முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்தவன் வள்ளல்
பயனின்றிச் செய்த செயலைக்கூட நாம் பரம்பரையாக ஏற்றிப் போற்றி வருகின்ற நிலை இன்றும் காணப்படுகிறது. அதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
பாரி என்ற மன்னன் காட்டு வழியே சென்றபோது, கொழு கொம்பில்லாமல் தாவிக் கொண்டிருந்த முல்லைக் கொடியைக் கண்டவுடன் தேரை அங்கேயே நிறுத்தி அதன்மீது முல்லைக் கொடியைப் படரச் செய்து விட்டு நடந்தே சென்றான். இச்செயல் பெரும் கொடையுள்ளமாக இன்றளவும் பேசப்படுகிறது.
ஆனால் இது பெரும் தப்பு.
செயலைப் பார்க்கக்கூடாது. அவனது உள்ளத்தைப் பார்க்க வேண்டும் என்ற வாதம் வரும், இது கொடைத்தனம் இல்லை; பயன்பாடு அறியாது செய்த அறியாமை!
முல்லைக் கொடி கொம்பின்றி தாவினால் தன்னுடன் வந்தவர்களை விட்டு, கொம்புகளை ஊன்றச் செய்திருக்கலாம். அல்லது இவனே ஊன்றியிருக்கலாம். அதை விட்டுவிட்டு விலைமிக்க தேரை வேறு பயன்பாட்டிற்கு உரியதை, கொழு கொம்பாகப் பயன்படுத்தியது பயன்பாடு அறியாச் செயல்தானே?
இன்றைக்கு அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் பேருந்து ஓட்டிச் செல்லும்போது, வழியில் கொம்பில்லாமல் படரத் தாவும் ஒரு கொடியைப் பார்த்துவிட்டு, பேருந்தை அந்த இடத்திலே நிறுத்திக் கொடியை அதன்மீது படர விட்டு விட்டு, பயணிகளை நடந்து போகச் சொல்லி விட்டு, தானும் நடத்துநருடன் நடந்தே போனால், போக்குவரத்துத் துறை அமைச்சர் போற்றிப் புகழ்வாரா? அவரது வள்ளன்மையை வாய்விட்டுப் பாராட்டுவாரா?
அந்த ஓட்டுநரை பைத்தியக்காரன் என்று சொல்லி நாடே சிரிக்காதா? அப்படியிருக்க பாரியின் செயல் மட்டும் எப்படி வள்ளன்மையாகும்?
ஒரு காலத்தில் செய்யப்பட்ட தவறான மதிப்பீடுகளை இன்றளவும் அப்படியே பாராட்டிக் கொண்டிருப்பது அதைவிட அறியாமை என்பதைப் பிஞ்சுகள் நெஞ்சில் நிறுத்த வேண்டும்!