காரணமின்றி ஏற்காதீர்கள் குறட்டை விடுபவரை எழுப்பியவருக்கும் குறட்டை வருமா?
– சிகரம்
ஒருவர் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவரை எழுப்ப மாட்டார்கள். காரணம் அந்தக் குறட்டைப் பழக்கம் எழுப்புபவரையும் தொற்றிக் கொள்ளும் என்று அஞ்சுவர்.
ஆனால், இதில் சிறிதுகூட உண்மையில்லை. குறட்டை விடுதல் என்பது, பல காரணங்களால் ஒருவருக்கு வருகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் பெரும்பாலோர் குறட்டை விடுவர். குறட்டை விடுவது மெல்லிய ஓசையுடனும், ஒரே சீராக இருந்தால் விடுபவருக்கு உடல் நிலையில் பாதிப்பில்லை. குறட்டை பல்வேறு ஓசையுடன் விடப்பட்டால், விடுபவர் உடலைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். காரணம், அது உடலில் வேறு நோய்கள் இருப்பதன் வெளிப்பாடாகவும் இருக்கும்.
உண்மை இப்படியிருக்கும்போது, எழுப்பியவருக்குக் குறட்டை ஒட்டிக் கொள்ளும் என்பது மூடநம்பிக்கையாகும். எழுப்புகிறவர் யார் என்று பார்த்தா குறட்டை தொற்றும்? அது ஒரு தொற்றுநோய் அல்ல. அப்படியே தொற்றுநோய் என்று வாதத்துக்கு வைத்துக் கொண்டால், அது அருகில் உள்ளவர்களைத் தொற்றும் என்றுதான் கூற வேண்டுமே தவிர எழுப்புகின்றவரைத் தொற்றும் என்று கூறுவது தவறு அல்லவா? .
குறட்டை தொற்றுவதில்லை. எழுப்பினாலும் தொற்றாது. உறக்கத்தில்தான் பெரும்பாலும் குறட்டை வருவதால், ஆழ்ந்து உறங்குகின்றவரை எழுப்பக்கூடாது என்பதற்காக இப்படி ஒரு பயத்தை உண்டாக்கியிருப்பர். மற்றபடி இதில் எந்த உண்மையும் இல்லை.
அறிவாளியின் பிள்ளை அறிவாளியா?
அறிவாளியின் பிள்ளை அறிவாளியாய் இருப்பார் என்று எண்ணுவதும் நம்புவதும் அறியாமையாகும்.
அறிவு என்பது பிறப்பால் தீர்மானம் ஆவதைவிட வளர்ப்பால், சுற்றுச் சூழலால், முயற்சியால்தான் பெரும் அளவு தீர்மானம் ஆகிறது.
பார்ப்பனர்கள் அறிவாளி என்ற ஒரு தவறான கருத்து நீண்ட காலம் சமுதாயத்தில் நிலவியது. அது முற்றிலும் தவறு என்று தற்போது உறுதி செய்யப்பட்டு விட்டது. பார்ப்பனர்கள் பரம்பரையாய்ப் படித்து வந்தமையாலும், அவர்கள் சூழல் அதற்கேற்ப அமைந்தமையாலும் அவர்கள் அறிவுத் திறன் பெற்றோர் என்று கருதப்பட்டது. அந்த வாய்ப்பு இன்று எல்லோருக்கும் கொடுக்கப்பட்டதால் இன்று சமுதாயத்தில் பல ஜாதி மக்களும் அறிவும் ஆற்றலும் பெற்று விளங்குவது கண்கூடு.
இன்னும் சொல்லப் போனால் பார்ப்பனர்களை-விட பார்ப்பனர் அல்லாதவர்களே அறிவிலும், ஆற்றலிலும் சிறந்து விளங்குகின்றனர். நடிப்பு என்றால் ஒரு சிவாஜிகணேசன், படிப்பு என்று சொன்னால் அண்ணா, கி. வீரமணி போன்றோர். எழுத்து என்றால் கலைஞர், இயக்கம் என்றால் பாரதிராஜா, இசையென்றால் இளையராஜா, ஏ. ஆர். ரகுமான், கவிதையென்றால் பாரதிதாசன், கண்ணதாசன், வைரமுத்து, அப்துல் ரஹ்மான் என்று பலர். பார்ப்பன இனத்தில் பாரதியை மட்டுமே காட்டமுடியும்.
