வடகிழக்குப் பருவமழை
இயற்கை
– சரவணா ராஜேந்திரன்
இந்திய தீபகற்பத்தில் மே இறுதிவாரம் தென்மேற்கு பருவமழை தன்னுடைய வருகையைப் பதிவு செய்த பிறகு செப்டம்பர் முதல் வாரத்தில் மெல்ல மெல்ல விடைபெற்றுவிடும். நாம் முன்பு படித்தது போல் இந்தியாவின் மேற்குக் கடற்கரை தொடங்கி டில்லி இமயமலைச் சாரல் பகுதிகள், வடமத்திய இந்தியா வரை மழையைப் பெற்றுவிடும். ஆனால், இந்தியாவில் பெரும்பாலான சமவெளிப் பகுதிகளான தக்காணம், தென் மத்திய இந்தியா, கிழக்குப் பகுதிகளை தென் மேற்கு பருவக்காற்று எட்டிப் பார்க்காது. அப்படி என்றால் நமது தமிழகத்தில் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகள் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குக் கரைப்பகுதிகளில் எப்படி விவசாயம் பார்ப்பது என்ற கேள்விக்கு பதிலாக, செப்டம்பர் மாத இறுதியில் தென்கிழக்கு பருவமழை முடிந்து கொண்டிருக்கும் போது நமக்கு வடகிழக்கு பருவமழை கிடைக்கிறது.
வடகிழக்குப் பருவமழை ஏற்படக் காரணம்
வடகிழக்குப் பருவமழையை குளிர்காலப் பருவமழை என பருவநிலையை ஆய்வு செய்யும் வானியல் ஆய்வாளர்கள் பெயரிட்டு அழைக்கின்றனர். புவியின் வட அரைக்கோளக் குளிர்காலப் பருவத்தில் சூரியனின் வெப்பம் தென் அரைக்கோளத்தின் மேல் விழுகின்றது. இதனால் புவியின் தென் அரைக்கோளப் பகுதியில் வளிமண்டலம் சூடாகி மேலெழும்புகிறது; அப்பகுதியில் தாழ்வழுத்தம் ஏற்படுகிறது. அதை நிரப்ப வட அரைக்கோள காற்று மிகவும் வேகமாக தென்பகுதியை நோக்கி வருகிறது. இதை ஆங்கிலத்தில் (cold surge) அதாவது குளிர் கிளம்பல் என்று அழைக்கின்றனர்.. இக் குளிர் கிளம்பிய காற்று, ஈரப்பதத்தையெல்லாம் சேகரித்துக் கொண்டு இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின் வட பகுதி, இலங்கை, இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதி ஆகிய இடங்களில் மழையாகப் பொழிகின்றது.
வடகிழக்குப் பருவமழை சென்னை உள்ளிட்ட கிழக்கு கடற்கரை நகரங்களில் பெய்யும் கோடை மழையைப் போன்றது அல்ல. இது முழுக்க முழுக்க வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலில் இருந்து கொண்டுவரும் மேகங்களால் கிடைக்கும் தொடர்மழை ஆகும். அக்டோபர் முதல் வாரம் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். இதனால் வட இந்தியாவில் இருந்து காற்று தெற்கு நோக்கி வீசத் தொடங்குகின்றது. வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி வீசுவதால் இக்காற்றை வடகிழக்கு பருவக் காற்று என்கிறோம்.
இந்தியாவில் இது தக்காண பீடபூமிக்கும் தமிழகத்திற்கும் மழையை கொண்டு வருகிறது. இந்தக் காற்றினால் கரையோர ஆந்திரப்பிரதேசம், இராயலசீமா, தமிழகத்தின் கரையோரம், பாண்டிச்சேரி மற்றும் இலங்கையின் கிழக்குக் கரையோரப் பகுதிகள் மழை பெறுகின்றன.
தென்மேற்குப் பருவக் காற்றினால் குறைந்த அளவு மழையைப் பெறும் தமிழகக் கரையோரப் பகுதிகள் வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்றினால் 60% மழையைப் பெறுகின்றன. தமிழகத்தின் உள் பகுதிகள் 40%, – 50% மழையை வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றினால் பெறுகின்றன. தென்மேற்குப் பருவக் காற்றினால் மழையைப் பெறும் கர்நாடகம், கேரளா, இலட்சத்தீவுகள் போன்றவை 20% மழையை வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றினால் பெறுகின்றன. வடகிழக்குப் பருவமழை தான் உலகிற்கு வழங்கப்படும் 60 விழுக்காடு நெல்லுக்கு முக்கிய காரணியாக உள்ளது. இந்தியாவில் தமிழகம் தொடங்கி ஆந்திரா, ஒரிசா, மேற்குவங்கம், பங்களாதேஷ், பர்மா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதி நாடுகளில் இந்த மழையால் நெல்விளைச்சல் ஏற்படுகிறது, மக்கள் தொகை அதீத அடர்த்தியாக உள்ள நாடுகளும் இவைதான். இந்த மழை சரியாக பெய்யாவிட்டால் உலகின் பெருளாதாரம் நிலைகுலைந்துவிடும், 1790 முதல் சில ஆண்டுகள் இந்தோனேசியாவில் ஏற்பட்ட மிகப் பெரிய எரிமலை வெடிப்பினால் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஈரப்பதம் உருவாகவில்லை. இதன் காரணமாக சில ஆண்டுகளாக வடகிழக்குப் பருவமழை சரிவரப் பெய்யவில்லை. ஆதலால் அப்போது கடுமையான பஞ்சம் ஏற்பட்டது.
