பாகிஸ்தானை கலக்கும் பதினொரு வயது பிஞ்சு
பாகிஸ்தானைச் சேர்ந்த ஹம்மத் சஃபி என்ற 11 வயதுச் சிறுவன், தன்னைவிட இரண்டு மடங்கு வயது அதிகமான மாணவர்களுக்கு வகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறார். ஒரு மனிதர் தன் வாழ்நாளில் செய்யக்கூடிய செயல்களை, சாதனைகளை இந்தப் பதினோரு வயதிலேயே சஃபி செய்துவிட்டார்.
இவர் மிகச் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், பெஷாவர் பல்கலைக்கழகத்தின் சிறப்பு விரிவுரையாளர் என்று பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
உற்சாகம் அளிக்கக்கூடிய இவரது பேச்சைக் கேட்பதற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வருகிறார்களாம். ஒவ்வொன்றையும் மிகச் சிறப்பாகச் செய்கிறார் என்று பாராட்டும் மக்கள் இவரை, ‘சூப்பர் கிட்’, ‘மோட்டிவேஷனல் குரு’, ‘லிட்டில் ஜூனியர்ஸ் ஆஃப் பாகிஸ்தான்’ என்றெல்லாம் புகழாரம் சூட்டுகின்றனராம்.
இந்தப் புகழும் பாராட்டும் குறித்து எந்தவிதத் கர்வமும் இன்றி, மிக இயல்பாகத் தன்னுடைய வேலைகளில் கவனமாக இருக்கிறார் -ஹம்மத் சஃபி.
இவனுடைய சம வயதுக் குழந்தைகளைவிட எப்போதுமே அதிகமாகச் சிந்திப்பான், செயல்படுவான். அதனால்தான் சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு பாடம் கற்பித்து வருகிறோம். என்றாவது ஒருநாள் பாகிஸ்தானின் தலைவராக வருவான் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது” என்கிறார் சஃபியின் தந்தை அப்துல் ரெஹ்மான்கான்.
குழந்தைகளை வருத்தாமல், அவர்களது இயல்பான அறிவைத் தூண்டி விட்டாலே சாதனைகளை எளிதாகச் செய்வார்கள் பிஞ்சுகள்!<