தந்தை பெரியாரின் கதை – 12
– சுகுமாரன்
பெரியாரின் பண்பு
பெரியாருக்கு வயது 70க்குமேல் இருக்கும் அப்போது. அவருடைய நாக்கில் புற்றுநோய் வந்தது.
டாக்டர் முத்துசாமி பெரியாருடைய நண்பர். பெரியாரின் நாக்கில் ஏதோ மருந்தினைத் தடவி வந்தார்.
நோய் குணமாகவில்லை.
பிறகு டாக்டர் பெரியாரை சென்னைக்கு அனுப்பினார். டாக்டர் சுந்தரவதனத்தைப் பார்க்கும்படி ஆலோசனை கூறினார்.
டாக்டர் சுந்தரவதனம்: அய்யா, மன்னிக்கணும். இப்படி விஷயம் தெரிந்த தாங்களே இத்தனைக் காலம் சும்மா இருக்கலாமா? என்று கேட்டார்.
பெரியார்: (திடுக்கிட்டு) என்ன நோய்…?
டாக்டர்: தங்களுக்கு நாக்கில் புற்றுநோய்…
பெரியாரின் முகத்தில் கவலை சூழ்ந்தது.
டாக்டர் கவனித்தார். அய்யா, தாங்கள் கவலைப்படுவதுபோல் தெரிகிறது என்றார்.
பெரியார்: நான் கவலைப்பட்டது நாக்கில் புற்றுநோய் வந்து சாகப்-போகின்றேன் என்றல்ல. இந்தப் பாவி கடவுளைத் திட்டினான். அதனால் நாக்கில் புற்றுநோய் வந்து செத்தான் என்று மதவாதிகள் அவதூறு பரப்புவார்கள். அதனால் எனக்குப் பின்பு எவனும் கடவுள் எதிர்ப்புப் பிரச்சாரத்-திற்குத் துணிந்து வரமாட்டானே என்ற கவலைதான் என்று கூறினார்.
பயங்கர நோய் வந்த நிலையிலும் தன்னை குறித்துக் கவலைப்படாமல் தன் இயக்கம் குறித்து கவலைப்பட்ட பெரியாரின் பண்பட்ட எண்ணத்தைப் பார்த்து டாக்டர் வியந்தார்.
நோய் வருவது இயற்கையே. அதை அறிவினால் வெல்ல முடியும். எனவே, பெரியார் உரிய மருத்துவம் செய்துகொண்டார். புற்றுநோய் குணமானது. தொடர்ந்து தன் வாழ்வுக்கு இறுதியான 95 வயது வரை கடவுள் மறுப்புப் பிரச்சாரம் செய்து வந்தார். கடவுளை மறுத்தால் துன்பம் வரும் என்ற மூடநம்பிக்கையை தானே வாழ்ந்து காட்டி முறியடித்தார்.
==========================
பெரியார் இவர்தான்
பெரியாரின் மனைவி நாகம்மையார் இறந்த சமயம், பெரியார் யாரையும் அழக்கூடாது என்று சொல்லிவிட்டார்.
கையில் கைத்தடியுடன் வீட்டு வாசலில் நின்று கொண்டார். துக்கம் கேட்க வரும் பெண்ணிடம் அழாமல் பிணத்தைப் பார்ப்பதா-யிருந்தால் உள்ளே செல்லுங்கள். அழுவதாயிருந்தால் இப்படியே போங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
அங்கு வந்த பெண்களுக்குப் பெரியாரை எதிர்த்து ஒன்றும் சொல்ல முடியவில்லை.
ஓலமும் ஒப்பாரியும் இல்லாமல் வீடு அமைதியாக இருந்தது.
இறந்தவர்களுக்குச் செய்யும் மரியாதை இதுதான் என்று எல்லோரும் புரிந்து-கொண்டனர்.
நாகம்மையாரின் உடல் பெட்டியில் வைக்கப்பட்டது. மாட்டு வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது. சுடுகாட்டில் கொளுத்தப்பட்டது.
பாடை கட்டித் தூக்கிச் செல்லும் முறையை மாற்றி, வண்டியில் வைத்து ஏற்றிக் கொண்டு சென்றார் பெரியார். இறப்பு என்பது இயற்கையான நிகழ்வே! அதனை ஏற்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதோடு, இறப்பின் போது செய்யப்படும் மதச் சடங்குகளையும் தவிர்த்து முன்னுதாரணமாக நாகம்மையாரின் இறுதி நிகழ்வை நடத்திக் காட்டினார் பெரியார்.
இவர்தான் உண்மையில் பெரியார்.