காரணமின்றி ஏற்காதீர்கள்!
அதிகமாக மூச்சிவிட்டால் ஆயுள் குறையுமா?
நாம் சுவாசிக்கும் மூச்சை ஆழ்ந்து இழுத்து சுவாசிக்காமல் மேலோட்டமாக சுவாசித்தால் மூச்சை அடிக்கடி இழுத்து விட வேண்டி வரும். அவ்வாறு மூச்சு இழுத்து விடப்பட்டால் ஆயுள் குறையும் என்று கூறுவர். அதற்குக் காரணம் கூறுபவர்கள் ஒருவனுக்கு இத்தனை முறைதான் மூச்சு விட வேண்டும் என்று இறைவன் கணக்கு வைத்துள்ளான். அடிக்கடி சுவாசிப்பதன் மூலம் விரைவிலே அக்கணக்கு முடிந்து விடுகிறது என்கின்றனர். காலஞ் சென்ற கிருபானந்த வாரியார் அவர்கள்கூட சிதம்பரத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது இக்கருத்தை வெளியிட்டார். இறைவன் கொடுத்த மூச்சுக் கணக்கை எவ்வளவு மெதுவாக செலவிடுகிறோமோ அவ்வளவுக்கு ஆயுள் கூடும் என்பர்.
இது முற்றிலும் தவறாகும். மூடநம்பிக்கையின் விளைவாகும். எந்த மனிதனுக்கோ அல்லது சுவாசிக்கும் உயிரினங்களுக்கோ இத்தனை முறை மூச்சுக் காற்றுகள் என்று யாராலும் கணக்கு வைக்கப்படுவதில்லை. மூச்சு என்பது அவரவர் தேவைக்கு உள்ளிழுக்கப்படுவது; வெளியிடப்படுவது.
மூச்சு உள்ளிழுத்து விடுவதில் ஓர் அறிவியல் உண்மை உள்ளது. அதைத்தான் இவர்கள் தவறாகச் சொல்கிறார்கள்.
மூச்சை உள்ளிழுத்து வெளியிடுவதில் இரு வகையுண்டு. ஒன்று ஆழ்ந்து உள்ளிழுத்து பின் வெளியிடுவது. மற்றொன்று விரைவாக உள்ளிழுத்து விரைவாக வெளியிடுவது.
ஆழ்ந்து உள்ளிழுத்து மூச்சை வெளியிடும்போது உடலுக்குத் தேவையான-இரத்தத்திற்குத் தேவையான உயிர் வளி (ஆக்ஸிஜன்) நிறைய கிடைக்கும். இதனால் இரத்தம் சுத்தமடைந்து உடல் புத்துணர்ச்சியும் நலமும் பெறும்.
மேலோட்டமாக மூச்சு விடுவதால் ஆக்ஸிஜன் போதிய அளவிற்குக் கிடைப்பதில்லை; நுரையீரலும் அதிகம் விரிந்து கொடுப்பதில்லை. இதனால் இரத்தத்திற்குத் தேவையான ஆக்ஸிஜன் போதிய அளவு கிடைக்காது. அதன் விளைவாய் உடல்நலம், உடல் உற்சாகம் குன்றும்.
நாம் மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியிட்டுப் பார்த்தால் நம் உடலுக்கே ஒரு புத்துணர்ச்சியும் புதுத் தெம்பும் கிடைப்பதை உணர முடியும். எனவே, ஆழ்ந்த சுவாசம் ஆயுளை வளர்க்கும் என்பதுதான் உண்மையே தவிர, மூச்சுக் கணக்கு என்பது மூடத்தனம்.
உண்டி சுருக்கல் பெண்டிற்கழகா?
‘உண்டி சுருக்கல் பெண்டிற்கு அழகு’ என்று ஆணாதிக்கச் சமுதாயம் இலக்கணம் வகுத்தது. போதிய அளவு உண்டால் அவள் வலுப் பெற்றுவிடுவாள். அவளை அடிமைப்படுத்தி அடக்குவதில் சிக்கல் வரும் என்ற குறுகிய நோக்கில் செய்யப்பட்ட ஏற்பாடு இது.
இப்படி பெண்ணின் வயிற்றிலும் வலுவிலும் அடித்தவர்கள், பண்பாடு என்ற பெயரில் எஞ்சியதை (மீதம் உள்ளதை) உண்ண வேண்டும் என்ற ஏற்பாட்டையும் செய்தனர்.
மனிதன் உயிர் வாழ அடிப்படையானது உணவு. அது அவரவர் தேவைக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப வேண்டும் போது உண்ணப்பட வேண்டியது. இதில் ஆணுக்கு முழு உரிமையுண்டு. ஆனால் பெண்ணுக்கு அதில்கூட உரிமையில்லை. குழந்தைகள், கணவன், பெரியவர்கள் உண்டபின், எஞ்சியதை உண்ண வேண்டும். உணவு இல்லை என்றால், தண்ணீரைக் குடித்துவிட்டுப் படுத்துவிட வேண்டும். அப்படி செய்பவள் பண்பாடுடைய நல்ல பெண் என்று பாராட்டும் பட்டமும் சூட்டினர். புகழ்ந்தே புதைகுழியில் வீழ்த்தினர். அவளும் போலிப் பெருமையால் இழப்பு தெரியாமல், இதமாக ஏற்றே இழிந்து போனாள்.
மீதமுள்ளதை பெண் உண்ண வேண்டும். அதுவே பண்பாடு என்பது அசல் தப்பு. ஆண்களின் வாதப்படி பார்ப்பினும், வலுவற்றவளாக்கப்பட்டு வாழும் பெண்ணுக்கல்லவா முதலில் உணவளிக்க வேண்டும். தாங்கும் சக்தியுள்ள ஆணல்லவா இறுதியில் உண்ணவேண்டும். உடற்கூற்றின்படியும், தார்மீகப்படியும் அதுதானே சரி! எனவே, பெண் எஞ்சியதை உண்ண வேண்டும் என்பது பண்பாடு என்ற எண்ணமும் தப்பாகும்.
இன்றைக்கு ஆண்களைப் போலவே பெண்கள் அனைத்துத் துறையிலும் சாதிக்கின்றனர். குத்துச் சண்டையில் ஆண்களையே பெண்கள் வீழ்த்துகின்றனர். குறைவாக உண்டால் இவ்வாறு சாதிக்க முடியுமா? எனவே, பெண்கள் குறைவாக உண்ண வேண்டும் என்பது குற்றம். தேவைக்கு ஏற்ப உண்ண வேண்டும் என்பதே சரி!
-சிகரம்
கணிதப் புதிர்
சுடோகு