தேர்வுக்குத் தயாராவோம்!
தேர்வுக் காலம் நெருங்கிவிட்டாலே, நிறைய நெருக்கடி, உளைச்சல், வழக்கத்துக்கு மாறான கட்டுப்பாடுகள் என்று ஏப்ரலுக்கு முன்பே ஒரு வெக்கை பரவிவிடும் நம்மைச் சுற்றி!
அதிலிருந்து எப்படி மீள்வது என்பதற்கான குறிப்புகளைத் தான் உங்களுக்குத் தர வேண்டும் என்று நினைத்தோம். அதற்காகத் தயாரித்துக் கொண்டிருக்கும்போது அடுத்தடுத்து கேள்விகள் எழுந்தன.
இந்த இதழ் வெளியாகப்போகும் சமயத்தில் தேர்வு நெருங்கிவிடும். எனவே, தேர்வு சமயத்தில் தேர்வுக்குப் படிக்காமல், மாத இதழைப் படிக்க விடுவார்களா பெற்றோர்?
அப்படி தேர்வு முடியும் வரை பெரியார் பிஞ்சு படிக்க விடவில்லையென்றால், தேர்வு முடிந்தபின் தான் படிப்பீர்கள். தேர்வு முடிந்து விடுமுறை மனநிலைக்கு வந்தபின் தேர்வுக்கான டிப்ஸ் எதற்கு?
அப்படியே, அறிவுரை சொல்வதென்றாலும் பெற்றோருக்குத் தான் சொல்ல வேண்டும். தாங்களும் பரபரப்பாகாமல், குழந்தைகளையும் ‘டென்சனாக்காமல்’, தேர்வு நேரத்தில் உடல்நலம் பாதிக்காமல் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்குத் தான் உண்டு.
தேர்வு நேரமென்றாலும் கூட, பெரியார் பிஞ்சு இதழைப் படிக்கக் கொடுக்கும் அளவுக்குப் பக்குவமும், எவ்வளவு நேரம் அதில் செலவழிக்க வேண்டும் என்று அளவு தெரிந்த பிஞ்சுகளுக்கும் தேர்வு நேர டிப்ஸ் என்று தனியே சொல்ல வேண்டிய அவசியமிருக்கிறதா என்ன?
எனவே, நாங்கள் சொல்ல விரும்புவதெல்லாம்…
விரும்பி, புரிந்து படித்ததை, விரித்து, புரியும்படி எழுதுங்கள்.
தேர்வு முடிவுகள் குறித்தெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் படித்தாலே நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடியும். வாழ்த்துகள்!