பூமய்யாவின் வாழைக்காய் வறுவல்
பூமய்யா கட்டிலில் இருந்து எழுந்தது. பூமய்யா ஒரு குட்டிக்கரடி. விடியற்காலையில் நடந்ததை நினைவுப்படுத்திப் பார்த்தது. தன் பெற்றோர்கள் இருவரும் சிறுத்தைகள் இரண்டுக்கும் கல்யாணம் நடக்கின்றது என கிளம்பினார்கள். பூமய்யா ‘வரவில்லை’ என்று சொல்லிவிட்டது. எவ்வளவோ வற்புறுத்தி அழைத்தார்கள் “இப்படி வீட்டிலேயே இருப்பது நல்லதல்ல மகனே’’ என்றார்கள். பூமய்யா நன்றாக போர்வையை இழுத்துப் போர்த்தி உறங்கிவிட்டது. “எனக்கு சாப்பாடு கூட வேண்டாம், கல்யாணத்தில் இருந்து வரும்போது பழங்கள் கொண்டுவாருங்கள்’’ என்று சொல்லிவிட்டது.
பெற்றோர்கள் இருவரும் முந்தைய இரவு வெகுநேரம் முழித்துக்கொண்டு இருந்தார்கள். படுக்கையறையில் இருந்து வெளியே வந்தபோதுதான் காரணம் புரிந்தது. தன்னுடைய பள்ளி நோட்டு புத்தகங்களுக்கு இரவு முழுக்க ப்ரவுன் ஷீட் போட்டிருக்கின்றார்கள். பாவம் பெற்றோர்கள் என நினைத்துக்கொண்டது பூமய்யா குட்டிக்கரடி.
வீட்டின் குளிர்சாதனப்பெட்டியில் சாப்பிட ஏதாவது இருக்கின்றதா என பார்த்தது. எதுவும் இல்லை. அப்பாவை ஏதாவது செய்துவைக்கச் சொல்லி இருக்கலாம். பசி வயிற்றைக் கிள்ளியது. தேன் டப்பாவில் தேனைக் காணவில்லை. தேன் குடித்தால் இன்னும் இரண்டு மணி நேரம் தள்ளலாம். சமையற்கட்டில் ஒரு புத்தகத்தைப் பார்த்தது. “கரடிகள் விரும்பும் 100 உணவு வகைகள்’’ என்று தலைப்பிட்டு இருந்தது. புத்தகத்தைத் திறந்ததும் ‘வாழைக்காய் வறுவல்’ என்ற உணவு வகை குறிப்பு இருந்தது.
பூமய்யா அதனை சமைக்கலாம் என முடிவெடுத்தது. ‘வாணலியில் எண்ணெய் கொஞ்சம் விடவும்’ என்று இருந்தது. அடுப்பின் மீது வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றியது. ‘கொஞ்சம் சூடானதும் உப்பு, மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி போதுமான அளவில் போடவும்’ என்று எழுதி இருந்தது. ஆனால் எண்ணெய் சூடாகவே இல்லை. புத்தகத்தை எழுதியது யார் என்று திருப்பிப் பார்த்தது. ‘_சமையற்கலை நிபுணர் விழியன்’ என இருந்தது. என்ன நிபுணரோ சொன்ன மாதிரி எதுவுமே நடக்கவில்லை. கொஞ்சம் கடுப்பானது பூமய்யா. பின்னர்தான், ‘அடுப்பைப் பற்ற வைக்காமல் சூடாகவில்லை என்று காத்திருக்கின்றோம்’ என பூமைய்யாவிற்கு புரிந்தது. “அடச்சே’’. பின்னர் சூடானது. ‘வட்டமாக வெட்டி வைத்திருக்கும் வாழைக்காய் துண்டுகளை வாணலியில் போடவும்’ என்று இருந்தது. ஆஹா, இந்த வாழைக்காய் எங்கே இருக்கின்றது? அடுப்பை நிறுத்தியது. ‘தேவையான பொருட்கள்’ என இருந்த குறிப்பில், ‘நீளமான வாழைக்காய் தேவையான எண்ணிக்கை’ என இருந்தது.
