காணாமல் போன சூரியன்
வானத்தில் ஒரே பரபரப்பு. என்னாச்சு? ஏதாச்சு? என்று ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொண்டிருந்தனர். நிலவு, மேகம், நட்சத்திரங்கள் என அனைத்தும் ஒருவித சோகத்தில் இருந்தன.
என்றைக்குமே இப்படி நடந்ததே இல்லை. இன்றைக்கு மட்டும் என்னாச்சு. ஒருவேளை உடல்நிலை சரியில்லாம ஊருக்குப் போயிருக்குமோ? யாராவது தூக்கிட்டுப் போயிட்டாங்களோ? இல்ல தொலைஞ்சு போயிருச்சோ? என நிலவு தன்னைத்தானே கேட்டுக்கொண்டது.
என்னன்னா, இன்னைக்கு மதியம் ஆகியும் வானத்தில் சூரியன் வரவே இல்லை. எல்லோரும் ரொம்ப பயந்துட்டாங்க. வானத்து நண்பர்கள் எல்லாம் சூரியன் வரும் திசையான கிழக்கு நோக்கியே கவலைதோய்ந்த முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
நேரம் ஆக ஆக இவர்களுக்கு பயம் அதிகரித்துக் கொண்டே போனது. எப்படியாவது சூரியன் திரும்ப வந்துவிட, அனைத்தும் வேண்டிக் கொண்டன.
வானத்திலேயே இப்படியென்றால் பூமியில் சொல்லவே வேண்டாம். சூரியனை வேற்றுகிரவாசிகள் திருடிக்கொண்டு போய்விட்டனர் என்றும், பூமிக்கு ஏதோ தீங்கு வரப்போகுது என்றும் புரளிகளை அவிழ்த்துவிட்டது ஒரு கூட்டம்.
என்னதான் இருந்தாலும் குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம். ஏன்னா, அன்றைக்கு பள்ளிக்கு யாரும் போகவில்லை. பள்ளி விடுமுறை என்றால் கொண்டாட்டம்தானே.
குழந்தைகளுக்கு இருந்த ஒரே வருத்தம் என்னவென்றால் சூரியன் வராததால் பூமியெங்கும் இருட்டாக இருந்தது. நிலவு வெளிச்சம் அவ்வளவு போதுமானதாக இல்லை. இருட்டைக் காரணம் காட்டி குழந்தைகளை யாரும் விளையாட அனுமதிக்கவில்லை.
மதிய வேளையும் முடியப்போகிறது. இன்னும் சூரியன் வந்தபாடில்லை. செய்வதறியாது வானத்து நண்பர்கள் குழம்பிப் போயிருந்தனர்.
வெகுநேர யோசனைக்குப் பிறகு சூரியனை தேடிப் போவது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் யார் போவது என்பதில்தான் சிக்கல். நிலவினால் மீண்டும் திரும்பிப்போய்த் தேட முடியாது. நட்சத்திரங்கள் போக நினைத்தாலும் அவை மெதுவாகத்தான் செல்லும்.
என்ன செய்யலாம் என்று யோசித்தவர்களுக்கு, மேகங்களை அனுப்புவது சரியாக இருக்குமென்று தோன்றியது. மேகங்களும் சூரியனைத் தேடிச் செல்ல சம்மதித்தன. கிழக்கு, மேற்கு இரண்டு திசைகளிலும் வேகமாக பயணித்தன வெண்மேகங்கள்.
எல்லோருக்கும் ஒரு கவலை என்றால் நிலவுக்கு பல கவலைகள்.
சூரியன் காலையிலேயே வந்திருந்தால் அதனிடம் வேலையை ஒப்படைத்துவிட்டு நிலவு வீட்டுக்கு தூங்கப் போயிருக்கும். நேற்று மாலையிலிருந்து இன்று மதியம் வரை இன்னும் தூங்கியபாடில்லை. இன்னும் சிறிது நேரத்தில் மீண்டும் இரவு தொடங்கிவிடும். மீண்டும் கண்விழிக்க வேண்டும். ஒருவேளை சூரியன் நாளையும் வரவில்லையென்றால் நினைப்பதற்கே நிலவுக்கு அவ்வளவு பயமாக இருந்தது.
சரியாகத் தூங்காமல் தொடர்ந்து கண்விழிப்பது எவ்வளவு கடினம் என்று நிலவுக்கு நன்றாகவே தெரியும். கடினம் என்பதைவிட உடலுக்கு பாதிப்பும்கூட.
சூரியனைத் தேடிச் சென்ற மேகங்கள் வெகுதூரம் சென்றுவிட்டன. இன்னும் சூரியன் கிடைத்த பாடில்லை. அதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினம் ஒன்றும் இல்லை. அந்த மெல்லிய இருட்டில் சூரியன் பிரகாசமாகவே தெரியும்.
நேரம் ஆக ஆக, பசியால் நிலவு பாதி தேய்ந்துவிட்டது. இப்படியே போனால் தேய்ந்து தேய்ந்து நிலவு சிறியதாகி விடுமே என எல்லோரும் வருத்தப்பட்டனர்.
