ஆறைக் காணோம்…
சிறுவர் கதை
கலவை சண்முகம்
ஆற்று மணலிலே விளையாடுவது என்றால் ஆகாச ராசாவுக்கு ரொம்பவும் பிடிக்கும். அந்தி சாயும் நேரத்தில் மஞ்சள் வானத்தைக் கண்கொட்டாமல் பார்ப்பார். மேற்குத் திசையில் சூரியன் மறைவதை வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருப்பார். அரசியை அழைத்துக் கொண்டு மாலை நேரங்களில் தவறாமல் ஆற்றங்கரைக்குச் சென்றுவிடுவார். எதிரும் புதிருமாக இருவரும் உட்கார்ந்து-கொண்டு ஆற்று மணலை நீளமாகக் குவிப்பார்கள். குவித்து வைத்த மணலின் மீது ஒருவர் தனது இரண்டு கைகளையும் கோர்த்தபடி படியவைக்க இன்னொருவர் ஒரு குச்சியைக் குவித்து வைத்த மணலுக்குள் ஒளித்து வைப்பார். படியவைத்த கையை எடுத்துவிட்டு அவர் ஒளித்து வைத்த குச்சியைக் கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் மறைத்தவரே அதை எடுத்து மற்றவர் கைகளில் மணலை நிரப்பி அதிலே அந்தக் குச்சியை நட்டு கண்களைத் தனது இரண்டு கைகளாலும் மூடி அவரை நெடுந்தூரம் நடத்திச் சென்று எங்காவது புதர் மறைவிலே மணலைக் கொட்டச் செய்து மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே கொண்டுவந்து கண்களை மறைத்த கைகளை விலக்கிக் கொள்வார். கொட்டியவர் அந்த இடத்தைக் கண்டுபிடித்து மணலோடு இருக்கும் குச்சியைக் கண்டுபிடித்துக் கொண்டு வரவேண்டும். இதுதான் விளையாட்டு மன்னனும் அரசியும் ஆட்டத்துக்குத் தயாரானார்கள்.
குவித்து வைத்த மணலில் அரசி குச்சியை மறைத்து வைத்தாள். மன்னனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் கைகளில் மணலை நிரப்பி, மறைத்து வைத்த குச்சியை எடுத்து அதிலே செருகி மன்னவனின் கண்களை மகாராணி தன் பூபோன்ற கைகளால் மூடி நீண்டதூரம் அழைத்துச் சென்று மணலைக் கொட்டச் செய்தாள். மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே அழைத்து வந்து, கண்களை மூடிய கைகளை விலக்கிக் கொண்டாள். ஆகாச ராசா குச்சியைத் தேடிப் போனார். அரசி ஆற்றங்கரையிலே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளோடு குழந்தையாக விளையாடினாள்.
அது வெறும் குச்சியல்ல. அந்தக் குச்சிக்கு ஒரு பாரம்பரியம் உண்டு. தங்கக் குச்சி அது. பரம்பரைப் பரம்பரையாக இருந்து வருகிறது அது. ஆகாச ராசாவின் தாய் தந்தையர், அவர்களுக்குத் தாய் தந்தையர் காலத்திலிருந்து இருந்து வருகிறது அக் குச்சி. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி விளையாடிய குச்சி என்று ஆகாச ராசா அதை அடிக்கடி மெச்சுவார். பத்திரமாக வைத்திரு. நமது பேரப் பிள்ளைகள் அவர்களது பேரப் பிள்ளைகளுடன் விளையாடுவதை நாம் பார்க்க வேண்டும் என்பார் அரசியிடம். அவள் சிரிப்பாள்.
