சர்வகடல் புத்தகக் கண்காட்சிக்குச் சென்ற லோலிமா
– விழியன்
லோலிமா அந்த வழிகாட்டிப் பலகையைப் பார்த்ததுமே உற்சாகம் கொண்டது. ஒரு வாரமாக தன் பெற்றோரிடம் போராடி இன்று தான் சம்மதம் வாங்கியது. இதோ சர்வகடல் புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்துவிட்டது. எல்லா கடல்களில் இருந்தும் புத்தகங்கள் வந்திருந்தன. மொத்தம் ஆயிரம் அரங்கங்கள். தொப்பியூர் என்ற புதிய ஊரையே இந்த புத்தகக் கண்காட்சிக்கு உருவாக்கி இருந்தார்கள். மொத்தம் இருபது வரிசைகளில் அரங்குகள். முதல் ஐந்து வரிசைகளில் குழந்தை கடல் பிராணிகளுக்கான புத்தகங்கள். லோலிமா தன் ஊரில் இருந்து கடலுந்து (கடல் பஸ்) ஒன்றில் தொப்பியூருக்கு சென்று இருந்தது.
லோலிமாவின் பள்ளி ஆசிரியர் ஐவிங்கா மற்ற பள்ளி மாணவர்களையும் ஒருங்கிணைத்து அங்கே கொண்டு வந்திருந்தார். மாலை 5 மணிக்கு எல்லோரும் கடலுந்துவிற்கு திரும்பிவிடவேண்டும் எனச் சொல்லி எல்லோரையும் கண்காட்சிக்குள் அனுப்பினார். லோலிமாவும் தன் நண்பர்களும் ஒவ்வொரு திசையில் பிரிந்து சென்றார்கள்.
லோலிமா இப்போது தான் தனியாக எழுத்துக்கூட்டி வாசிக்க ஆரம்பித்து இருக்கின்றது. அதனால் புத்தகங்களின் பெயர்களை எல்லாம் வாசித்தது. விதவிதமான புத்தகங்கள். பல்வேறு தலைப்புகள். தனக்கு விருப்பமான கதை சொல்லிகளின் புத்தகங்கள். பெரிய டால்பின் அளவிற்கு ஒரு புத்தகம் தான் எல்லோரையும் கவர்ந்தது. சத்தான கடல் செடிகள், ஆழ்கடலில் மூச்சிறைக்காமல் நீந்துவது எப்படி?, ஆற்றுக்கு சென்று வந்த அனேகன், பறக்கும் டால்பின்கள், தாடி வளர்த்த டிங்கா ஆக்டோபஸ், சருக்குமர விளையாட்டுகள், இந்தியப் பெருங்கடல் வரலாறு, அண்டார்ட்டிகாவில் அல்கிரா எனத் தலைப்புகளே லோலிமாவை கிறங்கடிக்க வைத்தது.
மதிய உணவு அந்த கண்காட்சியிலேயே எல்லோருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. நீந்திச் சென்று புத்தகங்களை பார்க்க விருப்பப்படாதவர்கள் வீடியோ அரங்கத்தில் அமர்ந்து படம் பார்க்க ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் எந்தக் குழந்தைப் பிராணிகளும் அங்கே அமரவில்லை. எல்லோரும் புத்தகங்களைப் பார்த்தும் வாங்கிக் கொண்டும் இருந்தார்கள். புத்தகத்தின் பெயரைச் சொன்னால் போதும் தூக்கிக்கொண்டு சுமந்து செல்லத் தேவையில்லை, கண்காட்சியை விட்டு கிளம்பும்போது தன்னுடைய பெயரைச் சொன்னால் போதும் எல்லா புத்தகத்தையும் ஒரே கவுண்டரில் வாங்கிக்கொண்டு கிளம்பிடலாம். அதுவும் இல்லாமல் எல்லா எழுத்தாளர்களும் அங்கே இருப்பார்கள். அவர்களுடைய கையெழுத்துடனே புத்தகம் கிடைக்கும் வசதியினை செய்திருந்தார்கள்.
