சின்னச் சின்னக் கதைகள்
தண்டனை
மலை அடிவாரத்திற்கு ஊரில் உள்ள ஆடுகளையெல்லாம் மேய்க்க ஓட்டிப் போனார் ஒரு முதியவர். அவர் கவனிக்காத நேரத்தில் வயலுக்குள் இறங்கி நட்டு வைத்திருந்த நாற்றுகளை மேய்ந்தது ஒரு குட்டி ஆடு.
எங்கிருந்தோ ஒரு குரல், ஏய் வயல்ல யாருடா ஆடு மேய்க்கிறது? இதைக்கூட ஒழுங்கா செய்யாதவன் எதுக்கு இந்த வேலைக்கு வந்த… முதல்ல ஆட்டுக்குட்டியை வெரட்டுடா… என்றது. பதறிப்போன அவர் தன் கையில் இருந்த பெரிய கம்பால் ஓங்கி அடித்தார். வலி தாங்க முடியாத ஆட்டுக்குட்டி வாய்விட்டு அலறியபடி ஓடியது.
இதையெல்லாம் பக்கத்து வயலில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கொக்கு, வயலுக்கு வேலியே போடல! இதை தின்னக்கூடாதுன்னு அந்த ஆட்டுக்குட்டிக்குத் தெரியல! யாரும் சொல்லியும் கொடுக்கல! ஆனா தண்டனை மட்டும் உடனே கிடைச்சுடுச்சு… வலியும் வேதனையும் வாயில்லாத சின்னப் பிராணிக்கு! என வருந்தியபடி கொக்கு சொன்னது…
“தண்டனை தரும் முன் சிந்திக்கணும்…
தன் தவறை முதலில் திருத்திக்கணும்”
கதை: மு.கலைவாணன்
ஓவியம்: மு.க.பகலவன்