நீரில் விழுந்த நிலா!
பிஞ்சுக் கதை
உமையவன்
கயலுக்கு ரொம்ப நேரம் ஆகியும் தூக்கம் வரவே இல்ல. என்ன பண்றதுன்னு தெரியாம படுக்கையில் இருந்து எழுந்து வீட்டுக்கு வெளிய வந்தாள்.
அப்படியே நடந்து வீட்டுக்கு அருகில் இருந்த குட்டைக்குச் சென்றாள். அங்கு சென்ற கயல் அப்படியே அதிர்ந்து போனாள்.
ஆமா, வானத்திலிருந்து நிலா தவறி குட்டையில் விழுந்து கிடந்தது. கயலுக்கு நிலான்னா அவ்வளவு பிரியம். குட்டைக்குள் நிலாவைப் பார்த்த உடனே ரொம்ப ஒடஞ்சு போயிட்டா.
அம்மா சோறூட்டும் போதெல்லாம் வானத்தில் உள்ள நிலாவை காட்டித்தான் ஊட்டுவார். இப்படி குட்டைத் தண்ணீருக்குள்ள கிடக்கும் நிலா மேல அவளுக்குப் பரிதாபம் வந்திருச்சு.
நிலாவுக்கு நீச்சல் தெரியாததனாலதான் அதனால குட்டையிலிருந்து நீந்திக் கரையேற முடியவில்லை என நினைத்த கயல், நிலாவை எப்படியாவது கரையேற்றிவிட திட்டம் போட்டாள்.
மெல்ல குட்டைக்குள் இறங்கி நிலாவை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். இதனால் ஏற்படும் சிற்றலைகள் நிலாவை மேலும், கீழும் அசைத்தன.
மெல்ல நடந்துபோன கயல் ஒரு வழியா நிலாவை நெருங்கிவிட்டாள். நிலாவிடம் சென்றவுடன் கயலுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. வெகுதூரத்தில் பார்த்து இரசித்தவள் அதன் அருகிலேயே இருப்பது அவளுக்கு அவ்வளவு ஆனந்தத்தைக் கொடுத்தது.
கொஞ்ச நேரம் ஆசைதீர நிலாவைப் பார்த்து இரசித்த கயல், இப்போது அதை கரைசேர்க்க ஆயத்தமானாள். தனது இரண்டு உள்ளங்கை-களையும் ஒன்று சேர்த்து, தண்ணீருக்குள் கையைவிட்டு நிலாவை மேலே தூக்கினாள்.
ஆனால், கயலின் இந்தத் திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. அவளால் நிலாவை முழுமையாகத் தனது கைகளால் தூக்க முடிய-வில்லை. மனம் வருந்திய கயல் அடுத்தது என்ன செய்யலாம் என யோசித்தாள்.
எப்படியாவது நிலாவைக் கரைசேர்த்துவிட வேண்டும் என்பதில் அவள் தீர்க்கமாக இருந்தாள்.
நீண்ட நேரம் யோசித்தவளுக்கு ஒரு புது யோசனை பிறந்தது. இதே குட்டையில் அவளது தோழிகளோடு கப்பல் விட்டு விளையாடும்பொழுது அந்தக் கப்பலை முன்செலுத்த துடுப்பைப் போல சிறு குச்சியைக் கொண்டு தண்ணீரை பின்நகர்த்தி கப்பல் முன்நோக்கி செல்லும் அதே பாணியில் அங்கிருந்த சிறு குச்சியை எடுத்து நிலாவின் அருகில் உள்ள தண்ணீரை பின்னுக்குத் தள்ள ஆரம்பித்தாள். அவளது இந்த முயற்சி வீண் போகவில்லை. நிலா மெல்ல மெல்ல கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
கயலுக்கு இப்பொழுது அவ்வளவு ஆனந்தம். தனது முயற்சியால் நிலா கரையேறி தனது வீட்டுக்குச் சென்றுவிடும். இதனை விடிந்தவடன் நண்பர்களிடம் சொல்லலாம் என்ற ஆசையோடு மேலும் மேலும் நகர்த்திக் கொண்டிருந்தாள்.
தண்ணீரின் பின் நகர்வு, நிலாவை கரைநோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச தூரம்தான் நிலா கரையை அடைந்துவிடும்.
கரையை நெருங்க நெருங்க கயல் மனதில் துள்ளல் அதிகமானது. நீரின் நகர்வில் அசையும் நிலா அவளிடம் ஏதோ கதை பேசுவது போலவே இருந்தது.
நிலாவிடம் இவள் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க அது தலையாட்டிக் கேட்டது போலவே இருந்தது. இதோ நிலா கரையை நெருங்கப் போகிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அது வானத்திற்குச் சென்றுவிடும் என்ற ஆவலோடு இருந்தாள்.
நிலா குட்டையின் கரையைத் தொட்டவுடன் கயல் குட்டையை விட்டு மேலேறி வானத்தைப் பார்த்தாள். வானத்தில் அழகாக நகர்ந்து கொண்டிருந்தது நிலா.
அய்! நிலா வானத்துக்குப் போயிடுச்சு என்று துள்ளிக் குதித்து மகிழ்ந்தாள் கயல்.
ஆனால், அவளின் மகிழ்வு அவ்வளவு சீக்கிரம் கரைந்துபோகும் என அவள் நினைக்கவில்லை. ஆம்! குட்டையைப் பார்த்தவுடன்தான் தெரிந்தது நிலா மீண்டும் குட்டைக்குள் விழுந்து கிடந்தது.
இப்பொழுது கயலுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. குட்டையின் அருகிலேயே கன்னத்திற்கு கைகொடுத்தபடி நிலாவையே பார்த்துக் கொண்டு சோகமாக அமர்ந்திருந்தாள்.
கயலை வீடு முழுக்கத் தேடி, காணவில்லை என்று வெளியே வந்து, குட்டையின் அருகில் அமர்ந்திருப்பது தெரிந்த உடனே வேக வேகமாக கயலிடம் வந்தார் அவளின் அப்பா.
என்னாச்சு கயல், இந்த நேரம் தூங்காம இங்க என்ன பன்ற? என்றவரிடம்,
நடந்ததையெல்லாம் ஒன்றுவிடாமல் ஒப்பித்து முடிந்தாள் கயல்.
அவளின் அப்பாவுக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. கயலைத் தூக்கி தோல்மேல் அமரவைத்து,
இப்போது வானத்தைப் பார் என்றார்.
நிலா மீண்டும் வானத்துக்குப் போய்விட்டது
அப்பா, குட்டையில் ஒரு நிலா இருக்கிறது? என்றாள்.
குட்டைக்குள் எல்லாம் நிலா விழவில்லை. அது வானத்தில்தான் இருக்கிறது. அதன் பிம்பம்தான் குட்டைத் தண்ணீரில் தெரிகிறது என்றார்.
ஓ! அப்படியாப்பா, இது இத்தனை நாளா எனக்கு தெரியாது என்ற பெருமூச்ச விட்டாள்.
நிலா வானத்தில்தான் இருக்கிறது என்ற நிம்மதியில் அப்பாவோடு தூங்கச் சென்றாள் கயல்.
என்ன குழந்தைகளே, இனி தண்ணீரில் நிலாவைப் பார்க்கும்போது உங்களுக்கும் என்னைப் போல கயல் ஞாபகம்தானே வரும்.