பெரியாரியலின் நாற்றுகள்!
சிறப்புத் தொகுப்பு
(முதல் பகுதி)
உலக வரலாற்றில் முதல்முறையாக சமுதாய சீர்திருத்த எண்ணம் கொண்ட இயக்கத்தின் அடுத்த தலைமுறையினர் பங்கேற்ற பெரியார் பிஞ்சுகள் மாநாடு திண்டுக்கல்லில் செப்டம்பர் 29, 2018 அன்று நடைபெற்றது. ஆகஸ்ட் 18-இல் நடத்தப்பட்டிருக்க வேண்டிய மாநாடு தள்ளிவைக்கப்பட்டு நடைபெற்றாலும், மிகுந்த எழுச்சி, குதூகலம், கொண்டாட்டத்துடன் நடைபெற்றது. விரிவான செய்திகள் அடுத்த இதழில்! சில வியப்பான செய்திகள் மட்டும் இவ் விதழில்!
திண்டுக்கல்லில் வசிக்கும் மக்கள் 2018 செப்டம்பர் 29 ஆம் தேதியை மறக்கவே மாட்டார்கள். குறிப்பாக பெரியார் பிஞ்சுகளின் மாநாட்டைக் காண நேர்ந்தவர்கள்! காரணம், பெரியவர்களே தங்கள் உரிமைகளைப் பற்றிச் சிந்திக்காத போது, ஆடிப்பாடி விளையாடுகின்ற வயதுள்ள குழந்தைகள் சின்னக்கைகளில் சின்னச்சின்னச் கறுப்பு சிவப்புக் கொடிகளை ஏந்தியவாறு தங்களின் உரிமைகளை உரத்து முழங்கியவாறும், கடவுளை _ ஜாதியை மறுத்தும், மதத்தை எதிர்த்தும் கம்பீரமாக ஒலி முழக்கமிட்டவாறும் கட்டுப்பாட்டுடன் பேரணியில் சென்றது அவ்வளவு சுலபத்தில் மறக்கக்கூடியதா? இதே முழக்கங்களை பெரியவர்கள் முழங்கினாலே வியப்படைகின்றவர்களை இன்றைக்கும் காணலாமே! காவலுக்கு வந்த காவல்துறையினரும் அசந்துதான் போயினர். பரம்பரை பரம்பரையாக தயாராகும் பெரியாரியலின் நாற்றுகள் என்றால் சும்மாவா? இந்த மாநாடு எத்தனை பேரின் அறிவுக்கண்களை திறந்து விட்டிருக்குமோ? எதிர்காலம்தான் சொல்லும்!
மூணு மைக் உயரம் தான்!
அது ஆசிரியர் தாத்தாவிடம் குழந்தைகள் கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கும் நேரம். பக்கத்தில் இனமுரசு சத்யராஜ் அவர்களும் அமர்ந்திருந்தார். பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு உரிய பதில்களும் நகைச்சுவை கலந்தே வந்து கொண்டிருந்தன. அப்போது, 4 வயதே ஆன ஒரு சிறுவன் மேடையேறினான். அவனிடம் கேட்டு அவனது பெயர் அறிவன் பாக்யா என்று அறிவிக்கப்பட்டது. மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ச. பிரின்சு என்னாரெசு பெரியார் அச்சிறுவனை, தன் கையில் வைத்திருந்த மைக்கால் அளந்தார். தன்னிச்சையாக அரங்கத்தில் பெருத்த சிரிப்பொலியோடு கூடிய உற்சாகம் பெருக்கெடுத்தது. மூன்று மைக் உயரம்தான் இருந்தான்! எப்படிப்பட்ட காட்சி இது! எப்படிப்பட்ட இயக்கம்! எப்படிப்பட்ட தலைவர்! அந்தத் தலைவரிடம் இந்தச்சிறுவன் கேள்வி கேட்கிறான்! எப்படிப்பட்ட ஜனநாயகம்! இப்படிப்பட்ட ஒரு புறச்சூழலில்தான், ஏன் எல்லோரும் கறுப்புச் சட்டை போட்டிருக்காங்க? என்று அச்சிறுவன் கேட்டான். ஆசிரியர் தாத்தாவிடமிருந்து நகைச்சுவை கலந்த உற்சாகமான பதில் அவனுக்குக் கிடைத்தது. இறுதியில், அச்சிறுவன் அணிந்திருந்த வெள்ளைப் புள்ளிகள் கலந்த கறுப்புச் சட்டையைச் சுட்டிக் காட்டிய ஆசிரியர் தாத்தா, வளர்ந்தவுடன் நீயும் வெள்ளைப் புள்ளிகள் இல்லாத கறுப்புச் சட்டையை போட்டுக்கலாம். சரியா? என்றதும் அவனும் உற்சாகமாக தலையாட்டினான். இனமுரசு சத்யராஜ் உட்பட ஒட்டுமொத்த அரங்கமும் உற்சாகத்தின் உச்சிக்கே சென்றது.
அரங்கை அதிரவைத்த வினாடிவினா!
