குறும்புக்கார எறும்பு
– கன்னிக்கோவில் இராஜா
எறும்புப் புற்றிலிருந்து எல்லா எறும்புகளும் வேகவேகமாக ஏறி மேலே வந்தன.
“அதோ பாருங்கள்! அங்கே தெரிகிற கரும்புச்சாறு கடை. அங்கே செல்லுங்கள். அங்குதான் நமக்குத் தேவையான உணவு கிடைக்கும்…’’ என்றது ராணி எறும்பு.
எல்லா எறும்புகளும் ராணுவ வீரர்கள் போல அணிவகுத்து வரிசையாக செல்லத் தயாராகின.
“ஆங்…! சொல்ல மறந்துட்டேன். இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை. மாணவர்கள் எல்லாம் இந்தப் பக்கம் இருக்கிற மைதானத்திற்கு வந்து கால்பந்து விளையாடுவார்கள். அதனால் யாரும் மைதானத்தின் பக்கம் போகாதீங்க… அப்புறம் ஆபத்துதான்’’ என எச்சரிக்கை செய்தது ராணி எறும்பு.
“சரி…’’ “சரி…’’ எனத் தலையாட்டின எறும்புகள்.
வரிசையாகச் சென்று கொண்டிருந்த எறும்புகளில் குறும்புக்கார எறும்புகள் இரண்டு இருந்தன. ஒன்று டோலி. மற்றொன்று வேணி. இவை பெரும்பாலும் பெரியவர்கள் பேச்சைக் கேட்காமல் பல நேரங்களில் ஆபத்தில் மாட்டிக்-கொள்ளும். அப்புறம் பெரியவர்கள் வந்துதான் காப்பாற்றுவார்கள்.
இன்றும் அப்படித்தான்…
“டோலி! நம்ம ராணியம்மா சொன்னாங்களே… அந்த விளையாட்டு மைதானம். அங்கே போய் கால்பந்து ஆட்டத்தைப் பார்த்துட்டு வரலாமா?” என்றது வேணி.
“ஐயையோ! மைதானத்திற்கா? நான் வரல. அங்க போனவங்க பந்து மோதி விபத்துக்கு ஆளான கதை உனக்குத் தெரியாதா?’’ என்றது டோலி.
“அட, நீ வேற. நாம் என்ன அங்கேயே இருக்கப் போறோமா? சீக்கிரமா போயிட்டு, சீக்கிரமா வந்திடலாம். அப்புறம் நம்ம கூட்டத்தோட சேர்ந்துக்-குவோம். அவ்வளவுதானே’’ என்றது வேணி.
சற்று யோசித்தது டோலி.
“யோசிக்காதே. வா… சீக்கிரம் போயிட்டு, சீக்கிரம் வந்திடலாம்’’ என தைரியமூட்டியது வேணி.
மெதுவாக கூட்டத்தைவிட்டு தனியே வந்தன குறும்புக்கார எறும்புகள்.
வேகவேகமாக மைதானத்தை அடைந்தன.
“அட! அங்க பாரு. ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டாங்க” என மகிழ்ச்சிப் பொங்க சொன்னது வேணி எறும்பு. பார்த்த டோனிக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.
மைதானத்து அருகில் சென்ற இரண்டு எறும்புகளும், கால்பந்து ஆட்டத்தை வியப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தன.
“எப்பா… எவ்ளோ பெரிய பந்து’’ என்றது வேணி.
“ஆமா! பெரிய பந்துதான்’’ இது டோலியின் மகிழ்ச்சிக் குரல்.
“அந்தப் பெரிய பந்து மேலே ஏறி இந்த மைதானத்தை ஒருமுறை பார்க்கணும்னு ரொம்ப நாளா ஆசை’’ என்றது வேணி.
“என்னது! பந்து மேலேயா’’ என டோலி கேட்டுக் கொண்டிருக்கும்போது,
ஒரு மாணவன் வேகமாக உதைத்ததால் எறும்புகளை நோக்கி வந்து கொண்டிருந்தது அந்த பெரிய பந்து.
“வேணி… வேணி… பந்து வருது தூரப்போ’’ என கத்திக் கொண்டே ஓடியது டோலி.
