காமன்வெல்த் போட்டிகள்
வருது வருது
காமன்வெல்த் போட்டிகள்
– சரா
காமன்வெல்த் போட்டிகள் என்பது ஒரு பன்னாட்டு, பல விளையாட்டுப் போட்டிகள் கொண்ட நிகழ்வாகும். நான்காண்டுகளுக்கொருமுறை நடத்தப்படும் அவை காமன்வெல்த் நாடுகளின் உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான போட்டிகளாகும். ஒவ்வொரு முறையும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 5,000ஆக இருக்கும். காமன்வெல்த் விளையாட்டுகளின் கூட்டமைப்பு இந்த விளையாட்டுகளை இயக்கவும் கட்டுப்படுத்தவும் பொறுப்பான நிறுவனமாகும்.
அத்தகைய முதல் போட்டி, பிரிட்டானியப் பேரரசு விளையாட்டுகள் என அறியப்பட்டு, கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தின், ஹாமில்டனில் 1930ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. 1954ஆம் ஆண்டில் இப்பெயரானது பிரிட்டானியப் பேரரசு மற்றும் காமன்வெல்த் விளையாட்டுகள் என்றிருந்தது. பின்னர் 1970-ஆம் ஆண்டு பிரிட்டானிய காமன்வெல்த் நாட்டு விளையாட்டுகள் என மாற்றப்பட்டது. தற்போதைய பெயரான காமன்வெல்த் விளையாட்டுகள் என்பது 1978ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வ மாக்கப்பட்டது. ஒலிம்பிக் விளையாட்டுகளைப் போல, இந்த விளையாட்டுப் போட்டிகள் காமன்வெல்த் நாடுகளின் சில முக்கிய விளையாட்டுகளை உள்ளடக்கியுள்ளது: அவை லான் பவல்ஸ், ரக்பி செவன்ஸ் மற்றும் நெட்பால் போன்றவையாகும்.
தற்போது காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் 54 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. மற்றும் 71 அணிகள் விளையாட்டுகளில் பங்கேற்கின்றன. அய்க்கிய நாடுகளின் அங்கங்களான – இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவை காமன்வெல்த் விளையாட்டுகளுக்கு தனிதனியான அணிகளை அனுப்புகின்றன. மேலும் பிரிட்டன் ஆட்சியின் கீழ் உள்ள காலனித் தீவுகளான – குயெர்ன்சி, யேர்சி, மாண் தீவு -மற்றும் பல பிரிட்டானிய கடல்கடந்த மண்டலங்கள் தனிதனியான அணிகளை அனுப்புகின்றன. ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த பிரதேசமான நார்ஃபோக் தீவு அதன் தனி அணியை அனுப்புகிறது. நியூசிலாந்தின் இரு சுதந்திர கூட்டமைப்புகளான குக் தீவுகள் மற்றும் நியூவே ஆகியவையும் தங்கள் அணிகளை அனுப்புகின்றன. 1930ஆம் ஆண்டு முதன்முதலாக பெண்கள் நீச்சல் போட்டிகளில் பங்கேற்றனர். அதன் பிறகு. 1934ஆம் ஆண்டு முதல், பெண்கள் அனைத்து போட்டி-களிலும் பங்கேற்கின்றனர். கடைசி காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோவில் 2014ஆம் நடைபெற்றது. 21-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஏப்ரல் 4, 2018 முதல் ஏப்ரல் 15, 2018 வரை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெறவுள்ளன.
விழிப்புணர்வூட்டும் வசிசிந்த!
இந்தியாவில் காமல்வெல்த் போட்டிகள் குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடையே எடுத்துச் செல்ல மலபார் கிறிஸ்து கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவர் புதிய விழிப்புணர்வுப் பேரணி ஒன்றை நடத்திவருகிறார். காமன்வெல்த் போட்டிகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பேனர் ஒன்றை உருவாக்கிய பேராசிரியர் வசிசிந்த மற்றும் அவரது மாணவி சித்திரா இருவரும் கேரளா மற்றும் தென் இந்தியாவில் முக்கிய பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று விளையாட்டின் மகத்துவம் குறித்தும் கலந்துகொள்ளும் நடைமுறைகள் பற்றியும் விளக்கி வருகிறார்கள்.