சின்னக் சின்னக் கதைகள்
திருந்து
தோட்டத்தில் ஒரு பழச்செடி. வெட்டுக்கிளி ஒன்று செடியின் இலைகளைக் கடித்துத் தின்றுகொண்டிருந்தது.
பழம் தின்னப் பறந்து வந்த பச்சைக்கிளி, அதைப் பார்த்தது.
வெட்டுக்கிளியின் செயல் அதற்கு வேதனையாய் இருந்தது.
தயவு செய்து இலையைத் தின்னாதே! பழம் இருக்கிறது, அதைச் சாப்பிடு என்றது பச்சைக்கிளி.
நீ பச்சைக்கிளி, நான் வெட்டுக்கிளி. நீ பழத்தைத் தின்னு! நான் இலையைத் தின்கிறேன்! என்னைத் தடுக்காதே! நான் பசியாக இருக்கிறேன்! என்று ஆணவமாய்ச் சொன்னது வெட்டுக்கிளி.
இந்தச் செடி நமக்குத் தின்னப் பழம் கொடுக்கிறது. அதை விட்டுட்டு இலையைத் தின்றுச் செடியை அழிக்காதே! என கெஞ்சியது பச்சைக்கிளி.
பச்சைக்கிளியின் பேச்சை ஏற்காத வெட்டுக்கிளி செடி அழியுதேன்னு நீ ஏன் கவலைப்படுறே! இது அழிஞ்சா இன்னொரு செடியிருக்கு! உன் வேலையைப் பாரு என்றபடி இலைகளைத் தின்றுகொண்டே இருந்தது வெட்டுக்கிளி.
அய்யய்யோ! சொல்லச்சொல்ல கேட்காமல் பழச்செடியை அழிக்குதே இந்த வெட்டுக்கிளி. இந்த அநியாயத்தை எப்படித் தடுப்பது என்று புலம்பியது பச்சைக்கிளி.
திடீரென எங்கிருந்தோ வந்த ஓணான் லபக் என வெட்டுக்கிளியைப் பிடித்து விழுங்கியபடி நடந்தது.
இதைப் பார்த்த பச்சைக்கிளி தன் கிளி மொழியால் சொன்னது…
திருந்த மறுப்பவனுக்கு
வருந்தும் முடிவு வரும்!