சூரியன் வராமல் நிலவினால் வீட்டுக்குப் போக முடியாது. இப்பொழுதெல்லாம் நிலவில் பாட்டி வடை சுடுவதும் இல்லை. வடை சுட்டால்கூட அதைத் தின்று பசியாற்றிக் கொள்ளலாம்.
கிழக்கே பார்த்துப் பார்த்து வானத்து நண்பர்களுக்கு கண் வலியே வந்துவிட்டது-.
வானத்தில் இப்படியென்றால் பூமியில் பரபரப்பிற்கும், பயத்திற்கும் பஞ்சமே இல்லை. சூரியனைக் காணவில்லை என பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் செய்திகள் வெளியிட்டன. அனைத்திலும் சூரியனே தலைப்புச் செய்தி.
இதுவரை சூரியனைப் பற்றி நினைக்காதவர்கள் இன்று அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.
மறுபுறம் அறிவியல் விஞ்ஞானிகள் சூரியனைக் கண்டறிய ராக்கெட்டுகளை அனுப்பத் தயாராகிக் கொண்டிருந்தனர்.
சூரியனைத் தாங்கள்தான் முதலில் கண்டுபிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக் கொண்டு தீவிரமாக செயலாற்றி வந்தனர்.
நிலவு தேய்ந்து தேய்ந்து கனல்விழி ஆகிவிட்டது.
கிழக்கையே பார்த்துக் கொண்டிருந்தவர்களின் கண்கள் கூசும் அளவிற்கு பிரகாசமாக, அதிக வெப்பத்தோடு எட்டிப் பார்த்தது சூரியன்.
இமைக்காமல் பார்த்தவர்களால் இப்பொழுது கண்களைத் திறக்கக் கூட முடியவில்லை. சூரியன் வந்துவிட்டதைப் பார்த்து அனைவரும் துள்ளிக் குதித்தனர்.
வானத்து நண்பர்கள் ஓடிச் சென்று சூரியனிடம், “எங்க போன? என்ன ஆச்சு? ஏன் இவ்வளோ லேட்? நாங்களெல்லாம் பயந்தே போயிட்டோம் தெரியுமா?’’ என்றன.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டே வேகமாக பாதி மேற்கிற்கு வந்துவிட்டது சூரியன்.
தான் வராததால் இன்னும் தூங்கச் செல்லாத நிலாவிடம் முதலில் மன்னிப்பு கேட்டது சூரியன்.
நிலவுக்கு வருத்தம் இருந்தாலும் சூரியன் திரும்ப வந்தது பெருமகிழ்ச்சிதான்.
“எங்க போன? ஏன் இவ்வளவு நேரம் வரவே இல்லை” என்றது நிலவு.
“அதுவா நேத்து பூமிய சுற்றி வந்ததால ரொம்ப சோர்வா இருந்துச்சா, அப்படியே போய் படுத்தேன்; நல்லா தூங்கிட்டேன். எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்னு எனக்கு தெரியவே இல்லை” என்றது சூரியன்.
“சரி, பரவாயில்லை. நீ திரும்ப வந்ததே போதும். விடுமுறையே இல்லாம வேலை செய்யற நீயும் பாவம் தானே” என்றன வானத்து நண்பர்கள்.
“நீ இன்னும் கொஞ்ச நேரம் வராம இருந்திருந்தா, சொல்லாமலேயே நிலவு வேலையை விட்டுப் போயிருக்கும்” என்றது குட்டி நட்சத்திரம்.
அனைவரும் பலமாக சிரித்ததில் வானமே குலுங்கியது.
“இன்றையிலிருந்து மாதத்திற்கு ஒரு நாள் நிலவுக்கு விடுமுறை” என்றது வால் நட்சத்திரம். அதை அனைத்து வானத்து நண்பர்களும் ஏற்றுக் கொண்டனர்.
நிலவு பாதித் தூக்கத்தோடு வீட்டுக்குச் சென்றது. அன்றைய இரவு விடுமுறையும் எடுத்துக்கொண்டது.
அதிலிருந்துதான் நிலவு தேய்ந்து தேய்ந்து மாதத்தில் ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொள்கிறது.
இப்படி ஒரு கனவு வந்தது கனல்விழிக்கு! அன்று பள்ளியில் பவுர்ணமி எனப்படும் முழுநிலவு (Full Moon Day )/ அமாவாசை (New Moon Day ) குறித்தெல்லாம் படித்தது அவளுக்கு இப்படி ஒரு கனவாகியிருக்கக் கூடும். மெல்ல கண் விழித்தவள் சாளரம் வழியே கிழக்கைப் பார்த்தாள். 5.45 மணிக்கெல்லாம் சூரியன் தன் கதிர்களைப் பரப்பி சோம்பல் முறித்து எழுவது போலிருந்தது. “சூரியன் எங்கே எழுகிறது? அடடா, பூமியோடு சேர்ந்து நாம் அல்லவா சூரியனை ஒருநாள் முழு சுற்று சுற்றிக் வந்திருக்கிறோம்” என்று எண்ணி சிரித்துக்கொண்டாள். “என்னடா, சிரிச்சிக்கிட்டே எந்திரிக்கிற” என்று கொஞ்சிய அம்மாவிடம்தான் மேற்கண்டபடி கனவை விவரித்தாள் கனல்விழி!<