வேணி சுதாரிப்பதற்குள் பந்து வேணியை மோதியது. பயத்தில் அந்தப் பந்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது வேணி எறும்பு.
ஒரு மாணவன் ஓடிவந்து அந்தப் பந்தை எடுத்தான். அவன் இவ்வளவு சிறிய எறும்பு பந்தில் இருப்பதை கவனிக்கவில்லை.
அதைத் தனது ஒற்றை விரலால் சுழற்றிக்கொண்டே வந்தான். அந்த சுழற்சியை வேணி எறும்பு உணரவே இல்லை.
பலமுறை சுழற்றிக் கொண்டே வந்தவனின் பிடியில் இருந்து நழுவியது பந்து. கீழே விழுந்த அதிர்வில், சுதாரித்த வேணி எறும்பு, பந்தைவிட்டு தரையில் விழுந்தது.
“அப்பாடா! நல்ல வேளை அடிபடவில்லை’’ எனத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டது.
இதை எல்லாம் மறைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த டோலி, வேகவேகமாக வேணி எறும்புக்கு அருகில் வந்தது.
“வேணி உனக்கு ஒன்றும் ஆகலயே’’ என்றது.
“எனக்கும் ஒன்னும் ஆகல… பயப்படாதே டோலி’’ என்றது வேணி எறும்பு.
“சரி… அந்த மாணவன் பந்தை அவ்வளவு வேகமாக சுழற்றினானே உனக்கு பயமா இல்லையா?’’ என்றது டோலி.
“என்னது! பந்தை வேகமாக சுழற்றினானா? எனக்கு ஒன்னுமே தெரியலயே. சுழற்றியது போன்ற உணர்வே ஏற்படலயே’’ என்றது வேணி எறும்பு.
“ஆச்சரியமா இருக்கே. அது எப்படி அவ்வளவு சுழற்சியிலும் உனக்கு எந்த உணர்வும் ஏற்படாம இருந்தது? சரி. இதைப்பத்தி நம்ம ராணிகிட்ட கேட்போம்’’ என்றது டோலி.
“சரி. வா போகலாம்’’ என்றது வேணி எறும்பு.
நடந்ததைச் சொல்லி, மன்னிப்புக் கேட்டன இரண்டு எறும்புகளும்…
“சரி… சரி. இனிமேல் இதுபோல் செய்யாதீங்க. உங்க சந்தேகத்தை தெளிவுபடுத்தறேன்’’ என்று சொல்லி ஒரு கல்மேல் அமர்ந்தது. ஆர்வமாக அதன் அருகே இரண்டு எறும்புகளும் உட்கார்ந்தன.
“பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது என்பதை நீங்கள் படிச்சிருக்கீங்க இல்லையா?’’ என்றது ராணி எறும்பு.
“ஆமா! படிச்சிருக்கோம்’’ என்றன எறும்புகள்.
“சரி. அப்படின்னா பூமி சுற்றும்போது அதுமேலே இருக்கிற நாம மட்டும் சுற்றாம இருக்கோமே அது எப்படி?’’
“ஆமா. அது எப்படி?’’ என்றது டோலி.
“அதாவது பூமி அண்டத்தோட மையத்துல நிலையா இருப்பதாகவும், சூரியன், சந்திரன், நட்சத்திரம் எல்லாம் அதைச் சுற்றி வருகின்றன என்றுதான் ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை நம்பிக்கிட்டு இருந்தாங்க.’’
“ஓ!’’ என்று வியந்தன குறும்புக்கார எறும்புகள்.
“ஆனா, 1543ஆம் ஆண்டுல கோபர்நிகஸ் (சிஷீஜீமீக்ஷீஸீவீநீus) அப்படிங்கிற போலந்து வானியல் ஆய்வாளர், பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று முதன்முதலாகத் தெரிவித்தார். ஆனால், மனிதர்கள் இதை நம்ப மறுத்தாங்க.’’
“ஏன் நம்ப மறுத்தாங்க?’’ என்று கேட்டது வேணி எறும்பு.
“பூமி சுழலும்போது, அதுக்கு மேல இருக்கிற மனிதர்கள், மலைகள், கடல்கள், காடுகள், உயிரினங்கள் என எல்லாமே சுழலாம இருப்பதுதான் அவங்களோட வியப்புக்குக் காரணம்…’’
“அப்ப எப்பதான் தெளிவடைஞ்சாங்க’’ என ஆர்வமாகக் கேட்டது டோலி.
