உரிமை
சின்னச் சின்னக் கதைகள்
கிராமத்து ஓட்டு வீடு.
சிட்டுக்குருவி ஒன்று அந்த வீட்டின் உள்ளே ஓட்டு இடுக்கில் கூடு கட்டிக் கொண்டிருந்தது.
அதைப் பார்த்த பல்லி சிட்டுக்குருவியே! சிரமப்பட்டு ஏன் இந்த இடத்தில் கூடு கட்டிக் கொண்டிருக்கிறாய்? அங்கே பார்! ஒரு கூண்டு. அது உனக்காகத்தான்.
இந்த வீட்டுச் சிறுவன் அதிக விலை கொடுத்து அதை வாங்கி வைத்திருக்கிறான்.
மிகவும் அழகாக இருக்கும். அதில் உன்னை வைத்து வளர்க்க ஆசைப்படுகிறான் அந்தச் சிறுவன்.
அதனால் கூடு கட்டுவதை நிறுத்து. உனக்குத் தேவையான தீனியை தினமும் அந்தச் சிறுவனே தந்துவிடுவான். நீ தீனி தேடி அலைய வேண்டியதே இல்லை.
கவலை இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கலாம். சிறிய பறவையான நீ சிரமமின்றி வாழலாம் என்றது.
ஆயிரம் வசதிகள் அந்தக் கூண்டில் கிடைத்தாலும், நான் ஆசை ஆசையாய் என் போன்ற சிட்டுக் குருவிகளோடு சேர்ந்து சிறகு விரித்து வானில் வட்டமிடும் வாழ்க்கையை அந்தக் கூண்டு தராது. எனக்காக நான் கட்டும் சின்னக் கூடே சிறப்பானது என்று பதில் சொல்லி விட்டுப் பறந்தது.
சிட்டுக் குருவியின், உரிமை வாழ்வு என்ன என்பதை உணர்ந்தது பல்லி.
“கூண்டு” அடிமையின் சின்னம்.
“கூடு” விடுதலை எண்ணம்.
கதை: மு.கலைவாணன்
ஓவியம்: மு.க.பகலவன்