வெடிக்கத் தடை விதிக்கலாமா?
நமக்கான விழாக்களும், நாசகார பண்டிகைகளும்
சரவணா ராஜேந்திரன்
இவ்வாண்டு தீபாவளியின்போது வெடிகள் வெடிக்க காலக் கெடு விதித்தது உச்சநீதிமன்றம். பண்டிகை என்ற பெயரில் சுற்றுச்சூழலைச் சீர்க்கெடுக்கக் கூடாது என்று நீதி மன்றம் அறிவுறுத்தியது.
புத்தாண்டு மற்றும் அயல்நாடுகளில் நடக்கும் திருவிழாக்களில் வானவேடிக்கைகள் உள்ளதே என்று நீங்கள் கேட்கலாம்! உண்மைதான் சீனா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நியூயார்க், லண்டன் போன்ற நகரங்களில் விழாக்காலத்தின் போது வானவேடிக்கைகள் தான் நடக்கும். அங்கே தனிப்பட்டவர்கள் தங்கள் பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்க கடுமையான தடைகள் உள்ளன. ஆஸ்திரேலியாவில் வாழிடங்களில் அதிக சத்தமுள்ள பட்டாசுகள் வெடித்தால் அவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படும். ஓராண்டிற்கு அரசு சார்பில் கொடுக்கும் அனைத்துச் சலுகைகளும் நிறுத்தப்படும்.
அங்கே நடக்கும் வானவேடிக்கை நிகழ்வுகளில் மக்கள் இருக்கும் பகுதிகளுக்கு அப்பால், அதிக புகையை வெளியிடாத நவீன ரக வெடிகளைப் பயன்படுத்துவார்கள். மேலும் அப்பகுதியில் புகையைத் தூய்மை செய்யும் பெருங் கருவிகள் நிறுத்தப்படும். வானவேடிக்கை நிகழ்ந்த உடன் அந்த கருவிகளை இயக்கி வானவேடிக்கையின் போது வெளிப்பட்ட சிறிதளவும் புகையையும் உடனடியாக உள்ளிழுத்து தூய்மை செய்து விடுவார்கள்.
அதுபோன்ற கருவிகளை இந்தியாவிற்கு கொண்டுவந்தால் பட்டாசுகள் வெடிக்கும் வீட்டிற்கு 3 கருவிகள் வைக்கவேண்டும். அவ்வளவு நச்சுப் புகையும் தீபாவளி காலத்தில் வெடிக்கும் பட்டாசுகளால் வெளியிடப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிட்ட சாமியின் ஊர்வலத்தின் போது கலவரங்கள் ஏற்பட்ட செய்திகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆண்டாண்டுகாலமாக மதுரை சித்திரைத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் அமைதியாக நடக்கும் போது இந்த விழாவில் மட்டும் ஏன் கலவரம் ஏற்படுகிறது என்று சிந்திக்க வேண்டும்.
விழாக்கள் சமூகத்தின் ஒற்றுமை, அமைதி, மகிழ்ச்சி போன்றவற்றிற்காக கொண்டாடப்படுகிறது என்றபோது ஏன் கலவரங்கள் நடக்கவேண்டும்?
சாமிகள் பிறந்த நாள் என்ற பெயரில் நடக்கும் விழாக்கள் குறித்து நாம் கேள்வி எழுப்பவேண்டும். நாம் விரும்பிப் படிக்கும் தொலைக்காட்சிகளில் பார்க்கும் ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், சக்திமான் போன்ற கதைகளில் வரும் நாயகர்களுக்கு பிறந்தநாள் என்று கூறி அதை விழாவாக கொண்டாடினால் ஏற்றுக்கொள்வீர்களா?
அதே போல் ஒருகாலத்தில் புராணக்கதைகளில் வந்த நாயகர்களுக்கு இன்று ஜெயந்தி என்ற பெயரில் பிறந்தநாள் கொண்டாடுகின்றனர். இந்த விழாக்களில் பயங்கர ஆயுதங்களை ஏந்தி ஊர்வலமாக வருகின்றனர். அண்மைக்காலமாக மதவிழாக்கள் பெரும்பாலும் வன்முறையில் முடிகின்றன. விநாயகர் பிறந்த நாள் என்று சொல்லிக் கொண்டாடும் ஊர்வலங்களில் பெண்கள் செல்லவே முடிவதில்லை. அந்த அளவு அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்தியும் சாலையில் செல்லும் பெண்களைப் பார்த்து அசிங்கமான சைகைளைச் செய்தும் ஊர்வலமாக செல்கின்றனர். கடவுள் ஊர்வலத்திற்கு ஆயிரக்கணக்கில் காவல்துறை பாதுகாப்பு. அப்படி என்றால் அந்த கடவுள் என்ன செய்கிறார் என்ற கேள்வி உங்கள் மனதில் எழவேண்டும். மேலும் கடவுள் என்பது பிறப்பு இறப்பு அற்றது என்று கூறுகின்றனர். அப்படி என்றால் அந்தக் கடவுளுக்கு பிறந்த நாள் விழா எப்படி கொண்டாடுகின்றனர். அப்படியே பிறந்தநாள் விழா கொண்டாடினால் அந்தக் கடவுளர்களின் இறந்த நாள் நினைவு ஏன் அனுசரிக்கவில்லை என்று நாம் கேள்வி எழுப்ப வேண்டும்.
(தொடரும்)