தோட்டத்துக் கதவினைத் திறந்து தோட்டத்திற்குள் சென்றது. ‘வாழை மரத்தில் இருந்து வாழைக்காய் வரும்’ என்று பூமய்யாவிற்கு தெரிந்து இருந்தது. சில மரங்களில் மட்டுமே வாழைப்பூ வந்து இருந்தது. சில மரங்களில் காய்கள் இருந்தன. ஆனால் வெகு உயரத்தில் இருந்தன. ஒரு மரத்தில் எட்டும் தூரத்தில் இருந்தது. ஆனாலும் இரண்டு காய்களை பறிப்பதற்குள் இரண்டுமுறை விழுந்து விட்டது. கால்களில் சேறு அப்பிக்கொண்டது. தோட்டத்தில் இருந்த குழாயில் கழுவிக்கொண்டு சமையற்கட்டிற்குள் மீண்டும் நுழைந்தது.
மீண்டும் எல்லாவற்றையும் முதலில் இருந்து ஆரம்பித்தது. வாணலி, எண்ணெய், உப்பு, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, வாழைக்காய், வறுவல். இப்படியாக அரைமணி நேரம். பின்னர் வாழைக்காய் வறுவல் தயாரானது. வறுவல் மிகவும் தீய்ந்துவிட்டது. வாணலியில் இருந்து பாத்திரத்திற்கு மாற்றியது. உணவு மேஜையில் பாத்திரத்தைக் கொண்டுவந்தது. மெல்ல ஒவ்வொரு துண்டாக எடுத்து உண்ண ஆரம்பித்தது. உப்பு அதிகம், காரம் அதிகம், தீய்ந்து வேறு போயிருந்தது. பாதி பாத்திரம் காலியானது. அதற்குமேல் அதனால் சாப்பிடமுடியவில்லை.
குடையை மடக்கியபடியே உள்ளே நுழைந்தார்கள், பூமய்யாவின் பெற்றோர்கள். ‘சிறுத்தை டிசைன்ல போர்வையைப் போர்த்தின மாதிரி, எவ்ளோ சிறுத்தைங்க. பார்க்க நல்லா இருந்ததுல்ல..” எனச் சொல்லிக்கொண்டே அம்மா வந்தார்.
மேசைமீது பூமய்யா அமர்ந்து இருப்பதைப் பார்த்து, “தங்கக்குட்டி நீ எழுந்திட்டியா? வா உனக்காக பழம், நாட்டுத்தேன் எல்லாம் வாங்கி வந்திருக்கோம்’’ என்றார் அப்பா அருகில் சென்றபடி.
பாத்திரத்தில் இருந்த வாழைக்காய் வறுவலை இருவரும் பார்த்தார்கள். “அட உன்னுடைய முதல் முயற்சியல்லவா இது?’’ என்றனர் இருவரும் மகிழ்ச்சியுடன். அவர்களும் மேசை மீது அமர்ந்து வறுவலைச் சுவைத்தனர்.
“ஆஹா..’’
“அற்புதம்..’’
“எவ்வளவு சுவை! எவ்வளவு சுவை!’’ என புகழ்ந்தார்கள்.
பூமய்யாவிற்கு அழுகை வந்தது. அப்பா தினமும் சமையல் செய்து தரும்போது அவ்வளவு சுவையாக இருக்கும், ஆனாலும் ‘இது சரியில்லை, அது சரியில்லை’ என பூமய்யா திட்டும். “என்னப்பா சமையல் இது?’’ என வெறுப்பாகப் பேசும். அதனை நினைத்ததால் மேலும் அழுகை வந்தது.
அவர்கள் இருவர் நடுவே சென்று “உங்கள் இருவரையும் நான் மிகவும் நேசிக்கின்றேன்’’ என்றது பூமய்யா.<