பெரியார் பிஞ்சுகள் மாநாடு
பெரியார் பிஞ்சுகள் மாநாடு
பெயருக்குப் பொருந்தச் சீரோடு
அறியா மையினை வேரோடு
அகற்றிடப் பிறந்த மாநாடு!
உலகம் இதுவரை காணாத
ஒப்பற்ற முதலாம் மாநாடு!
தலைமை தாங்கி ஆசிரியர்
தாத்தா நடத்திய மாநாடு!
திண்டுக் கல்லில் செப்டம்பர்
தேதி இருபத் தொன்பதனில்
கண்டு களிக்கும் அறிவியல்கண்
காட்சியில் தொடங்கிய மாநாடு!
ஆடல் பாடல் நாடகமும்
அடுத்தே வினாடி வினாவிடையும்
ஓடிட மதிய உணவுக்குப்பின்
ஊக்கமாய்த் தொடர்ந்த மாநாடு!
அருகிடும் தமிழ்க்கலை வில்லிசையும்
அழகிய பொம்ம லாட்டமதும்
அரங்கினில் இருந்தோர் அனைவரது
அகங்களும் கவர்ந்த மாநாடு!
கார்முகில் இடியெனும் முழக்கமுடன்
கரங்களில் ஏந்திய கொடிகளுடன்
ஊர்வலம் கிளம்பி மாலையிலே
ஊரினைக் கலக்கிய மாநாடு!
இனமுர சானநம் சத்தியராஜ்
இதமுடன் ஆற்றிய சொற்பொழிவால்
மனங்களில் படிந்துள மாசுகளாம்
மடமைகள் துடைத்த மாநாடு!
இறுதியில் பிஞ்சுகள் பிரகடனம்
என்கிற வீர மணித்தாத்தா
பெருமித உரையுடன் முடிவுற்ற
பெரியார் பிஞ்சுகள் மாநாடு!
– தளவை இளங்குமரன்