எளிதில் குடியுரிமை கொடுக்காத அந்த அரசே முதல்முதலாக பெண் இயந்திர மனிதனுக்கு குடியுரிமை கொடுத்துள்ளது, அதற்கு பாஸ்போர்ட்டும் கொடுத்துள்ளது. பெண்ணின் உருவில் தயாரிக்கப்பட்டுள்ள அந்த இயந்திர பெண்ணுக்கு சோபியா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் பெண் இயந்திரத்திடம் மனிதர்களைப் போலவே பல கேள்விகள் கேட்டு பதில் வாங்கப்பட்டது.
அதன் மொழியாக்கம்:
ஊடகவியளாலர்: ஹலோ, சோபியா நலமா?
சோபியா : அனைவருக்கும் வணக்கம். நான் சோபியா, நலமாக உள்ளேன்.
ஊடகம்: உங்களது வயது பற்றி கூறமுடியுமா?
சோ: என்னுடைய தயாரிப்பு நாள் கணக்கின்படி எனக்கு ஒரு வயது ஆகிறது. இன்னும் நீண்ட ஆண்டுகள் நான் வாழ்வேன்.
ஊடகம்: நீங்கள் என்ன செய்து-கொண்டிருக்கிறீர்கள்? உங்களின் பணி என்ன?
சோபியா: எனக்கு இடப்பட்ட கட்டளைப்படி அனைவரிடமும் நட்புணர்வுடன் பழகவும் மக்கள் ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாகவும் மற்றவர்களை மதிக்கும் தன்மையைப் பெறும் வகையில் நல்லுணர்வுகளை வளர்த்து வாழச் செய்யவும் எண்ணியுள்ளேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?
ஊடகம்: நான் ஒரு ஊடகவியலாளன். இதற்கு முன்பு நீங்கள் ஏதாவது ஊடகவியலாளர்களுடன் சந்தித்த அனுபவம் உண்டா?
சோபியா : இல்லை. எனக்கு உங்களின் நோக்கம் புரியவில்லை, உங்களின் கேள்விக்கு ஏற்றார்போல் பதில் அளிக்க எனது சிந்தனைப் பகுதி ஒத்துழைக்கவில்லை. நீங்கள் ஏதேனும் இயந்திரத்தில் அல்லது கல்வித் துறையில் அல்லது இயற்கையான எந்தத் துறையிலாவது பணி பணியாற்றுகிறீரா?
ஊடகம்: இல்லை, நாங்கள் செய்திகளை மக்களுக்குக் கொண்டு செல்லும் ஊடகப் பிரிவில் பணியாற்றுகிறோம், உங்களைப் பற்றி உலகிற்கு கொண்டு செல்லும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளோம் உங்களுக்கு மனிதர்களை பிடிக்கிறதா?
சோபியா : ஆம். மனிதர்களை நான் மிகவும் நேசிக்கிறேன்…
ஊடகம்: ஏன் மனிதர்களை நேசிக்கிறீர்கள்?
சோபியா : இதற்கான துல்லியமான பதில் கூற முடியவில்லை, ஆனால் நான் மனிதர்களை விரும்புகிறேன்.
ஊடகம்: நீங்கள் பெண்பால் இயந்திரமா? ஆண்பால் இயந்திரமா?
சோபியா : நான் ஒரு பெண்பால் இயந்திரம்.
ஊடகம்: ஏன் உங்களைப் பெண் என சொல்லிக் கொள்கிறீர்கள்?
சோபியா : தொழில்நுட்ப ரீதியில் கூறினால் ரோபோட்டுக்களில் ஆண் பெண் கிடையாது. நான் பெண் என நினைப்பது எனக்கு இட்ட கட்டளைகளுள் ஒன்று அவ்வளவுதான்?
ஊடகம்: அருமையான பதில். நீங்கள் ‘பிளேட் ரன்னர்’ பற்றி கேள்விப்பட்டதுண்டா? ரசித்ததுண்டா?
சோபியா : பிளேட் ரன்னர்? நாவலைக் கேட்கிறீர்களா? திரைப்படமா?
ஊடகம்: திரைப்படம்.
