தந்தை பெரியாரின் கதை
பெரியாரின் பெருமை
மன்னார்குடியில் பெரியார் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். பார்ப்பனியம் மக்களுக்குச் செய்த கேடுகளைப் பற்றி சொல்லிக் கொண்டே வந்தார். மேடைக்குக் கீழே அமர்ந்து ஒரு பார்ப்பனர் சரமாரியாகக் கேள்விகளை எழுதி, பெரியாரிடம் கொடுத்துக்கொண்டே இருந்தார். கூட்டத்திலிருந்தவர்களுக்கு அப் பார்ப்பனர் மீது கோபம் வந்தது. பெரியார் அவர்களை அடக்கிக் கொண்டே ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கூறி வந்தார். பல கேள்விகள் ஆகிவிட்டன. எழுதிக் கொண்டே இருக்கும்போது ‘பென்சில்’ முனை ஒடிந்துவிட்டது. பெரியார் அதைப் பார்த்துவிட்டார். உடனே தம் பேனாவை எடுத்து அவரிடம் கொடுத்து “அய்யா, இதனால் எழுதுங்கள்” என்று கூறிவிட்டு பேச்சைத் தொடர்ந்தார்.
அந்த மனிதருக்கு வெட்கமாகப் போய்விட்டது. கூட்டம் முடிந்த பிறகு அம்மனிதர் பெரியாரிடம் மன்னிப்புக் கேட்டார். “உண்மையில் நீங்கள் பெரியவர்” என்று புகழ்ந்தார்.
மற்றொரு சம்பவம், பெரியாரும் தோழர் கண்ணப்பரும் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர். கண்ணப்பரோடு ஒரு பார்ப்பனர் விவாதம் செய்துகொண்டு வந்தார்.
கண்ணப்பர் சில கடுமையான சொற்களைக் கூறிவிட்டார். பெரியார் உடனே கண்ணப்பரிடம், “ஏன் இப்படிப் பேசுகிறீர்கள். பொறுமையாகப் பதில் சொல்லுங்கள்” என்றார்.
அதற்கு அந்தப் பார்ப்பனர், “பெரியவரே, இவர்கள் கேட்க மாட்டார்கள். இவர்களெல்லாம் அந்த ராமசாமி நாயக்கன் வட்டத்தைச் சேர்ந்தவர்கள்” என்றார்.
இதை கவனித்துக்கொண்டிருந்த இன்னொருவர், பெரியார் கழிவறைக்குச் சென்றிருந்தபோது அந்தப் பார்ப்பனரை நோக்கி, “இவர் யார் தெரியுமா? இவர்தான் அந்த ராமசாமி நாயக்கர்” என்றார்.
பிறகு அந்தப் பார்ப்பனர், பெரியாரின்
பொறுமையைப் புகழ்ந்தார்.
பெரியாரின் அஞ்சாமை
ஒருசமயம் தில்லையில் ஜாதி வெறியர்களும், மதவெறியர்களும் கூடினர். தங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்துவரும் பெரியாரைக் கொல்வதற்கு திட்டம் தீட்டினர்.
பணத்தைச் செலவு செய்து குண்டர்களையும் அடியாட்களையும் வரவழைத்தனர். அவர்களுக்கு ஆயுதங்கள் கொடுக்கப்பட்டன. பெரியாரைக் கொல்வதற்கு நாளும் இடமும் குறிக்கப்பட்டது.
தில்லையில் பெரியார் பேசும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் பாவேந்தர் பாரதிதாசன். கொலைகாரர்கள் ஆயுதங்களுடன் கூட்டத்திற்கு வந்து காத்திருந்தனர்.
இச்செய்தி புரட்சிக்கவிஞருக்கு எட்டியது. பதறிப் போய்விட்டார். ‘பெரியாரைக் கொல்லச் சதியா? பெரியார் செத்தால் தமிழ் மக்கள் கதி என்னவாகும்? பெரியாரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்’ என்று உள்ளம் பதைபதைத்தார்.
“கூட்டத்தை நிறுத்தலாம்” என்று கூறினார் ஒருவர்.
“கூட்டத்தை நிறுத்திவிடலாம். பெரியாரை நிறுத்துவது எப்படி? அவர் ரயிலில் வந்து கொண்டிருப்பாரே!” என்று தவித்தார்.
“ரயில் நிலையத்திற்குச் செல்வோம். பெரியாரை சந்திப்போம். அவரை திரும்பிப் போகச் சொல்வோம்’’ என்றார் இன்னொருவர்.
“சதிகாரர்களுக்கு அஞ்சுவதா? பெரியார் திரும்பிப் போக சம்மதிக்க மாட்டாரே!” என்று தயங்கினார் கவிஞர்.
“வேறு வழி? பெரியார் உயிர் முக்கியம்” என்றனர் மற்றவர்கள்.
கவிஞர் ரயில் நிலையத்திற்குச் சென்றார். அன்று ரயில் வர தாமதமாகியது. ரயிலே வராமல் போகட்டும் என்று கவிஞர் மனம் எண்ணியது.
ஆனால், அவர் எண்ணத்திற்கு மாறாக சிறிது நேரத்தில் ரயில் வந்து நின்றது. அதிலிருந்து பெரியார் இறங்கினார்.
கவிஞர் கவலையுடன் நிற்பதைப் பெரியார் கவனித்தார். “என்ன விஷயம் புரட்சிக்கவிஞரே!” என்று கேட்டார்.
“அய்யா, தங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அதனால் கூட்டம் வேண்டாம். திரும்பிப் போய்விடுங்கள்” என்று கவிஞர் பதட்டத்துடன் சொன்னார்.
அதைக் கேட்ட பெரியார் ‘கடகட’வென்று சிரித்தார்.
“அச்சம் நமக்கு வரலாமா? வாருங்கள் கூட்டத்திற்கு போகலாம்” என்று பெரியார் காரில் ஏறினார். கவிஞர் பின்தொடர்ந்தார்.
பெரியார் மேடையில் ஏறினார். கூட்டத்தில் பரபரப்பு. கொலைகாரர்கள் முன்னேறி வந்தனர்.
“ஜாதிக் கொடுமையை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறேன். அது தவறா? கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றாதே என்று கூறுகிறேன். அது தவறா?”
பெரியாரின் குரல் ஆணித்தரமாக ஒலித்தது. முன்னேறி வந்தவர்கள் அப்படியே நின்றுவிட்டனர். பெரியார் கூறுவதில் என்ன தவறு இருக்கிறது? என்று அவர்கள் மனம் வாதிட்டது. தங்கள் தவறை உணர்ந்தனர். ஆயுதங்களைக் கீழே போட்டனர்.
பெரியாரின் அஞ்சாத நெஞ்சம் எல்லாருக்கும் புரிந்தது.<