குட்டிப் பெரியார் தாத்தாவும், பெரியார் பிஞ்சுகளின் பேரணியும்
புதுவையிலிருந்து வருகை தந்திருந்த தோழர் இராஜா, ஒன்றாம் வகுப்பு பயிலும் ஆறு வயதான தன் மகன் கி.இரா.பிரபாகரனுக்கு தந்தை பெரியார் வேடமணிவித்து (அச்சிறுவன் மூன்றடி உயரம் இருக்கக் கூடும்) பேரணியில் அழைத்துவந்தார். அந்தக்குட்டிப் பெரியாரின் உணர்வுகள் என்னவென்பதை அறிந்துகொள்ள இயலாதபடி அவர் அணிந்திருந்த மீசையும், தாடியும் அவரின் முகத்தையே மறைத்திருந்தது. ஆனால், குட்டிப் பெரியாரின் தந்தை ராஜாவின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிவது போல பளிச் சென்றிருந்தது. மிகவும் கவனத்தை ஈர்த்த அந்தக் குட்டிப் பெரியாரை அனைவரும் ஆவலோடு பார்த்து தங்களின் கைபேசிகளில் படமெடுத்துத் தள்ளினர்.
அந்தக் குட்டிப் பெரியாரை சிறிது தூரம் நடத்தி அழைத்து வந்த ராஜா, அந்தப் பிஞ்சுக் கால்கள் வலிக்குமே என்ற காரணத்தால் பெரியாரையே அலேக்காகத் தூக்கி தம் இரண்டு தோள்களிலும் வைத்துக் கொண்டார். இன்னும் வேறு சிலரும்கூட அந்தக் குட்டிப் பெரியாரை வாங்கித் தம் தோள்களில் வைத்து பறையிசைக்கு ஏற்ப மெலிதாக ஆடியபடியே ஊர்வலத்தில் உற்சாகத்துடன் வருகை தந்தனர். அடேயப்பா! எப்படிப்பட்ட உணர்வுகள்! மங்காது மாறாது இன்றும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் பெரியாரின் கொள்கைகளையே நாளும் சுமந்தபடி வாழ்ந்துவரும் அவர்களுக்கு ஏதோ பெரியாரையே தம் தோள்களில் தூக்கிச் சுமக்கும் பெருமிதம் போலும்! பெரியார் கல்வி வளாகத்திலிருந்து வருகை தந்திருந்த மாணவர்களில் சிலர் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி, கல்வி வள்ளல் காமராசர், அறிஞர் அண்ணா, கலைஞர், மேரிகியூரி, டாக்டர். முத்துலட்சுமி, கல்பனா சாவ்லா போன்ற தலைவர்கள், அறிவியல் முன்னோடிகளின் வேடமணிந்து பேரணியின் முன்வரிசையில் வருகை தந்தது அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.
தொடரும்…
மிகச் சிறப்பாக நடைபெற்ற மாநாட்டுச் செய்திகளை அவ்வளவு சுருக்கமாகச் சொல்லிவிட முடியுமா? பெரியார் பிஞ்சுகள் மாநாடு பற்றிய இன்னும் விரிவான பதிவுகள், மாநாட்டின் முக்கிய நோக்கமான பெரியார் பிஞ்சுகளின் பிரகடனம், அதற்கான காரணம் அனைத்து நிகழ்ச்சிகளின் விவரம், பெரியார் கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சிகள் என அடுத்த இதழிலும் மாநாட்டுச் சிறப்புப் பக்கங்கள் தொடரும்… (நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரியார் பிஞ்சுகளின் படங்கள் விடுபட்டிருந்தால் அருள்கூர்ந்து தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம்).
தொகுப்பு: உடுமலை வடிவேல்