மாலை அய்ந்து மணி. ஆசிரியர் ஐவிங்கா கடலுந்துவிற்கு எல்லோரும் வந்துவிட்டார்களா? எனப் பரிசோதனை செய்தார். தத்தமது புத்தகங்களை சக நண்பர்களிடம் எல்லோரும் காட்டிக்கொண்டிருந்தார்கள். லோலிமாவைக் காணவில்லை. கண்காட்சியை மூடும் சமயம். ஒவ்வொரு வரிசையாக விளக்குகளை அணைத்துக் கொண்டு இருந்தார்கள். கண்காட்சி ஒருங்கிணைப்பாளரிடம் ஓடினார் ஐவிங்கா. லோலிம்மான்னு ஒரு குட்டி மீன் உள்ளயே இருக்குங்க, மூடாதீங்க என்றார்.
மீண்டும் விளக்குகள் போடப்பட்டன. லோலிமா…, லோலிமா… எனக் கத்திக்கொண்டே ஒவ்வொரு வரிசையாகச் சென்றனர் எல்லோரும். எழுத்தாளர்களும் தேடினார்கள். கிடைக்கவே இல்லை. குட்டி ஆகாயம் என்ற அரங்கில் மீன் ஓவியத்திற்கு பக்கத்திலே சிலை போல ஆடாமல் அசையாமல் இருந்ததை ஐவிங்கா பார்த்துவிட்டார்.
லோலிமா என கத்தியதும் எல்லோரும் அங்கே கூடிவிட்டனர். லோலிமா ஓவென அழ ஆரம்பித்தது. என்னாச்சு என்னாச்சு என எல்லோரும் கேட்க ஆரம்பித்தனர்.
எதையாச்சும் பார்த்து பயந்துட்டியா? என்றார் ஆசிரியர்.
இல்லை எனத் தலையாட்டியது.
உடம்பு சரியில்லையா?
இல்லை எனத் தலையாட்டியது.
அந்தக் கூட்டத்தில் இருந்து வயதான எழுத்தாளர் மெதுவாக அதனருகே சென்று என்னாச்சு லோலிமா ஏன் இங்கயே இருக்கீங்க. நேரமாச்சு இல்லை மெல்ல வாய் திறந்தது லோலிமா.
எனக்கு இந்த புத்தகங்கள் எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு. என்னை இங்கயே வெச்சுப் பூட்டிடுங்க. இதைப் படிச்சிட்டே இருந்திடுறேன். என்னால எல்லா புத்தகத்தையும் வாங்க முடியாது எனச் சொல்லி திரும்ப அழ ஆரம்பித்தது.
ஹே என எல்லோரும் புன்னகைத்தனர். அவ்வளவுதான உன் பிரச்சினை. நம்ம ஊர் நூலகத்திற்கு 1000 புது புத்தகம் வாங்கி இருக்கோம். அங்க ஏற்கனவே பத்தாயிரம் புத்தகங்கள் இருக்கு. தினமும் நூலகத்திற்கு போ, படி. புத்தகம் எடுத்துட்டு போய் படி. அவ்வளவு தான என்றார் ஆசிரியர் ஐவிங்கா.
லோலிமா சரி கிளம்புகிறேன் என்றது. புத்தகக் கண்காட்சித் தலைவர் ஓடிவந்து, உன் வாசிக்கும் ஆர்வத்தைப் பாராட்டி அந்த டால்பினின் உடல் அளவில் இருக்கும் பெரிய புத்தகத்தை உங்க நூலகத்திற்கு நாங்க தர முடிவு செய்திருக்கோம். அதுவும் இல்லாம இந்தா 10 புத்தகங்கள் என்று பரிசளித்தார். கடலுந்து சர்ர்ர்ர்ர் எனக் கிளம்பியது.