மர்மரா
– விழியன்
விடிய இன்னும் கொஞ்ச நேரமே இருந்தது. நவீனன் இரவு வெகுநேரம் வானத்தைப் பார்த்தபடியே தான் விழித்து இருந்தான். அவன் விநோதமான ஓர் இடத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். அந்த உயரமான மரத்தின் மேலே அவன் மட்டும் உறங்குவதற்கான ஏற்பாடு இருந்தது. அதில் தான் உறங்கிக்கொண்டிருந்தான். அவனுடைய வீடு மட்டும் ஊரைவிட்டு வெளியே இருந்தது. அவன் வீடு மட்டுமே அங்கே இருந்தது. நவீனனின் வீட்டை ஒட்டி சின்ன மலைக்குன்று. இன்னொரு பக்கம் அடர்த்தியான மரங்கள் நிறைந்த காடும் இருந்தது. இன்று நவீனன் அந்த மரத்தின் மீது தனியாக உறங்கிக்கொண்டு இருக்கின்றான். அவனுடைய அப்பாவும் அம்மாவும் வெளியூர் சென்று இருக்கின்றார்கள். அவன் தனியாக இருப்பதாக சொல்லிவிட்டான். இந்த ஆண்டு ஏழாம் வகுப்பிற்கு செல்ல இருக்கின்றான். வீட்டில் தனியாக இருக்க அவனுக்குப் பயமில்லை. கூடவே இரண்டு நாய்களும் மூன்று மாடுகளும் உள்ளன. அவற்றையும் பார்த்துக்கொள்ள வேண்டும். அவனே சமைத்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டான். தேவை என்றால் ஊருக்குள் சென்று முனைக்கடையில் சாப்பிட்டுக்கலாம். அங்கே கணக்கு வைத்துக்கொள்வார்கள். அவனுடைய தூரத்து வழி பாட்டி தன் வீட்டில் தங்குமாறு கேட்டார். ஆனால் நவீனன் மறுத்துவிட்டான்.
எழுந்துகொள்ளலாம் என்று நினைத்தபோது இரண்டு கண்கள் அவனை கவனிப்பதாக உணர்ந்தான். இந்த இடத்தில் அதுவும் மரத்தின் மீது யார் இருப்பார்கள்? குரங்கு? அது இந்த பகுதியிலேயே இல்லையே. சரி என்ன தான் பார்ப்போமே என கண் திறந்தான். அவன் எதிர்ப்பார்க்காத விலங்கு அங்கு நின்றுகொண்டிருந்தது. அது ஓர் ஒட்டகச்சிவிங்கி. அவன் உறங்கிக்கொண்டிருந்த மரத்தின் உயரத்திற்கு அதன் தலை வந்தது. ஒரு நிமிடம் பயந்துவிட்டான். அதனை புத்தகங்களில் பார்த்திருக்கின்றான். நேரில் பார்த்தது கூட இல்லை. அது அமைதியாகத் தான் இருந்தது. அதன் முகம் அவனுக்கு அருகே தான் இருந்தது. மெல்ல கை நீட்டித் தடவிக்கொடுத்தான். இதற்கு முன்னர் நாயை, மாட்டை, கழுதையை, ஒரு முறை குரங்கைக்கூட தடவி இருக்கின்றான். ஒட்டகச்சிவிங்கியின் தோள் மிகவும் மென்மையாக இருந்தது. வீட்டிற்கு வந்தவர்களுக்கு முதலில் தண்ணீர் கொடுக்க வேண்டும் என அம்மா அடிக்கடி சொல்வார்கள். கடகடவென மரத்தில் இருந்து கீழே இறங்கினான். நாய்கள் குலைத்துக்கொண்டு இருந்தன. அதனைப் பார்த்து ஒட்டகச்சிவிங்கி நம் நண்பன் தான் கத்தாதே என்றதும் அடங்கின. மாட்டுத் தொழுவத்தில் இருந்த தொட்டியில் நீரை ஊற்றினான். குடி என்றான் தொட்டியைக் காட்டி. ஒட்டகச்சிவிங்கி தலையை சிரமப்பட்டு கீழே இறக்கி தண்ணீரைக் குடித்தது.