குச்சியைத் தேடிச் சென்ற ஆகாச ராசாவுக்கு அது சீக்கிரமே கிடைத்துவிட்டது. அரசியை நோக்கி நடந்து வந்தார். திடீரென்று அவர் அந்த ஆற்று மணலிலே உட்கார்ந்து கையிலிருந்த குச்சியினால் அங்கும இங்கும் குத்திக் குத்திப் பார்த்தார். நெடுநேரமாகியும் மன்னனைக் காணாததால் அரசி அவரைத் தேடிக் கொண்டு வந்தாள். அவர் குச்சி கொண்டு ஆறு மணலைக் குத்திக்-கொண்டிருப்பதைப் பார்த்து என்ன செய்கிறீர்கள் என்றாள். பதில் எதுவும் கூறாமல் மகாராணியை அழைத்துக்கொண்டு அரண்மனை திரும்பிய ஆகாசராசா உடனே மந்திரியை அழைத்து தன்னிடமிருந்த குச்சியைப் போல பல லட்சம் குச்சிகள் உடனே தயாராக வேண்டும் என்று ஆணையிட்டார். தங்கத்தினால் அல்ல இரும்பினால்.
சில நாட்களுக்குள் குச்சிகள் தயாராகின. குடும்பத்திற்கு ஒரு குச்சி வீதம், நாட்டு மக்கள் அனைவருக்கும் கொடுத்து ஆற்று மணலிலே குத்தி அது எத்தனை ஆழம் உள்ளே போகிறது என்று கணக்கிட்டுக் கொண்டு வந்து காட்ட வேண்டும் என்பது மன்னனின் உத்தரவு. ஊசி முனை அளவு இடம்கூட விடுபடக் கூடாது என்று தடாலடியான கட்டளை. குடும்பம் குடும்பமாக மக்கள் அடுத்த நாளே அரண்மனைக்கு வர ஆரம்பித்துவிட்டனர். குச்சி எவ்வளவு ஆழம் மணலில் இறங்கியது என்று கூறினார்கள். ஒரு குச்சிகூட முழுவதும் இறங்கவில்லை என்று தெரியவந்தது. இவ்வளவுதான் இறங்கிற்று. அவ்வளவுதான் இறங்கிற்று என்று அவ்வளவு பேரும் கூறினார்கள். ஆகாசராசாவுக்கு கோபம் கோபமாக கொப்பளித்துக் கொண்டு கிளம்பியது. அப்படிப்பட்ட நேரங்களில் அவர் ஆகாசத்துக்கும் பூமிக்குமாகக் குதிப்பார். அதனால்தான் அவருக்கு ஆகாசராசா என்றே பெயராயிற்று.
உறக்கம் பிடிக்காமல் புரண்டு புரண்டு படுத்திருந்த அவரிடம் அரசி என்னாயிற்று உங்களுக்கு என்று விசாரித்தாள். ஆற்றுமணல் அத்தனையும் மொத்தமாக ஆற்றை விட்டுப் போய்க் கொண்டிருக்கிறது என்று அவர் அலறினார். ஆறைக் காணோம்… ஆறைக் காணோம் என்று அழுது புலம்பினார் ஆகாசராசா.
உனக்குத் தெரியாது அரசி! சிறுபிள்ளையிலிருந்து நான் அந்த ஆற்றுமணலில் விளையாடிக் கொண்டிருக்கிறேன். ஆற்றில் உள்ள ஒவ்வொரு மணலும் எனக்கு அத்துப்படி. ஒருமணல் குறைந்தால்கூட எனக்குத் தெரியாமல் போகாது. அப்படியிருக்க நான் எப்படி ஏமாந்து போனேன் என்று எனக்கே தெரியவில்லை. நாமிருவரும் ஆறு மாத காலம் வெளிநாடுகளில் பயணம் செய்தது தவறாகப் போய்விட்டது. ஆறைக் காணோம். ஆறைக் காணோம் என்று மீண்டும் மீண்டும் அலறினார் ஆகாசராசா.
என்ன உளறுகிறீர்கள்? ஆறைக் காணோமா? உங்களுக்கென்ற கிறுக்கா பிடித்திருக்கிறது? என்று அரசி மன்னரை உலுக்கினாள்.