மாநாட்டின் ஒருபகுதியாக பெரியார் பிஞ்சுகளுக்கு வினாடிவினா போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொலைக்காட்சி பாணியில், திரையில் ஒளிர்ந்த வினாக்கள் போட்டியாளர்களிடம் கேட்கப்பட அவர்களும் பளிச் பளிச்சென்று சொல்லிக் கொண்டிருந்தனர். யாரும் எதிர்பாராத விதமாக அரங்கத்தில் அமர்ந்திருந்த பெரியார் பிஞ்சுகள் மேடையில் உள்ளவர்கள் பதிலைச் சொல்வதற்கு சற்று முன்பாகவே சரியான பதிலைச் சொல்லி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நெருக்கடியை எற்படுத்தினாலும், அந்தக்காட்சியால் பெரிதும் ஈர்க்கப்பட்ட பார்வையாளர்கள் ரசித்து, ருசித்து மகிழ்ந்தனர். அதில் பெரியார் திரைப்படத்தில் வருகிற ஒரு காட்சியை திரையிட்டுக் காட்டி கேள்வி கேட்டபோது சற்றுமுன் அரங்கத்தில் நுழைந்து அமர்ந்திருந்த பெரியாராக நடித்த இனமுரசு சத்யராஜும் அங்கு இருக்கவே, அந்தக் காட்சி வந்தபோது பெரியார் பிஞ்சுகளும், மற்றவர்களும் பெருத்த ஆரவாரம் செய்தனர். இனமுரசு சத்யராஜே வெட்கப்பட்டுவிட்டார். ஆசிரியர் தாத்தாவும் உற்சாகத்தோடு அந்த எழுச்சியை ரசித்தார்.
பெரியார் 1000 சிறப்பு வினாடி-வினா போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற பிஞ்சுகளுடன் ஆசிரியர் தாத்தாவும், இனமுரசு சத்யராஜ் அவர்களும்!
HYDE PARKகை நினைவூட்டிய வீதி நாடகம்!
நுழைந்தவுடன் பெரியார் பிஞ்சுகள் தங்கள் பெற்றோருடன் துறுதுறுவென்றும் மிகுந்த ஆர்வத்தோடும் வரிசையில் நின்று தங்களின் வருகையைப் பதிவு செய்து கொண்டிருந்ததால் காலை நேரப் பறவைகளின் இனிய கிலகிலா ஓசையைப்போல, சலசலவென்று பலரும் பேசுகின்ற பேச்சொலிகள் ஒருபக்கம்! பக்கத்திலேயே ஓர் அரங்கத்தில் அறிவியல் கண்காட்சி! அதில் பார்வையாளர்கள், அவர்களுக்கு விளக்கம் கொடுக்கும் பெரியார் பிஞ்சுகள்! மறுபக்கத்தில் சிந்துசமவெளி நாகரிகத்தின் வரலாற்றையும், திராவிட இயக்க வரலாற்றையும் அப்படியே படம் பிடித்துக் காட்டும் கண்காட்சி! ஒருபக்கம். பிஞ்சுகள் பங்கேற்கும் மாநாட்டின் அரங்கம் தயாராகி-விட்டதால், பதிவு செய்தவர்களை அரங்கத்தினுள் அழைத்துக் கொண்டிருக்கும் ஒலிபெருக்கியின் இடைவிடாத ஓசை! யாரும் ஓரிடத்தில் நிலைபெற்று நின்று கவனிக்க வாய்ப்பில்லாத அந்தச் சூழலில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக மாணவர்கள் அங்கே திராவிடர் இயக்க கொள்கைகளை வீதி நாடகமாக நடத்திக் காட்டிக்கொண்டிருந்தனர். தங்களை யார் கவனிக்கிறார்கள் என்பதைப்பற்றி அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை. ஆனாலும், அந்த கலை வடிவத்தினாலும், கருத்துகளினாலும் ஈர்க்கப்பட்ட சிலர் அங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அடேயப்பா! அந்தக்காட்சி லண்டனில் உள்ள பிசீஞிணி றிகிஸிரி-கை நினைவுபடுத்தியது. அங்கு குறிப்பிட்ட இடத்தில் நிரந்தர மேடை ஒன்று இன்றும் இருக்கிறது. அதில் ஒலிபெருக்கி வசதியும் செய்து வைத்திருப்பார்கள். அங்கு யார் வேண்டு-மானாலும், அவரவர்களின் கருத்துகளைப் பேசலாம்! வாய்ப்பிருப்பவர்கள் நின்று பார்க்கலாம். எப்படிப்பட்ட ஜனநாயகம் அது! அப்படிப்பட்ட ஜனநாயகம் மலரத்தான் இங்கு பெரியார் பிஞ்சுகள் திண்டுக்கல்லில் மாநாடு நடத்து-கின்றனர். இப்போதைக்கு இந்த அரிய காட்சியைப் பார்க்க லண்டன் செல்ல வேண்டாம் இங்கேயே பாருங்கள் என்பதைப் போலிருந்தது அந்தக்காட்சி!