வாழ்வியல் ஆய்வில் வள்ளுவர், வள்ளலார், பெரியார். இவர்கள் எல்லாம் தமிழர்களே, பார்ப்பனர் அல்லாதவர்களே! பாமரக் குடும்பத்தில் பிறந்தவர்களே!
இன்றைக்குக் கல்வியில், கண்டுபிடிப்பில் சாதனை படைக்கின்ற பலரும் பார்ப்பனர் அல்லாதவர்களே! அணுவிஞ்ஞானி அப்துல்கலாம் அதற்குச் சரியான எடுத்துக்காட்டு. அதிலும் படிப்பறிவு அதிகம் இல்லாத அறிவுத் திறன் அதிகம் வெளிப்படாத பெற்றோர்க்குப் பிறந்தவர்களே!
உலகில் யாரும் அறிவில் குறைந்தவர்கள் இல்லை. ஒருவருக்கு ஒருவிதத்தில் அறிவு இருந்தால் இன்னொருவருக்கு இன்னொரு விதத்தில் இருக்கும். சிறந்த பேச்சாளருக்கு எழுத வராது. சிறந்த விஞ்ஞானிக்கு ஓவியம் வரைய வராது. சிறந்த ஓவியனுக்குப் படிக்கத் தெரியாது!
எந்த வகையில் அறிவு பயன்படுத்தப்படுகிறதோ அவ்வகையில் அது மிளிருகிறது; சாதிக்கிறது. அவ்வளவே!
உண்மை நிலை இப்படியிருக்க பெற்றோர் அறிவுதான் பிள்ளைக்கு என்பது, குலக் கல்வியைக் கொண்டு வர நினைப்போரின் கோணல் புத்தியாகும்!
அறவே படிக்கத் தெரியாதவர்களின் பிள்ளைகள் அறிவிற் சிறந்த படிப்பாளியாகவும், சிறந்த அறிஞர்களின் பிள்ளைகள் பயனற்ற பேர்வழிகளாவும் இருப்பதை இன்றுகூடக் காணலாம்.
பாரதிராஜாவின் தந்தை தாய், வைரமுத்துவின் பெற்றோர், கலைஞர் மு.கருணாநிதியின் பெற்றோர் என்று பட்டியல் போட்டால் சாதாரணமானவர்களின் பிள்ளைகளே சாதித்திருக்கிறார்கள் என்பது விளங்கும்.
ஆறு தலைமுறையின் தாக்கம் ஒரு பிள்ளைக்கு உடல்ரீதியாக வரும் என்பது உண்மை. அதனால் பெற்றோர் அறிவு பிள்ளைக்கு என்பது தவறாகும்.
தலைப்பிள்ளை தலையில் ’மை’ இருக்குமா?
இந்த நம்பிக்கை கிராமப்புறங்களில் இன்றும் காணப்படுகிறது. மந்திரம் செய்கின்றவர்கள் மூத்த பிள்ளையின் தலையில் உள்ள மையை எடுத்து தன்னுடைய மந்திர சக்திக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகின்றனர்.
இதனால் மூத்த பிள்ளை இறந்தால் அதைப் புதைக்க மாட்டார்கள். எரித்து விடுவார்கள். பெரியவர்களிலும் மூத்தவர்களைப் புதைக்க-மாட்டார்கள். எரித்து விடுவார்கள்.
புதைத்தால் மந்திரவாதி தோண்டி எடுத்து தலையில் உள்ள மையை எடுத்து விடுவான் என்பது அவர்களின் நம்பிக்கை.
ஆனால், இந்நம்பிக்கை முற்றிலும் தவறானது. தலையில் மூளை மட்டுமே உள்ளது. மை இல்லை. மூத்த பிள்ளை, அடுத்த பிள்ளை என்ற பாகுபாடு எதுவும் உடலமைப்பில் இல்லை. எல்லா பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரியான உடல் அமைப்புதான்.
மந்திரமே பொய் என்னும்போது, இதில் மை என்ன மை? எல்லாமே அறியாமை!