பிஞ்சுகள் விரும்பும் பெரியார் தாத்தா
பெரி…யார்…. ஒரு தனி…. மனித…ரல்ல… அவர் ஒரு…
டேய்,.. இப்படி விட்டுவிட்டா படிப்ப… நான் வேகமா படிக்கிறேன் பாரு… அவர் ஒரு சகாப்தம் _- ஒரு காலகட்டம் _- ஒரு திருப்பம் _ -அறிஞர் அண்னா இப்படி பெரியார் குறித்த கல்வெட்டினையும், பெரியாரின் பொன்மொழிகளையும் வாய்விட்டு, எழுத்துக் கூட்டி 30 பேர் உரக்கப் படித்துப் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? ச்சும்மா… கலகலவென்றிருந்தது பெரியார் தாத்தா நினைவிடம்.
கடந்த 01.03.2018 வியாழக்கிழமை அன்று காலையில் தாம்பரம் சிட்லபாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளியிலிருந்து 30 இருபால் மாணவர்கள், தங்கள் ஆசிரியர்கள் மூவருடன் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்திருந்தனர். மிகுந்த உற்சாகத்துடன் சுற்றிப் பார்த்தனர். அவர்களுக்கு பெரியார் நினைவிடம், பெரியார் ஆய்வு நூலகம், விடுதலை அச்சகம், பெரியார் காட்சியகம் ஆகியவை சுற்றிக் காட்டப்பட்டன. அவர்கள் பெரியார் காட்சியகத்தில் சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தபோது, மாணவர்கள் வந்திருப்பதை அறிந்த பெரியார் பிஞ்சு மாத இதழின் ஆசிரியர் கி.வீரமணி தாதா அவர்கள், மிகுந்த ஆவலுடன் பெரியார் காட்சியகத்திற்கு வருகை தந்து மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரை-யாடினார். அனைவருக்கும் பெரியார் பிஞ்சு இதழ் வழங்கப்பட்டது.
30 மாணவர்களையும் தனித்தனியாக, அவரவர்களின் எதிர்காலக் கல்வி, பணி குறித்து விசாரித்தார். அவர்களும் சளைக்காமல், அய்.ஏ.எஸ்., மருத்துவர், ஆசிரியர் என்று கூறினர். எல்லாவற்றையும் பாரட்டி மகிழ்ந்தவர், ஒரு மாணவன், சொந்தத் தொழில் தொடங்குவேன் என்ற கூறியதும் வெரிகுட் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் பாராட்டினார்.
அதைத் தொடர்ந்து, அனைவரின் கைகளையும் காட்டச் சொன்னார். மாணவர்கள் எதற்கு என்று புரியாமல் தயங்கியபடி காட்டினர். சிலர் புரிந்துகொண்டு கைகளை மறைக்கத் தொடங்கினர். தாமதமாகத்தான் ஆசிரியர்களுக்கும் புரிந்தது. புரிந்தவுடன் அவர்கள் சிரித்துவிட்டனர். தொடர்ந்து பெரியார் பிஞ்சு ஆசிரியர் வீரமணித் தாத்தா, மறைக்காதீங்க. நான் எதுவும் சொல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டு, கையில் கயிறு கட்டுவதால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி மிகுந்த அக்கறையுடன் சொன்னார். பிறகு, கயிறு கட்ட மாட்டோம். கயிறும் திரிக்க மாட்டோம் என்று இருக்க வேண்டும் என்றதும், பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைவரும் சிரித்துவிட்டனர்.
* * *
அதே போல் 24.03.2018 சனிக்கிழமை அன்று பிற்பகலில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா, ஒக்கூடர் வட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலிருந்து 24 மாணவர்கள் தலைமை ஆசிரியர் கே.கலையரசி அவர்களின் வழிகாட்டுதலில் இரா.இராமநாதன், சி.கார்த்திகேயன் ஆகிய ஆசிரியர்களுடன் பெரியார் திடலுக்கு வருகை தந்திருந்தனர்.
பெரியார் தாதா வாழ்ந்து உலவிய பகுதிகளைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர். பெரியார் பிஞ்சு இதழை வாங்கி ஆர்வமுடன் புரட்டிப் பார்த்தனர். சிற்றுண்டிக்குப் பிறகு, மாலையில் புறப்படும் பொழுது மீண்டும் இங்கு வருவோம் என்று கூறியவாறே புறப்பட்டனர்.
எவ்வயதினரும் ஏற்கும் தலைவராக பெரியார் தாத்தா காலம் கடந்து நிற்கிறார்.
-தமிழன்