நம்புங்கள்
சுயமானம் இழந்திடாமல் வாழுங்கள்
சுதந்திரத்தைச் சொந்தமாகக் கொள்ளுங்கள்
உயர்வான கொள்கையிலே நில்லுங்கள் – இந்த
உலகமுங்கள் கையிலென நம்புங்கள்
ஏட்டறிவு போதுமென்று நில்லாதே
அனுபூதி அடைந்துவிட முந்துங்கள்
நாட்டறிவும் நீபெறுதல் வேண்டுமடா – அதில்
நாடுஉன்னை நம்பிடவும் வேண்டுமே!
மூளைக்குநல் வேலைவேண்டும் தேடுங்கள்
முப்பொழுதும் நமதென்றுப் பாடுங்கள்
நாளைக்கு என்றெதையும் தள்ளாதீர் – என்றும்
நன்றதனை இன்றேசெய் விடாதீர்கள்!
எதற்கிந்தக் கேவலத்தை அடைந்தீர்கள்
எதிர்கால வாழ்வுதனை இழந்தீர்கள்
எதிர்ப்புக்குள் அடைபட்டுக் கிடந்தீர்கள் – வெறும்
எரிகின்ற நெஞ்சுடனே வாழ்ந்தீர்கள்!
முன்னேறு வழியதனைத் தேடுங்கள்!
முரண்பாடு இல்லாமல் வாழுங்கள்!
திண்டாடி நிற்பதனை மாற்றுங்கள்! – உங்கள்
திறமைகளைச் செயல்களாலே காட்டுங்கள்!
போதுமென்ற மனமென்றும் இருந்திட்டால்
புவியரங்கில் இருக்குதடா இடமொன்று
சாதுவாக எப்பொழுதும் சோர்ந்திருந்தால் – ஒரு
சாதனைக்கு இடமிங்கு இல்லையடா!
பெரியாரைப் பின்பற்றி நீநடந்தால்
புரியாத பொருளெல்லாம் புரியுமடா
அறியாமை இருள்நீக்கி வாழுங்கள் – அதில்
அனுகூலம் இருக்குதடா நம்புங்கள்!
– கே.வி.ஜெனார்த்தனன், காஞ்சிபுரம்