மாற்றம்
ஒரு மாமரத்தில் இரண்டு மைனாக்கள் வாழ்ந்து வந்தன.
பச்சை நிற இலை படர்ந்த அம் மரம் பூக்கும் காலம் வந்தது. மரமெங்கும் இள மஞ்சள் நிறத்தில் கொத்துக்கொத்தாய் பூக்கள்.
அதைப் பார்த்த ஒரு மைனா, “அடடா! பச்சை மரத்தில் இள மஞ்சள் பூக்கள்! ஏன் இள மஞ்சள் நிறத்தில் பூக்க வேண்டும்?’’ என இன்னொரு மைனாவிடம் கேட்டது.
“பூ மலர்ந்தது வெளியில் தெரிந்தால் தானே வண்டும், வண்ணத்துப் பூச்சியும் வரும். அது வந்தால்தான் மகரந்தச் சேர்க்கை நடைபெறும்’’ என்று பதில் சொன்னது மற்றொரு மைனா.
சில நாள் கழித்து, மரத்தில் பூ இருந்த இடத்திலெல்லாம் பச்சை நிறத்தில் மாம்பிஞ்சுகள். அதைப் பார்த்ததும்,
“அட! இள மஞ்சள் பூவில் பச்சை நிறக் காய்கள்! காய்கள் ஏன் பச்சை நிறத்தில் இருக்கின்றன?” என்றது ஒரு மைனா.
அதற்கு, மற்றொரு மைனா.. “மரத்தின் இலைகளைப் போலவே, காயும் பச்சை நிறத்தில் இருந்தால்தான் ஆபத்து அதிகமின்றி வளர முடியும்’’ என்றது.
கொஞ்ச நாளில் காய் முற்றி மஞ்சள் நிறப் பழங்கள் மரமெங்கும் காட்சி அளித்தன.
அதைப் பார்த்து வியந்த மைனா… “ஆகா பழுத்து முற்றியதும் ஏன் மஞ்சளாகிப் போனது பழங்கள்?’’ என்று கேள்வி கேட்டது.
“பார்த்தவரெல்லாம் பறித்துச் சாப்பிடத்தான் இப்படிக் காட்சி அளிக்கிறது’’ என்று பதில் சொன்னது இன்னொரு மைனா.
“இப்படி, இளமஞ்சள் பூ பூத்து, பச்சை நிறக் காயாகி, மஞ்சள் நிறப் பழமாவதாலும், அதைப் பறித்துத் தின்பதாலும் மரத்துக்கு என்ன பயன்?’’ என்றது முதல் மைனா.
“பழத்தைப் பார்ப்பவர்க்கு என்ன தோன்றும்?’’ கேட்டது இரண்டாம் மைனா… “பறித்து உண்ணத் தோன்றும்’’ _ பதில் தந்தது முதல் மைனா.
“சாப்பிட்டபின்?’’ இரண்டாம் மைனா, “இனிக்கும் பழத்தைச் சாப்பிட்டபின் கொட்டையைத் தூக்கி எறிந்து விடுவார்கள்” _ முதல் மைனா.
“அப்படி ஒரு செயல் நடக்க வேண்டும். அதன் மூலம் தன் இனத்தைப் பெருக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த ஓரறிவு மரம் இத்தனை வண்ண விளையாட்டுகளை நடத்துகிறது’’ என்று விளக்கியது இரண்டாம் மைனா.
தெளிவு பெற்ற முதல் மைனா பாடியது.
“மாற்றம் எல்லாம்
இனத்தின் ஏற்றத்துக்கே!’’<