சின்னச் சின்னக் கதைகள் – பொருள்
பெரிய கோவில்.
அதன் வாசலில் கோயில் யானை.
அசைந்து ஆடியபடி கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு அருள் வழங்கிக் கொண்டிருந்தது.
கோயிலுக்கு வரும் பக்தர்களையெல்லாம் வாசலிலேயே கவனமாக மடக்கி யானையிடம் அருள் பெற்றுச் செல்லும்படி சொல்லுவார் யானைப்பாகன்.
ஏமாந்த பக்தர்களும் யானையிடம் அருள் பெறாமல் போனால் ஆபத்து நேர்ந்து விடுமோ எனப் பயந்து தங்களிடம் இருக்கும் சில்லரைக் காசுகளை யானையின் துதிக்கையில் போட்டுவிட்டு தலையைத் தாழ்த்தி அருள் வேண்டி நிற்பார்கள். இது வாடிக்கையாக நடக்கும் வேடிக்கைதான்.
இதைக் கோபுரத்தின் மேலிருந்து பார்த்தது சின்ன வெள்ளைப்புறா.
அட உள்ளே பூசை செய்யிறவனும் சாமியைக் காட்டிப் பணம் பறிக்கிறான். வெளியே பாகனும் யானையைக் காட்டிப் பணம் பறிக்கிறான்.
அய்யய்யோ! எல்லாமே வியாபாரமா இருக்கே எனக் கேவலமாய்ப் பேசியது.
இதைக் கேட்டு பக்கத்திலிருந்த கருப்பு நிற கிழப் புறா சொன்னது.
பொருள் இல்லேன்னா – அங்கே
அருளுமில்லே ஆண்டவனுமில்லே