நீதிப்பாண்டியின் தீர்ப்பு
பெரிய ஆலமரத்தின் கீழேதான் நீதிமன்ற வழக்குகள் நடைபெறும். அன்று வழக்கம்போல வழக்குகள் குவிந்தன. நீதியரசர் கரடி நீதிப்பாண்டி வழக்குகளைக் கேட்டு தீர்ப்பு வழங்கினார். சக்கூ முயலின் வழக்கு வந்தது.
“என்ன சக்கூ முயலாரே, என்ன உம்முடைய வழக்கு?”
சக்கூ முயல் தனது வழக்கினை தொடுத்தது. “அய்யா, காலை 6 மணிக்குக் கிளம்பும் ராக்பூர் எக்ஸ்பிரஸில் வியாபாரத்திற்காக நான் செல்லவேண்டியது. ஆனால் இன்று என்னால் ரயிலைப் பிடிக்கமுடியவில்லை. இதனால் எனக்கு சுமார் மூன்றாயிரம் ரூபாய் நட்டம். இந்த நட்டத்தை எனக்கு நீங்கள் குக்கூ சேவலிடம் வாங்கிக் தரவேண்டும்” என்றது.
நீதிப்பாண்டி வழக்கைக் கேட்டு புன்னகைத்தது. “முயலாரே, நீங்கள் ரயிலை விட்டதற்கும் குக்கூவிற்கும் என்னய்யா சம்பந்தம்? ஏன் அவரிடம் கட்டணம் வசூலிக்கவேண்டும்?” என்று கேட்டது.
“காலை 5 மணிக்கு கூவவேண்டிய சேவல் ஏழு மணிக்குத்தான் கூவியது. இதனால் நான் தாமதமாக எழுந்தேன், இதனால்தான் நான் ரயிலை விட்டேன். ஆகவே குக்கூவே இந்த நட்டத்தை கொடுக்க வேண்டும்” என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டது.
குக்கூ நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டது. அதற்கு ஒன்றுமே புரியவில்லை. ஏன் வரவழைக்கப்பட்டோம், தான் எந்தத் தவறும் செய்யவில்லையே என்று நினைத்தது. நீதிப்பாண்டி வழக்கினை விவரித்தது. ‘ஆ..’வென அலறியது குக்கூ. “அய்யா, இது அநியாயம். இதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?” என்று அழுது புலம்பியது. “சரி, அன்று ஏன் தாமதமாக எழுந்தாய்? அதற்கு விளக்கம் சொல்” என விளக்கம் கேட்டது நீதிப்பாண்டி. சற்று தெளிந்த குக்கூ, “அய்யா, விளக்கம் எல்லாம் இல்லை. நேராக நீங்கள் மக்கூவிடம் கட்டணம் வசூல் செய்துகொள்ளவும். நான் நேற்று இரவு ஜங்கிள் ஸ்டார் ஜாங்கி நடித்த படம் பார்க்க சென்றேன். அதனால் தான் தாமதமாக எழுந்தேன். படம் தாமதமாக போடப்பட்டது. தாமதமாக வீட்டிற்கு வந்தேன். அதனால் தான் தாமதமாக எழுந்தேன்” என்று சொல்லி வழக்கில் இருந்து விடுவித்துக் கொண்டது.
மக்கூ என்பது ஒரு நரி. அந்த ஊர் திரையரங்கத்தின் உரிமையாளர். அந்த திரையரங்கில் தான் ஜங்கிள் ஸ்டார் ஜாங்கியின் திரைப்படம் வெளியிடப்பட்டது. நீதிமன்றத்திற்கு மக்கூ அழைத்துவரப்பட்டது. எல்லோருமே காத்திருந்தார்கள். குக்கூவும் சக்கூவும் விரக்தியில் அமர்ந்து இருந்தார்கள். நடப்பது என்னவென்றே மக்கூவிற்கு புரியவில்லை. பேந்தப் பேந்த முழித்தது. ‘நேற்று திரையிடப்பட்ட படத்திற்கு வேறு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. என்னடா வாழ்க்கை இது’ என வெறுத்துப்போன நிமிடத்தில் தான் நீதிமன்றத்தில் இருந்து அழைப்பு வந்தது.
“அய்யா சக்கூவிற்கு நான் ஏன் மூன்றாயிரம் ரூபாய் தரவேண்டும்?” புரியவில்லையே என்றது மக்கூ.
வழக்கினை தெளிவாக நீதிப்பாண்டி விளக்கியது. ‘அடப்பாவிங்களா…’ என மனதில் நினைத்துக் கொண்டது மக்கூ.
“படம் தாமதமாகத்தான் திரையிடப்பட்டது. அதற்கு முழு காரணம் நான் அல்ல. அந்த படத்தினை சிறுவர்கள் பார்க்கக் கூடாது என்று தடை விதிக்கக்கோரி சமூக ஆர்வலர் குரங்கு பிக்கூ வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்தத் தீர்ப்பின் நகல் எனக்கு மிகவும் தாமதமாக கிடைத்தது. அதன் பின்னரே படம் திரையிடப்பட்டது. அதனால் நீங்கள் பிக்கூவிடம் கட்டணம் வசூல் செய்யவும்” என்றது.
இப்போது குரங்கு பிக்கூ வரவழைக்கப்பட்டது. வழக்கு விளக்கப்பட்டது. ‘அவ்வ்வ்’ என்றது குரங்கு பிக்கூ.
“நான் தீர்ப்பு வந்ததும் வேகமாக பத்தே நிமிடத்தில் நகலை மக்கூவிடம் கொடுத்துவிட்டேன். காலையிலேயே தீர்ப்பு வழங்கி இருக்கலாம். ஆனால் அய்ந்து நிமிடத்திற்கு ஒருமுறை உணவு இடைவேளை, நொறுக்குத்தீனி இடைவேளை என்று தாமதித்து தாமதித்து மாலையில் தீர்ப்பினை தாமதமாக கொடுத்த நீதிபதியிடம் கட்டணம் வசூல் செய்துகொள்ளுங்கள்” என்றது பிக்கூ.
“கூப்பிடுங்க அந்த நீதிபதியை!” என கர்ஜித்தது நீதிப்பாண்டி.
நீதிமன்றமே அமைதியில் மூழ்கியது.
“நீதிப்பாண்டி! நீதிப்பாண்டி!! நீதிப்பாண்டி!!!” என்றது நீதிமன்றத்தின் டவாலி சிக்கூ கரடி.
ஆமாம் முந்தைய தினம் இந்தப் படத்திற்கான தீர்ப்பினைத் தாமதமாக வழங்கியது நீதிப்பாண்டி தான்.
சக்கூ முயலிடம் மூன்றாயிரம் ரூபாயினை தன் சட்டைப் பையில் இருந்து நீதிப்பாண்டி கொடுத்துவிட்டு மெல்ல தன் வீட்டினை நோக்கி நடந்தது.