“இருங்க… இருங்க… சொல்றேன்… பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு 365ரு நாள்கள் ஆகுது. அதாவது ஓர் ஆண்டு ஆகிறது. அது தன்னைத்தானே சுற்றி வருவதற்கு 24 மணி நேரம் ஆகுது. அதாவது ஒருநாள் ஆகிறது என்று தெரிஞ்சும்கூட நம்ப மறுத்தாங்க.’’
“ஆமா! இப்ப எனக்குக்கூட நம்ம முடியல’’ என்றது வேணி எறும்பு.
இது எல்லாருக்கும் ஏற்படுற கேள்விதான். நம்ம பூமி சுழலும்போது, அதன் இழுவிசை காரணமாக காற்று மண்டலம் உட்பட அதன்மீது இருக்கும் ஒவ்வொரு பொருளும் பூமியுடன் சேர்ந்தே சுழல்கிறது. ஆனா அதோட சுழற்சியை நம்மால உணர முடியாது. இதற்கு சரியான உதாரணம்… இப்ப நம்ம வேணி பந்து சுழலும்போது, மேலே இருந்தும் அதனால உணர முடியாம இருந்ததுதான்’’.
“ம்… குழப்பமா இருக்கு. இன்னும் கொஞ்சம் தெளிவா புரியவைக்க முடியுமா?’’ எனக் கேட்டன குறும்புக்கார எறும்புகள்.
“தெளிவான்னா… ஆங்! பருவ காலங்களில் ஏற்படும் மாறுதல்களே பூமியின் இயக்கத்தை நிரூபிக்கும் அசைக்க முடியாத சான்று’’ என்றது ராணி எறும்பு.
“பருவ நிலை மாற்றம்னா என்ன?” எனக் கேட்டது வேணி.
“பூமி சூரியனைச் சுற்றி வருவதாலும், தன்னுடைய அச்சில் தன்னைத்தானே சுற்றிக் கொள்வதாலும் பருவ காலங்கள் ஏற்படுகின்றன’’.
“ஓ’’ வியந்தது டோலி.
“பூமி தன்னோட அச்சில், தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் இரவு பகல் ஏற்படுகிறது. அது சூரியனை நோக்கித் திரும்பியிருக்கும் பகுதிக்குப் பகல், மற்றுமொரு பகுதிக்கு அப்போது இரவு.
பூமி தன் அச்சில் சுழலாமல் இருந்தால், சூரியனை நோக்கித் திரும்பியிருக்கும் பூமியின் பகுதியில் எப்பொழுதும் பகலாகவும், மற்ற பகுகுதியில் எப்பொழுதும் இரவாகவும் இருக்கும்.”
“ஓகோ’’ என்றன எறும்புகள்.
“சூரியனைச் சுற்றி வரும் செங்குத்துக் கோட்டுடன் பூமியின் அச்சு 23லு கோணத்தில் சாய்ந்துள்ளது. இதனால் தொடர்ந்து முதல் ஆறு மாதங்களுக்கு ஒவ்வொரு துருவமும் சூரியனுக்கு எதிரில் வருகிறது. அடுத்த ஆறு மாதங்களுக்கு அது அவ்வாறு வருவதில்லை. துருவங்களில் ஆறு மாதங்களுக்கு பகலும், ஆறு மாதங்களுக்கு இரவும் மாறி மாறி வருவதன் காரணமும் இதுதான்.”
“அடடா! நாம வசிக்கிற இந்த பூமி இவ்வளவு வேலை செஞ்சி நமக்கு இடமும் கொடுக்குதா? ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு’’ என்றது வேணி.
“ஆமா. இந்த செய்திய தெரிஞ்சிக்க ஒரு பந்து உதவியிருக்கு நமக்கு’’ என்றது டோலி.
“சரி… சரி… நேரத்தை வீணாக்காம போய் கடமையை செய்யுங்க’’ என்றது ராணி எறும்பு.
மனமகிழ்ச்சியோடு கடமை செய்யப் புறப்பட்டன குறும்புக்கார எறும்புகள்.