மின்னணுச் சாதனங்களை மிகையில்லாது பயன்படுத்து
கணினியும் இணையமும் அவசியம்தான் – அதுவே
கதியென்று கிடக்காதே தினம்தினம்தான்!
அலைபேசி பயன்பாடும் முக்கியம்தான் – ஆயினும்
அதில்மூழ்க கேடுகளும் சூழ்ந்திடும்தான்!
ஓய்வின்றி ஒளித்திரையை உற்றுப்பார்த்தால்
ஒளிகொடுக்கும் விழியிரண்டும் சோர்ந்துபோகும்!
வாய்மூட வும்மறந்து திரையை நோக்கின்
வளமான ஒளிரும்கண்ணில் பார்வைபோகும்!
ஒலிப்பானை ஓசையுடன் காதில் மாட்டி
ஒவ்வொரு நிமிடமும் பாட்டுக்கேட்டால்
செவிகளின் செயல் மங்கிப்போகும்தானே!
செவித்திறன் இழக்கும்படி ஆகும்தானே!
தனிமையில் தகாத ‘புளுவேலை’போல்
தவறான விளையாட்டை ஆடிவந்தால்
உற்சாகம் உன்னைவிட்டே ஓடிவிடும்!
உயிரும்கூட விளையாட்டாய் மாறிவிடும்!
மின்னணு சாதனங்கள் அனைத்தினையும்
மிகையில்லா(து) அளவுடனே பயன்படுத்து!
நாளெல்லாம் நண்பருடன் ஓடியாடி
நலமுடனே வாழ்ந்திடு பயம்விடுத்து!
– தமிழோவியன், தெற்கிருப்பு, கடலூர்