குளோனிங் குரங்கு
– சரவணா இராசேந்திரன்
குளோன் என்பது உயிரின் செல்லில் இருந்து ஓர் உயிர் உருவாக்கப்படுவதாகும். அதாவது பாக்டீரியாக்கள், பூச்சிகள் அல்லது தாவரங்கள் போன்றவை இனப்பெருக்கம் செய்யும்போது இயற்கையில் ஏற்படக்கூடும் உடலம் இரண்டு துண்டுகளாகி(அமீபா) புதிய உயிர் உருவாகும், விதைகள், உயிரணுக்கள் போன்றவற்றின் மூலம் புதிய உயிர்கள் உருவாகும்.
ஆனால் நவீன அறிவியல் தொழில் நுட்பத்தின் மூலம் டி.என்.ஏ எனப்படும் மரபணுவைக் கொண்டு அதன் மூலம் புதிய உயிரினங்களின் பிரதிகளை உருவாக்குவதற்குப் பெயர்தான் குளோனிங். எடுத்துக்காட்டாக நாம் ஒரு பக்கக் கட்டுரையை எழுத முயற்சி செய்கிறோம். ஆனால் எழுதி முடித்த பிறகு அதை பிரதி எடுக்க போட்டோ காப்பி கருவியின் மூலம் ஆயிரக்கணக்கான பக்கங்களை எடுத்துவிடுகிறோம். அதே போன்றுதான் உயிர் போட்டோகாப்பிதான் இந்த குளோனிங்.
ஜெர்மானிய உயிரியல் ஆய்வாளர் ஹான்ஸ் ஸ்பெமான், 1935ஆம் ஆண்டு இந்த குளோனிங் கோட்பாட்டை முன்வைத்தார். அதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசு வாங்கிய கையோடு, இவரும் இவரது மனைவி மற்றும் ஆய்வு மாணவர்கள் இணைந்து ஒரு செல் உயிரினமான அமீபாக்களை செயற்கையாக உருவாக்கி வெற்றிகண்டனர்.
அதன் பிறகு குளோனிங் முறை பற்றி உலகம் அறிந்துகொண்டது.
உலகின் முதல் குளோனிங் உயிரினம் செம்மறி ஆடு (1996) ஆகும். இதற்கு ‘டோலி’ என்று பெயரிடப்பட்டு ஆட்டின் முழு வாழ்நாளும் சாதாரண ஆடுகள் போலவே வாழ்ந்தது.
அதனைத் தொடர்ந்து கன்றுக்குட்டி ஒன்றை குளோனிங் முறையில் உருவாக்கினார்கள். ஆனால் மரபணுச் சிதைவு காரணமாக விரைவிலேயே இறந்துவிட்டது. இதன் உடலை பதப்படுத்தி ஸ்காட்லாந்து தேசிய அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர்.
மீன், பன்றி, நாய் போன்றவற்றைக் குளோனிங் மூலம் தொடர்ந்து உருவாக்கிகொண்டே இருக்கின்றனர். இந்த வரிசையில் தற்போது சீன உயிரியல் ஆய்வாளர்கள் நீண்ட வால் குரங்குக் குட்டிகளை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளனர்.
ஆய்வகத்தில் உருவான இந்த குரங்குக் குட்டிகளுக்கு ‘சோங் சோங்’ மற்றும் ‘ஹ§வா ஹ¨வா’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.
மரபணு மாற்றப்பட்ட குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பது, மனித நோய்கள் குறித்த ஆய்வுகளுக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவது மனிதர்களைக் குளோனிங் செய்வதில் கொண்டுபோய் நிறுத்தும் என்கிற கருத்து நிலவி வருகிறது.
சீன நரம்பியல் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த குயிங் சன், “குளோனிங் செய்யப்பட்ட இந்த குரங்குகள் மரபணுவினால் ஏற்படும், புற்று நோய், வளர்சிதை மாற்றம் மற்றும் நோய் எதிர்ப்பு கோளாறுகள் குறித்து ஆய்வு செய்ய உதவும் என்கிறார்.
‘சோங் சோங்’ என்ற குரங்கு எட்டு வாரங்களுக்கு முன் பிறந்திருக்கிறது. ‘ஹ§வா ஹ¨வா’ ஆறு வாரங்களுக்கு முன் பிறந்திருக்கிறது. குரங்குகள் நன்றாக வளர்கின்றன. அதற்கு புட்டிப் பால் தரப்படுகிறது. வரும் ஆண்டுகளில் குளோனிங் முறையில் அதிகமான குரங்குகள் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
லண்டன் ஃபிரான்சிஸ் கிரிக் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராபின், இந்த இரண்டு குரங்குகளையும் குளோனிங் செய்யப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மிகவும் அபாயகரமானது மற்றும் திறனற்றது என்கிறார்.
கெண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டர்ரென் கிரிஃப்பின், இந்த குளோனிங் மனித நோய்கள் குறித்து புரிந்து கொள்ளப் பயன்படும் என்கிறார். அதே வேளை, விதிமுறைகள் மீறப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. குளோனிங் குறித்த பன்னாட்டு சட்ட விதிகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றும், இதுபோன்ற ஆய்வுகள் எப்படி மேற்கொள்ளப்பட வேண்டும், எப்படி செயல்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும் என்கிறார் அவர்.
குளோனிங் குரங்குகள் எளிதாக உருவாகிவிடவில்லை, 79 முறை தோல்விகளுக்குப் பின் இந்த இரு குரங்குகளும் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இதுகுறித்து உயிரியல் ஆய்வாளர் சன் கூறும்போது, “நாங்கள் பல்வேறு தொழில்நுட்பங்களை முயற்சித்துப் பார்த்தோம். இறுதியில்தான் எங்களுக்கு வெற்றி கிடைத்தது. பல தடைகளைக் கடந்துதான் இந்தக் குரங்குகளை உருவாக்கி இருக்கிறோம்” என்கிறார்.
மேலும் பன்னாட்டு தேசிய சுகாதார அமைப்பு வகுத்த விதிமுறைகளைப் பின்பற்றியே இந்த குளோனிங் முறை மேற்கொள்ளப்பட்டதாக சீன உயிரியல் ஆய்வாளர்கள் கூறினார்கள்.