அது இந்திய வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட முக்கியப் பஞ்சங்களில் மிகவும் கோரமான பஞ்சமாகும். இந்தப் பஞ்சத்தில் இறந்தவர்களின் உடல்கள் முக்கியமாக ஆந்திரா பகுதிகளில் கிராமம் கிராமமாக அப்படியே கிடந்தன. கழுகுகளும், நாய்களும் இதர மிருகங்களும் மனிதர்களின் உடலைத் தின்ற பிறகு ஆங்காங்கே மண்டையோடுகள் சிதறிக் கிடந்ததால் இதை மண்டையோடு பஞ்சம் என்று அழைப்பார்கள்.
1789 தொடங்கி தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் தென்மேற்குப் பருவமழை பொய்த்ததால் இப்பஞ்சம் ஏற்பட்டது. அய்தராபாத், தெற்கு மராட்டிய பகுதி, தக்காணம், குஜராத், மேர்வார் ஆகிய பகுதிகள் இப்பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. அப்போது தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மழையினால் போதிய அளவு தண்ணீர் கிடைத்த காரணத்தால் சென்னை உள்ளிட்ட தமிழகப் பகுதிகள் இந்தப் பஞ்சத்தால் அவ்வளவாக பாதிக்கப்படவில்லை, இருப்பினும் இன்றைய வேலூர் உள்ளிட்ட வடக்கு தமிழக மாவட்டங்கள் சிறிது பாதிக்கப்பட்டன. இந்தியாவின் தக்காணப் பீடபூமி பகுதி மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பஞ்சத்தினால் மடிந்தனர். ஆந்திராவில் சிறீகாகுளம் தொடங்கி கர்னூல், கடப்பா, அய்தராபாத் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. முக்கியமாக கர்னூல், கடப்பா போன்ற மாவட்டங்கள் முற்றிலுமாக காலியாயின. அங்கிருந்தவர்கள் கர்நாடகா, தமிழகம் போன்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வந்துவிட்டனர். அப்போது பணக்காரர்கள்_ஏழைகள் என அனைவரும் இந்தப் பஞ்சத்தால் பரதேசிகளாக மாறி புலம்பெயர்ந்த ஊர்களில் கூலிவேலை செய்து வாழ்ந்தார்கள். இதிலிருந்தே வடகிழக்குப் பருவமழை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம்.
தென்மேற்கு, வடகிழக்கு ஆகிய இந்த இரண்டு பருவ மழைகளுமே நமக்கு மிகவும் அவசியமானவையாகும்.
ஆனால் நமது சுற்றுப்புறத்தை நாம் தொடர்ந்து சீர்கெடுத்து வருவதன் காரணமாக இந்த இரண்டு பருவ மழைகளின் மழையளவுகளும் குறைந்து கொண்டு வருகிறது. மரங்களை தொடர்ந்து வெட்டிக்கொண்டு வருவதால் காற்று மாசு ஏற்பட்டு, பருவக்காற்றால் தரைப்பகுதிக்கு வரும் மேகங்களை குளிர்விக்க ஏதுமின்றி அவை மழை தராமலேயே கலைந்துசென்று விடுகின்றன. இதனால் மழையின் அளவு குறைந்து வருகிறது என்பதை ஊடகங்கள் வாயிலாக தெரிந்துகொள்கிறோம்.
நமது பூமியை வாழவைக்க பருவமழை தேவை. பருவ மழைக்கும் நமது தனிமனித சுற்றுப்புறப் பேனலுக்கும் நேரடித்தொடர்பு உண்டு, எதிர்கால உலகை ஆளும் நாம் சுற்றுப்புறத்தைப் பேணிக்காத்து பருவமழைக்குப் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இல்லை என்றால் அழகான நீல வண்ண பூமிப்பந்து இன்னும் சில நூறு ஆண்டுகளில் செவ்வாயைப் போன்று மஞ்சள் வண்ண பாலைவனக்கோளாக மாறிவிடும்.
மரங்களை வளர்ப்போம்! மழையைப் பெறுவோம்! இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்! சுற்றுச்சூழலைச் காப்போம்!.