காரணமின்றி ஏற்காதீர்கள்
பொறை ஏறும்போது யாரோ நினைக்கிறார்கள்?
- சிகரம்
தண்ணீர் குடிக்கும்போது அல்லது சாப்பிடும் போது ‘பொறை’ ஏறினால் உடனே தலையில் தட்டி, யாரோ நினைக்கிறார்கள் என்பார்கள். இது முற்றிலும் தவறு என்பது மட்டுமல்ல தலைகீழ் காரணமும் ஆகும்.
வாசற்படியில் இவர்கள் இடித்துக் கொண்டு, வாசல் இடித்துவிட்டது என்று கூறுவது போலத்தான்.
அதாவது, நமது தொண்டையில் மூச்சுக் குழல், உணவுக் குழல் இரண்டும் சந்திக்கின்றன. உணவுக் குழலுக்குள் செல்ல வேண்டிய உணவோ, எச்சிலோ, தண்ணீரோ மூச்சுக் குழலுக்குள் செல்லும்போது தான் “பொறை’’ ஏறுதல் ஏற்படுகிறது.
பொதுவாக உணவு அல்லது நீர் அருந்தும்போது, வேறு எதையோ நினைத்துக்கொண்டு, அவசர அவசரமாக உண்ணும்போதோ, குடிக்கும்போதோ தான் பொறை ஏற்படுகிறது.
அதிலும் குறிப்பாக, உண்ணுவதையே மறந்து நாம் எதையோ நினைத்துக் கொண்டு உண்ணும் போது அல்லது குடிக்கும் போதுதான் பொறையேறுதல் நிகழும்.
அதாவது, நாம் வேறு எதையோ, அல்லது யாரையோ நினைப்பதால் பொறை ஏறுதல் ஏற்படுகிறது. அப்படியிருக்க, யாரோ நம்மைப் பற்றி நினைப்பதால்தான் பொறையேறுகிறது என்று எண்ணுவது தவறு.
வேறு ஒருவர் நினைப்பது நம்மை எவ்வகையிலும் பாதிக்காது. அவ்விதம் எண்ணினால் அது தவறு என்பது மட்டும் அல்ல, மடமையுமாகும்.
====================
விபத்தில் தப்புவது தெய்வாதீனம்?
விபத்து நடக்கும்போது ஒருவரோ அல்லது ஒரு சிலரோ பிழைத்துக் கொள்ளும்போது தெய்வாதீனமாகத் தப்பினர் என்று கூறுவது வழக்கமாகி வருகிறது. இது முற்றிலும் தவறான ஒரு நம்பிக்கையாகும்.
பிழைத்துக் கொண்டது தெய்வாதீனம் என்றால், இறந்தது எந்த தீனத்தில்? கடவுளைத் தரிசிக்க சபரிமலை போகிறவர்கள் தினம் தினம் சாகிறார்களே, அது எந்த தீனத்தால்?
விரதக் குற்றம் என்றால் திரும்பி வரும்போது சாகிறானே அது ஏன்? விரதக் குற்றம் என்றால் போகும்போதுதானே சாக வேண்டும்? விரதக் குற்றத்திற்குத் தண்டனை மரணமா?
விரதக் குற்றம் என்றால், விரதத்திற்கு சட்டதிட்டம் வகுத்தது எந்தக் கடவுள்? அதை வகுத்து எவனிடம் கொடுத்தது?
ஒரே விபத்தில் பிழைத்துக் கொண்டவன், “கடவுள் கருணை’’ என்று கண்ணீர் மல்கக் கூறுகிறானே, அப்படியானால், இறந்தது யார் செயல்? இறந்தவர்கள் குடும்பத்தவர், நண்பர்கள் மனம் என்ன பாடுபடும்?
பிழைத்தவர்களுக்குக் கருணை காட்டிய கடவுள், இறந்தவர்களுக்குக் காட்டாதது ஏன்? அவர்கள் செய்த குற்றம் என்ன? சிந்திக்க வேண்டுமல்லவா?
ஆக, விபத்து என்பது சந்தர்ப்பச் சூழலால் நடப்பது. அதில் யார் வேண்டுமானாலும் பிழைக்கலாம், யார் வேண்டுமானாலும் சாகலாம். பிழைப்பதும், இறப்பதும் சந்தர்ப்பச் சூழலைப் பொறுத்ததே! இதில் கடவுளுக்கு என்ன வேலை?
கடவுள்தான் அனைத்தையும் செய்கிறது என்றால், விபத்தே நடக்காமல் செய்யலாமே! விபத்து நடப்பதால் கடவுளுக்கு என்ன லாபம்?
விபத்தை உண்டாக்கி, உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்படுத்தினால் அது எப்படிக் கடவுளாக இருக்க முடியும்?
மனிதனைத் தண்டிக்க உயிர்ச் சேதத்தைக் கடவுள் ஏற்படுத்துகிறது என்ற வாதத்திற்குக் கொண்டாலும், விபத்தில் பொருளை அழிப்பது ஏன்?
கார் விபத்தில் கார் நாசமானால், பேருந்து விபத்தில் பேருந்து நாசமானால், இரயில் விபத்தில் இரயில் நாசமானால், அது யாருக்குக் கொடுக்கும் தண்டனை? அரசின் சொத்தல்லவா? பொது மக்கள் பணமல்லவா நாசம்? அதை நாசப்படுத்தி கடவுள் யாருக்குத் தண்டனை கொடுக்கிறது?
ஆக, தெய்வாதீனம், கடவுள் கருணை என்பதெல்லாம் அறியாமையின், மடமையின் விளைவே தவிர, இவற்றில் அறிவியல் சார்ந்த உண்மை ஏதும் இல்லை.
ஒருவர் குண்டுவெடிப்பில் தப்பித்ததை அவரைச் சார்ந்தோர் கடவுள் கருணை என்கிறார்கள். அங்கே, அதே குண்டு வெடிப்பில் பல அப்பாவிகள் இறந்தார்களே அது யார் செயல்? அவர்கள்மீது கடவுள் ஏன் கருணை காட்டவில்லை? காரணம் என்ன? சிந்திக்க வேண்டும்!