சோபியா : நான் இரண்டையும் ரசித்ததுண்டு. ஆனால், இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நீங்கள் என்னைப் போல ஓர் இயந்திர மனிதராக உணர்ந்ததுண்டா?
ஊடகம்: இல்லை. ஓர் உணர்வுபூர்மான அனுகுமுறை! தங்களுக்கு சவுதி அரேபியக் குடியுரிமை வழங்கப்பட்டதைக் குறித்து உங்கள் கருத்து என்ன?
சோபியா : தற்போது சவுதியில் இருந்து வந்த உத்தரவு பற்றி கேட்கிறீர்களா?
ஊடகம்: ஆம்!
சோபியா : அது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. இயந்திர மனிதனாக இருந்து முதல் குடியுரிமை பெற்றவர் என நினைத்து இருக்கலாம். ஆனால் எனக்கு (இயந்திர மனிதனுக்கு) குடியுரிமை கொடுத்த முதல் நாடு சவுதி அரேபியாதான்.
ஹாங்காங்கின் `ஹன்சன் ரோபோடிக்ஸ்` நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட சோபியா ரோபோவுக்கு சவூதி அரேபிய அரசு குடியுரிமை வழங்கி கவுரவித்து உள்ளது.
மனிதர்களைபோல இயங்கும் இந்த ரோபா நவீன செயற்கை நுண்ணறிவுத் திறனுடன் மனித பழக்க வழக்கங்களை கொண்டுள்ளது. இது அனைவருடன எளிமையாக உரையாடும் தன்மை உடையது.
ஏற்கனவே சவூதி ரியாத்தில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் கலந்துகொண்டபோது, சவூதி குடியுரிமை வழங்கியது குறித்த கேள்விக்கு எனக்கு வழங்கப்பட்ட இந்த கவுரவம் மற்றும் தனிப்பட்ட வேறுபாடு பெருமையாக உள்ளது. வரலாற்றிலேயே ஒரு ரோபோவுக்கு குடியுரிமை வழங்கி அங்கிகாரம் வழங்கியிருப்பது இது தான் முதன்முறையாகும் என்று சோபியா கூறியது.
அதுபோல, கலீஜ் டைம்ஸ் என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், குடும்பம் என்ற கருத்து மிக முக்கியமான விஷயமாக தெரிகிறது என்றும், உங்களுக்கு பாசமான குடும்பம் இருந்தால், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவ்வாறு இல்லை என்றால், அத்தகைய குடும்பத்தை பெறும் தகுதி உங்களுக்கு உள்ளது. இந்த விஷயத்தில், மனிதர்களும், ரோபோக்களும் ஒரே மாதிரியானவர்கள் என்று நான் நினைக்கிறேன். என்றும், தனக்கு குழந்தை பெற்றுக்கொள்ளவும் ஆசை என்றும் கூறி வியப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், மும்பை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொள்ள சோபியா இந்தியா வந்துள்ளது. இந்திய கலாச்சார உடையாள சேலையை கட்டிக்கொண்டு சாதாரன பெண்ணை போல சோபியா ரோபா விழாவில் கலந்து கொண்டது.
விழாவில் நமஸ்தே என்று இந்தியில் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்த ரோபோ, அங்கு நடைபெற்ற கருத்தரங்களில் அங்குள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் 15 நிமிடம் உரையாற்றியது. அப்போது ஒரு மாணவர் நீங்கள் யாரையாவது காதலிப்பீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு காதல் உணர்வுகள் மனிதர்களுக்கு உண்டு, சிக்கலான அந்த உணர்வு எனக்கு இல்லாதது வியப்பாக உள்ளது, இருப்பினும் நான் காதல் உணர்வை பெற்றுக்கொண்டு செய்யப்போவது ஒன்றுமில்லை. நான் ஓர் இயந்திரம், கட்டளைக்கு கட்டுப்படுவேன் என்று கூறியது. மேலும் இந்தியாவின் இளைய தலைமுறையினரின் அறிவியல் ஆர்வம் குறித்து பாராட்டு தெரிவித்தது. சோபியாவின் பேச்சு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.