நீரைக் குடித்துவிட்டு ஒட்டகச்சிவிங்கி அப்படியே நின்றது. நவீனனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எங்கிருந்து வந்திருக்கும்? விமானத்தில் இருந்து குதித்து இருக்குமோ? கப்பலில் வந்திருக்குமோ? என யோசித்தான். ஒட்டகச்சிவிங்கி ஆப்ரிக்காவில் வசிக்கும் என வாசித்த நினைவு. தன் பாடப்புத்தகத்தை திருப்பி ஒட்டகச்சிவிங்கி பற்றி ஏதேனும் தகவல் இருக்கின்றதா எனப் பார்த்தான். என்ன சாப்பிடும் என்று அவனுக்கு தெரியவில்லை. அது ஏற்கனவே மரத்தில் இருந்து இலைகளைச் சாப்பிட ஆரம்பித்து இருந்தது. புல்லை உண்ணுமா என அவனுக்கு தெரியவில்லை.
ஊருக்குள் சென்ற தன் நண்பன் விமலுக்கு மட்டும் தகவலைக் கூறினான். டேய், ஒட்டகச்சிவிங்கியாடா? நெஜமாவா? என நம்பவே இல்லை விமல்; நேரில் பார்த்தபோது தான் நம்பினான். அவன் தூரத்தில் பார்த்தே உற்சாகம் அடைந்தான். ஊரில் இருக்கும் பெரியவர்கள் யாருக்கும் சொல்லவில்லை. ஊருக்குள் ஒட்டகச்சிவிங்கியை அழைத்துவர முடியாது என உணர்ந்தார்கள். ஏன் என்றால் மின்சாரக் கம்பிகளில் அதன் தலை மாட்டிக்கொள்ளும். அவன் வகுப்பு சகாக்களுக்கு தகவல் பரவியது. சிறுவர்கள் மட்டும் வந்து பார்த்தார்கள். தைரியமான சிறுவர்களும் சிறுமிகளும் அதன் காலைத் தொட்டுப் பார்த்தார்கள். ஏய், யாரும் பெரியவங்ககிட்ட சொல்லாதீங்கப்பா! என காதில் பேசிக்கொண்டார்கள். அவர்களுடைய தம்பி, தங்கைகளை மட்டும் அழைத்து வந்தார்கள். இப்படியாக அந்த நாள் மாலையே வந்துவிட்டது. விமல் மட்டும் அன்று இரவு நவீனனுடன் தங்கினான். அந்த மரத்தின் மீது ஏறி இருவரும் உறங்கினார்கள்.
மறுநாள் காலை சித்ரா நவீனனின் வீட்டை நோக்கி ஓடி வந்தாள். இது பேரு மர்மரா. இது குண்டலூர் வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து தப்பிச்சு வந்திருக்கு. பேப்பர்ல செய்தி போட்டிருக்காங்க என்றாள். திரும்ப அங்கே பத்திரமாக விடுவது தான் சரி என்று மூவரும் முடிவிற்கு வந்தார்கள். இதனை இங்கே வளர்ப்பது சரிவராது என்று புரிந்தது. அதற்குள் ஊரில் இருந்து சிறுவர்கள் வந்துவிட்டார்கள். மர்மராவை சரணாலயத்தில் விட்டுவிடுவது என கூட்டாக முடிவு செய்தார்கள். அந்த ஊரில் நம்பகமான முகில் அண்ணனுக்கு மட்டும் தகவல் கொடுத்தார்கள். அவர் எந்த வழியாக கொண்டு செல்லலாம் என்று வழியைக் கூறினார். மொத்தமாக பத்து சிறுவர்கள் மட்டும் மர்மராவுடன் நடந்தே செல்வது என முடிவு செய்தனர். வீட்டில் எல்லோரும் சொல்லிவிடவே மர்மராவை வழியனுப்ப ஊரே திரண்டு வந்தது. முகில் அண்ணனும் அந்த குழுவுடன் சென்றார். நவீனன் என்ன சொன்னாலும் அதை மட்டுமே மர்மரா கேட்டது. மாலை சரணாலயம் மூடும் முன்னர் அங்கே சேர்ந்தார்கள். நிர்வாகத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். நவீனனை வெகுவாக பாராட்டினார்கள். மர்மரா வாசலிலேயே நின்றது. பராமரிப்பு பணியில் இருப்பவர்கள் யார் அழைத்தாலும் நகரவே இல்லை. நவீனன் வந்து மர்மரா உள்ள போ என்று சொல்லி கை நீட்டியதும் மெல்ல நடந்து உள்ளே சென்றது.
(கதைக்குறிப்பு: – மர்மரா என்பது ஆசியா மற்றும் அய்ரோப்பாவுக்கு இடையே அமைந்துள்ள ஒரு உள்நாட்டுக் கடல். உலகின் மிகச்சிறிய கடலும் இதுவே)