இல்லை. இல்லை. எனக்குக் கிறுக்குப் பிடிக்கவில்லை. இந்நாட்டின் அமைச்சருக்குத்தான் கிறுக்குப் பிடித்திருக்கிறது. இல்லாவிட்டால் எதுவும் தெரியாமல் வெறுமனே இப்படி இருப்பாரா? என்று கொதித்தபடி அமைச்சரை உடனே வரச் சொன்னார் ஆகாசராசா. அவரும் ஓடிவந்தார். ஆற்றைக் காணோம். ஆறைக் காணோம் என்று அலறிக் கொண்டிருந்த மன்னரைப் பார்த்ததும் அவருக்கு அல்லு கழன்றுவிட்டது.
அமைச்சரே! இதை ஏன் என்னிடமிருந்து மறைத்தீர்கள்? எத்தனைக் காலமாக இப்படி நடக்கிறது? மன்னர் கேட்க, அமைச்சர் விதிர்விதிர்த்துப் போனார்.
மன்னா! தங்களிடம் உடனே தெரிவிக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், தாங்கள் நேற்று ஆற்றங்கரையில் இருந்து திரும்ப வெகுநேரமாகிவிட்டது.
அது என்ன நேற்று? இதற்கு முன்னால் என்ன செய்து கொண்டிருந்தீர்? மன்னர் ஏன் இப்படிச் சம்பந்தா சம்பந்தமில்லாமல் கேட்கிறார் என்று நினைத்தார் அமைச்சர். நேற்றுதானே மன்னரின் மாமனாரும் மாமியாரும் வந்தார்கள். அதை எப்படி அதற்கு முன்னால் தெரிவிப்பது?
மன்னா! அது வந்து… அது வந்து… மன்னிக்க வேண்டும். அவர்கள்தான் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். தூக்கம் கெட்டுப் போகும் என்றார்கள். ஓ! இதில் நீங்களும் உடந்தையா? இதற்கு என்ன தண்டனை தெரியுமா? ஒரு நாட்டின் அமைச்சராய் இருந்துகொண்டு இப்படியா? போகிற போக்கைப் பார்த்தால் மொத்தமும் காணாமல் போய்விடும் போல் இருக்கிறதே…
அய்யோ… ஆறைக் காணோமே… ஆறைக் காணோமே…
இல்லை மன்னா! பார்த்தவுடன் நாவில் எச்சில் ஊறியது. அதனால்தான் மறைத்துவிட்டேன். அதுகூட நமது சேனாதிபதி கொடுத்த தைரியத்தில்தான். ஆறிலே இரண்டை அவர் பிடுங்கிக் கொண்டது மட்டுமில்லாமல் அபாண்டமாக உங்களிடம் என்னைப் போட்டும் கொடுத்துவிட்டார்.
மன்னரின் மாமனாரும் மாமியாரும் இதைக் கேட்டுகொண்டே வந்தனர். விடுங்கள் மாப்பிளே! மக்கன்பேடா நன்றாக இருந்திருக்கிறது. அதுதான் பாவம் மந்திரி மறைத்துவிட்டார். இருப்பதைச் சாப்பிடுங்கள். அடுத்த முறை வரும்போது அண்டா நிறைய செய்துகொண்டு வருகிறோம்! என்ற அவர்களைப் பார்த்து ஆகாசராசா தலையிலே அடித்துக் கொண்டார். இப்படியே மணல் கொள்ளை போனால் கடைசியில் ஆறே காணாமல் போய்விடுமே என்று நான் கலங்கிக் கொண்டிருக்க இவர்களோ ஆற்காடு மக்கன்பேடாவை நினைத்துக் கொண்டு இருக்கிறார்களே என்று இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டார் ஆகாசராசா. மன்னா, அப்படியென்றால், ஆற்றைக் காணோமே என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். ற் எனும் ஒற்றை விட்டுவிட்டு எங்களைக் குழப்பினால் எப்படி? என்றார் அமைச்சர்.
ஒற்றையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். நல்லதொரு ஒற்றர் கூட்டத்தைக் களமிறக்கி ஆற்று மணலைக் கொள்ளையடிக்கும் கூட்டத்தைக் கண்டுபிடிக்க ஆணையிடுங்கள் என்றார் மன்னர் தீர்க்கமாக!
கணிதப் புதிர்
சுடோகு