இன்னும்… இன்னும்…
அருமை பெரியார் பிஞ்சுகளே!
கடந்த ஆகஸ்ட் 18 அன்று மிகப் புதுமையாக திண்டுக்கல்லில் நடந்திருக்க வேண்டிய பெரியார் பிஞ்சுகள் மாநாடுதவிர்க்க முடியாமல் தள்ளிப் போயிருக்கிறது. இதனால், ஆகஸ்ட் 18 அன்று பங்கேற்கத் தயாராக இருந்த பலருக்கு வருத்தமும், அன்றைக்கு வரமுடியவில்லையே என்று கவலை கொண்டிருந்த சிலருக்கு இப்போது மகிழ்ச்சியும் இருப்பதை அறிவோம். அதனால் என்ன… நீங்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் விரைவில் பெரியார் பிஞ்சுகள் மாநாட்டுத் தேதி அறிவிக்கப்படும். நாம் அங்கே சந்திப்போம்! புதுமையும், கொண்டாட்டமும் நிறைந்திருக்கும் அரங்கில் நாம் சந்திப்பது பெரும் மகிழ்ச்சிக்குரியது தானே! உங்களுக்காகவே பெரியார் பிஞ்சு வெளியீடுகளும் வந்திருபதை பின் அட்டையில் கண்டு மகிழ்ந்திருப்பீர்கள்.
இந்தச் சூழலில் கடந்த மாதத்தில் தான் இரு பெரும் இழப்புகளை நாம் எதிர்கொண்டோம். நம் பாசத்திற்குரிய கலைஞர் தாத்தா தன் 94-ஆம் வயதில் மறைவுற்றார். ஓய்வறியா உழைப்பாளியாகவும், பெரியார் தாத்தாவின் கொள்கை வழி நின்ற போராளியாகவும், நம் ஆசிரியர் தாத்தாவின் ஆருயிர் சகோதரராகவும் திகழ்ந்தவர். அவரால் இந்த சமூகம் பெற்ற பயன்களை நாம் அறிவோம்தானே! அந்தப் பாதையில் இன்னும் வேகமாக நாம் பயணிக்க வேண்டும் என்றும் உறுதியேற்போம்!
மற்றொன்று, நம் சேரத்து உறவுகளான கேரள மக்கள் கடும் மழையினாலும், வெள்ளத்தினாலும் சந்தித்த இழப்புகள்! அவற்றுக்காக நீங்கள் வருந்தியதையும், அதை ஈடுகட்ட உங்களாலான உதவிகளை நீங்கள் செய்ததையும் அறிந்து மகிழ்கிறோம். இன்னும் கூட அவர்களுக்கு நம் கரங்கள் தேவைப்படுகின்றன… அன்புணர்வோடு நீட்டுவோம்!
நிறைவாக, ஒரு மகிழ்ச்சிச் செய்தியையும் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறோம். மீண்டும் நம் ஆசிரியர் தாத்தா, உங்களோடு உரையாட, உங்களுக்காக கடிதம் எழுதத் தயாராகிவிட்டார்கள். அடுத்த இதழ் முதல் நீங்கள் ஆசிரியர் தாத்தாவிடம் கேள்வியும் கேட்கலாம்.. உங்களுக்குப் பதில் இருக்கும்! எதிர்பாருங்கள்… அக்டோபர் இதழில் இதெல்லாம் கிடைக்கும்!!
இந்த மாதம் நம் அருமைத் தாத்தா பெரியார் பிறந்த மாதம் – ஆம், புத்தாடைகளோடு, கொண்டாட்டமாக செப்டம்பர் 17ஆம் நாளுக்குத் தயாராகிவிட்டீர்களா? எப்படியெல்லாம் புதுமையாகக் கொண்டாடினீர்கள் என்பதையும் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.
புரட்சிகரமான பெரியார் பிறந்தநாள் வாழ்த்துகள்!