இயற்கையின் கொடையே நிரந்தரம்!
அன்பு நண்பனே அருகில்வா – உனக்கு
அறிவியல் புதுமைகள் சில சொல்வேன்!
எங்கும் நிறைந்த கதிர்ஒளியை – நாம்
இயக்க சக்தியாய் மாற்றிடலாம்!
வீட்டுக் கூரையில் சூரியத்தகடுகள் – நாம்
வேண்டும் அளவிலே அமைத்திட்டால்
சூரிய ஒளியை மின்சக்தியாக்கி – நம்
சொந்த மின்கலனில் சேர்த்திடலாம்!
பகலிலும் இரவிலும் மின்விளக்கு – நமக்கு
பகலவன் தருவான் இலவசமாய்!
பாடும் வானொலி தொலைக்காட்சி – மற்றும்
பயனுறு மின்விசிறி இயக்கிடலாம்!
கேணியில் உள்ள நீரினை இறைக்கவும் – நமக்கு
கதிரவன் சக்தி தந்திடுவான்!
மின்வெட்டு பயமே இனி வேண்டாம் – இனி
இரவும் பகலும் ஒன்றேதான்!
கோடையில் குளிர்ச்சி பெற்றிடலாம் – இனி
சூரிய ஒளிதரும் மின்சாரத்தால்!
குளிர்காலத்திலும் ‘சுடுநீர்’ பெற்றிடலாம் – நாம்
சூரியனின் வெப்ப சக்தியினால்!
எத்தனை எத்தனை ஆற்றல்கள் – நம்
இயற்கையின் கொடையில் அற்புதங்கள்!
ஆதவனைப்போல் அனுதினம் உதவிட – நாம்
அனைரும் எடுப்போம் ஒருசபதம்!
– வேடந்தாங்கல் சுகுணன்