அன்பு
அன்பு என்பது அனைவரின் மனதிலும்
அடியினில் சுரந்திடல் தெளிவாகும்!
இன்பம் கனிவுடன் இரக்கமும் கருணையும்
இணைந்தலை* புரண்டது வெளியாகும்!
பண்பு பணிவுடன் பரிவெனப் படுகிற
பயிர்க்கது பசும்உரத் தழையாகும்!
உண்ண உணவுடை ஒருவருக் கிலையெனில்
உதவுதல் அதன்முதல் விழைவாகும்!
துன்பம் தனிலெவர் துடிப்பினும் தனதிமை
துடிப்பவை அதனிரு விழியாகும்!
தொண்டு உணர்வுடன் துடித்தெழுந் துடனதைத்
துடைப்பது அதன்தனி வழியாகும்!
அன்பே உயர்திணை அஃறிணை உயிரெதும்
அறிந்துடன் பழகிடும் மொழியாகும்!
அன்பே உலகினில் அடிதடி ஒழிந்திருள்
அகன்றிட எழுங்கதிர் ஒளியாகும்!
தளவை இளங்குமரன்
* இணைந்தலை = இணைந்து + அலை என்னும் இரண்டு சொற்கள் புணர்ச்சி விதியின் அடிப்படையில் சேர்த்து எழுதப்பட்டுள்ளன. இதே போல் இப்பாடலில் சேர்த்து எழுதப்பட்டுள்ள சொற்களை உங்களால் அடையாளம் காண முடிகிறதா என்று பாருங்கள், பிஞ்சுகளே!