சின்னச் சின்னக் கதைகள்
பெருமை
ஆண் சிங்கம் பிடரியைச் சிலிர்த்தபடி கர்ஜித்து விட்டு…
நான் காட்டுக்கே அரசன்! அரிமா நோக்கு என என்னைத்தான் சொல்வார்கள். என் போல் பிடரி உனக்கு இல்லை _ பெண் சிங்கத்திடம் தன் பெருமையை எடுத்துச் சொன்னது.
ஆண் மயில் தோகையை விரித்து ஆடியபடி…
தோகையே என் அழகு… அதுபோல் உனக்கில்லை. மயில் என்றாலே நான்தான் நினைவுக்கு வருவேன் _ பெண் மயிலிடம் தற்பெருமை பேசியது.
தன் துதிக்கையை உயர்த்தி பிளிறியபடி பெண் யானையிடம் ஆண் யானை சொன்னது.
என் தந்தம் போல் உனக்கு வளராது. ஆண் என்பதின் அடையாளம் இது.. அலட்டிக் கொண்டது.
வாலும், கொண்டையும் எனக்கிருப்பது போல் உனக்கில்லை. நானே வீரத்தின் அடையாளம். உனக்கு அந்தத் தகுதியில்லை _ கோழியின் முன் கொக்கரித்து நின்றது சேவல்.
இதையெல்லாம் கவனித்துக்கொண்டே வந்த தாய்ப்பசு சொன்னது, வெளித் தோற்றத்தை வைத்து தற்பெருமை பேசும் உங்களையெல்லாம் தோற்றுவித்ததே இந்தப் பெண் இனம்தான். அதை மறந்துவிடாதீர்கள்.
தோற்றத்தில் இல்லை பெருமை!
தோற்றுவிப்பதில்தான் இருக்கிறது பெருமை!
கதை: மு.கலைவாணன்
ஓவியம்: மு.க.பகலவன்