18 தந்தை பெரியாரின் கதை
– சுகுமாரன்
ஓவியம்: கி.சொ
பெரியாரின் எழுத்துத் திறமை!
பெரியாரின் எழுத்துகளும், புத்தகங்களும் மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு என்று சிறப்பாகப் பாராட்டப்பட்டன.
பெரியார் தன் கருத்துகளைப் பரப்ப, குடிஅரசு, விடுதலை, திராவிடன், உண்மை போன்ற பத்திரிகைகளை வெளியிட்டார். ஆங்கிலத்திலும் ரிவோல்ட், ஜஸ்டிசைட், மாடர்ன் ரேசனலிஸ்ட் போன்ற பத்திரிக்கைகளை நடத்தினார்.
சுயமரியாதைப் பிரசுரம், பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் ஆகியவற்றின் மூலம் ஏராளமான புத்தகங்களை வெளியிட்டார். அவை மக்களைச் சென்று சேரவேண்டும் என்பதற்காக நாலணா, எட்டணா, ஒரு ரூபாய் என்று விலை வைத்தார்.
பெரியாரின் எழுத்துகளும், நூல்களும் தடை செய்யப்பட்டன. பொன்மொழிகள் என்ற நூலுக்காக பெரியார் சிறைத்தண்டனை அடைந்தார். அவருடைய பத்திரிகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நூல்கள் தடை செய்யப்பட்டுள்ளன. விடுதலை பத்திரிகைக்கு ஜாமீன் கட்டச் சொல்லி பெரியாரின் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குடிஅரசு மற்றும் புரட்சி ஏடுகளுக்கு பெரியாரின் சகோதரியும் சகோதரரும் சிறைத் தண்டனை பெற்றுள்ளனர்.
பெரியார் புலவர் அல்ல. இலக்கணம் தெரியாது. எழுத்துப் பிழைகள் இருக்கும். காற்புள்ளி, முற்றுப்புள்ளி எதுவும் இருக்காது நீண்ட சொற்றொடர்கள் இருக்கும். ஆனால், தமிழ்மொழிக்கு புதிய சிந்தனைகளைச் சேர்த்த பெருமை பெரியாரின் எழுத்துக்கே உண்டு.
எந்த அடக்குமுறையும் பெரியாரின் துணிச்சலான எழுத்துகளைத் தடைசெய்ய முடியவில்லை. ஆம், பெரியார் எழுத்துப் புரட்சி செய்தவர்.
பெரியாரின் பேச்சுத்திறன்
உலக வரலாற்றில் நாவன்மையின் சிறப்புக்கு ஆண்டனியை எடுத்துக்காட்டாகக் கூறுவார்கள்.
தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணாவையும், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும் சிறந்த மேடைப் பேச்சாளராகப் போற்றுவார்கள்.
இந்த வரிசையில் வைத்துப் பாராட்டத்தக்கவர் நம் பெரியார்.
பெரியாரின் பேச்சு படித்தவர்களுக்காக அல்ல. படிக்காத பாமர மக்களுக்காகப் பேசப்பட்டது. அதனால் அதில் எளிமை இருக்கும். அலங்காரம் இருக்காது. கொச்சை மொழியில் இருக்கும். பண்டிதத் தன்மை துளியும் இருக்காது.
பெரியாரைப்போல் கூட்டங்களில் பேசிய தலைவரை உலகத்தில் பார்க்க முடியாது.
1919 முதல் 1973ஆம் ஆண்டு வரை 8,200 நாள்களுக்கு மேல் சுற்றுப் பயணம் செய்து, சுமார் 13,19,662 கி.மீ சுற்றிவந்து 10,700 கூட்டங்களில் 21,400 மணிகள் சொற்பொழிவாற்றியவர் பெரியார்! அப்பப்பா, தலை சுற்றுகிறதா?
ஆம், தமிழ்நாட்டில் பெரியாரின் கால்படாத இடம் இல்லை. மேடை போடா ஊர் இல்லை.
பெரியார் மேடையில் மக்களிடம் நேரில் உரையாடுவது போல் வாதம் செய்து பேசுவார். எளிய உதாரணம் கொடுத்தும் பேசுவார். மக்கள் பயன்படுத்தும் பழமொழிகள், வார்த்தைகள், உச்சரிப்புகளுடன் பேசுவார்.
அய்ந்து மணி நேரம்கூடப் பேசுவார். மலையிலிருந்து அருவி கொட்டுவதுபோல் பேசுவார். பேச்சுக்கிடையில் ஏன்? எதற்காக? என்று கேள்விகளை அடுக்குவார். கல்கி ஒருமுறை, பெரியார் பேச்சு மட்டும்தான் எத்தனை மணி நேரமானாலும்கூட இருந்து கேட்க முடியும் என்று புகழ்ந்தார். அந்தக் காலத்தில் காற்று பெரியாரின் பேச்சொலி மணம் கலந்தே தமிழ்நாட்டில் வீசியது.